பராசக்தி படத்தை வெளியிட தடையா?

Published On:

| By Kavi

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள பராசக்தி படத்தை வெளியிட தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.

நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா ஆகியோரது நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் ஆகாஷ் பாஸ்கரனின் டான் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள பராசக்தி திரைப்படம் ஜனவரி 10ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. ஜனநாயகன் படத்துக்கு போட்டியாக பராசக்தி களமிறங்குகிறது.

ADVERTISEMENT

இந்நிலையில், தனது செம்மொழி என்ற கதையை திருடி தயாரிக்கப்பட்டுள்ள இந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு மீண்டும் இன்று (ஜனவரி 2) விசாரணைக்கு வந்தது.

ADVERTISEMENT

அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் புருஷோத்தமன், ‘1965ம் ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து, ’செம்மொழி’ என்ற பெயரில் எழுத்தப்பட்ட கதை இது. 2010 ம் ஆண்டு தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கதையை வைத்துதான் பராசக்தி படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் கதாசிரியர் என்று சுதா கொங்கரா பெயரை பயன்படுத்தக் கூடாது. பராசக்தி படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்” என்று வாதிட்டார்.

இந்நிலையில் சுதா கொங்கரா மற்றும் டான் பிச்சர்ஸ் நிறுவனம் சார்பில் அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் மற்றும் விஜயன் சுப்பிரமணியன் ஆகியோர் ஆஜராகி வாதங்கள் முன்வைத்தனர்.

ADVERTISEMENT

அவர்கள், “மனுதாரரின் செம்மொழி கதைக்கும், பராசக்தி படத்தின் கதைக்கும் எந்த ஒற்றுமையும் இல்லை. படத்தின் கதையை திருடியிருப்பதாக மனுதாரர் கூறுகிறார். அதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை. பெரும் பொருட் செலவில் இந்த படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கு தடை விதித்தால் பெரும் இழப்பு ஏற்படும்” என்று தெரிவித்தனர்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, “ பராசக்தி படம் தயாரிப்பு குறித்து 2024 ஆம் ஆண்டு தகவல் தெரிந்தும் 2025 டிசம்பர் மாதம் தான் மனுதாரர் இந்த வழக்கை தாக்கல் செய்திருக்கிறார்” என்று குறிப்பிட்டு அவரது மனுவை தள்ளுபடி செய்தார்.

பராசக்தி படத்தின் கதையையும் செம்மொழி கதையையும் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவிட்டும், இன்னும் அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. எனவே அந்த அறிக்கையை சீலிடப்பட்ட கவரில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தார்.

மேலும், இந்த வழக்கின் விசாரணையை ஜனவரி 28ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share