காவலாளி அஜித்குமார் போலீசாரால் அடித்து கொல்லப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கக்கோரி தவெக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் இன்று (ஜூலை 4) மறுத்துள்ளது.
சிவங்கை மாவட்டம் திருப்புவனம் அடுத்த மடப்புரத்தை சேர்ந்த அஜித்குமார் போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில், காவல்துறையை கண்டித்து தவெக சார்பில் ஜூலை 6-ஆம் தேதி சென்னை சிவானந்தா சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், தங்களது ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்க காவல்துறைக்கு உத்தரவிடக்கோரி தவெக துணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
ஆனால், இந்த வழக்கு இன்னும் விசாரணைக்கு வரவில்லை. இதனையடுத்து இன்று காலை நிதிபதி வேல்முருகன் முன்னிலையில் தவெக தரப்பில், “அஜித்குமார் மரணத்தை கண்டித்து தவெக அறிவித்துள்ள ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்கக்கோரி காவல்துறைக்கு மனு அளித்தோம், ஆனால், காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி அளிக்கவில்லை. எனவே, ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை இன்றைய தினம் பிற்பகல் அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்” என்று முறையீடு செய்யப்பட்டது.
அப்போது நீதிபதி, “இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க என்ன அவசரம்?” என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு தவெக சார்பில், “திமுக ஆட்சிக்கு வந்தபிறகு 20-க்கும் மேற்பட்ட காவல் நிலைய மரணங்கள் நடந்துள்ளது. எனவே, இதுதொடர்பாக எங்களது எதிர்ப்பை தெரிவிக்கவும், மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தான் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கேட்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டது.
நீதிபதி வேல்முருகன், “இந்த விஷயத்தில் நீங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு பதிலாக, போக்சோ குற்றத்தில் யாரும் ஈடுபடக்கூடாது, மனைவியை கொடுமைப்படுத்தக் கூடாது என்பது தொடர்பாக விழிப்புணர்வு செய்யலாமே?
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் நடைமுறையில் இருந்த சட்டங்கள் தற்போதும் நடைமுறையில் உள்ளது. அந்த சட்டங்களை மாற்ற வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் நீங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தலாம்.
ஆனால், அஜித் குமார் உயிரிழந்தது தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரும் வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டிய தேவையில்லை. வழக்கமாக இதுபோன்று மனுத்தாக்கல் செய்யப்பட்டால், அது எண்ணிடப்பட்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும். அதுபோலவே இந்த மனுவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்” என்று தெரிவித்தார். Madras High Court refuses to urgent plea