செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இன்று (மார்ச் 13) தடை விதிக்க மறுத்துள்ளது.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் 14-ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக செந்தில் பாலாஜி பண மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கு சென்னை சிறப்பு நிதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
பண மோசடி வழக்கில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடந்ததாக அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி அல்லி முன்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில், சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் பண மோசடி வழக்கு முடியும் வரை அமலாக்கத்துறை வழக்கு விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை நீதிபதி அல்லி தள்ளுபடி செய்தார்.
இதை எதிர்த்து செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது செந்தில் பாலாஜி தரப்பில், “தனக்கு எதிராக சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மோசடி வழக்கு விசாரணை முழுவதுமாக முடியும் வரை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்” என்ற கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், “அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு விசாரணை ஆரம்ப கட்டத்தில் தான் உள்ளது. எனவே, இந்த ஒரு நிலையில் தங்களால் எந்த ஒரு நிவாரணமும் வழங்க முடியாது. இந்த மனு தொடர்பாக அமலாக்கத்துறை பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஏப்ரல் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஆரணியா? வேலூரா? – அதிமுகவிடம் மன்சூர் அலிகான் வைத்த டிமாண்ட்!
Samsung: சாம்சங்கின் டபுள் தமாக்கா… சர்ப்ரைஸ் காத்திருக்கிறது மக்களே!