தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோர் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது சட்டவிரோதம் என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று (ஜூன் 20) உத்தரவு பிறப்பித்துள்ளது.
ரூ.1,000 கோடி டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக கடந்த மே 16-ஆம் தேதி திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்தரன் ஆகியோர் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. Madras High Court stay ED proceedings
அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கைக்கு எதிராக ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், லக்ஷ்மி நாராயணன் ஆகியோர் விசாரித்து வந்தனர்.
கடந்த ஜூன் 18-ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அமலாக்கத்துறை தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜூ ஆஜராகி, “சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் படி, பணப்பரிமாற்றம் நடந்ததற்கான முகாந்திரம் இருந்தாலே அமலாக்கத்துறை சோதனை நடத்தலாம்.
டாஸ்மாக்கில் முறைகேடு நடந்ததாக 41 எஃப்.ஐ.ஆர்-கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையிலேயே ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரன் ஆகியோர் தொடர்பான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து நீதிபதிகள், “அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள ஆதாரங்களுக்கும், உங்களுடைய வாதங்களுக்கும் எந்தவகையிலும் ஒத்துப்போகவில்லை. வீட்டை சீல் வைப்பதற்கு அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளதா?” என்று கேள்வி எழுப்பினர்.
இதற்கு அமலாக்கத்துறை வழக்கறிஞர், ” சோதனைக்கு செல்லும் வீடுகள், அலுவலகங்கள் பூட்டியிருந்தால் அவற்றை சீல் வைப்பதற்கு அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டம் பிரிவு 17-ன் படி, பூட்டிய வீட்டை உடைப்பதற்கு அதிகாரம் உள்ளது. ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரன் வீடு, அலுவலகங்களில் ஒட்டப்பட்ட நோட்டீஸை திரும்ப பெற்றுக்கொள்கிறோம்.
மேலும், இந்த சோதனையின் போது கைப்பற்றப்பட்ட லேப்டாப் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் ஒப்படைக்கப்படும். இந்த வழக்கை மேற்கொண்டு விசாரிக்காமல் முடித்துவைக்க வேண்டும்’ என்றார்.
அப்போது நீதிபதிகள், “பூட்டிய வீடு மற்றும் அலுவலங்களில் சீல் வைப்பதற்கு அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை என்று தெரிந்தும் கூட, சீல் வைத்துள்ளீர்கள். இதை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது” என்று அதிருப்தி தெரிவித்தனர்.
இந்த வழக்கில் இன்று உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், “தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரது வீடு மற்றும் அலுவலகங்களில் சட்ட விதிகளை மீறி அமலாக்கத்துறை சோதனை நடத்தியுள்ளது.
இந்த வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த ஆவணங்களுக்கு எந்தவொரு ஆதாரங்களும் இல்லை. அதனால் இருவரது வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை மேற்கொண்டு சோதனை நடத்துவதற்கும், மேல் நடவடிக்கை எடுப்பதற்கும் இடைக்கால தடை விதிக்கப்படுக்கிறது. கைப்பற்ற ஆவணங்கள், லேப்டாப் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை அமலாக்கத்துறை ஒப்படைக்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர். Madras High Court stay ED proceedings
