ஆம்ஸ்ட்ராங் உடலை திருவள்ளூரில் அடக்கம் செய்ய உயர்நீதிமன்றம் அனுமதி!

Published On:

| By Selvam

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலை திருவள்ளூர் மாவட்டம் பொத்தூரில் அடக்கம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் இன்று (ஜூலை 7) அனுமதி வழங்கியுள்ளது.

படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உடலை பெரம்பூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்று அவரது மனைவி பொற்கொடி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

ADVERTISEMENT

இந்த வழக்கு நீதிபதி பவானி சுப்பராயன் முன்பாக இன்று காலை விசாரணைக்கு வந்தபோது, “அரசு ஒதுக்கும் இடத்தில் அடக்கம் செய்துவிட்டு வேறு இடத்தை அடையாளம் கண்டு மணிமண்டபம் கட்டிக்கொள்ளுங்கள்” என்று தெரிவித்தார்.

இதனையடுத்து அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “திருவள்ளூரில் ஆம்ஸ்ட்ராங்கின் உடலை அடக்கம் செய்து மணிமண்டபம் கட்ட அவரது உறவினர் ஒரு ஏக்கர் நிலம் தர தயாராக இருக்கிறார். இதில் அரசுக்கு ஆட்சேபனை இல்லை” என்று தெரிவித்தார்.

ADVERTISEMENT

அப்போது நீதிபதி, இதுதொடர்பாக ஆம்ஸ்ட்ராங்கின் குடும்பத்துடன் கலந்தாலோசித்து விட்டு பதில் தெரிவிக்க வேண்டும் என்றார்.

இந்த வழக்கு மதியம் 2.15 மணிக்கு விசாரணைக்கு வந்தபோது,”திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள செங்குன்றம் அருகே பொத்தூர் என்ற இடத்தில் ஆம்ஸ்ட்ராங்கின் உறவினருக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலம் உள்ளது. அந்த இடத்தில் அவரது உடலை அடக்கம் செய்ய மனுதாரர் சம்மதம் தெரிவித்துள்ளார்” என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி பவானி சுப்பராயன், “ஆம்ஸ்ட்ராங்கின் உடலை திருவள்ளூர் மாவட்டம் பொத்தூரில் அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. அரசிடம் அனுமதி பெற்று ஆம்ஸ்ட்ராங் நினைவாக சென்னையில் நினைவிடமோ அல்லது மருத்துவமனையோ கட்டிக்கொள்ளலாம்.

இறுதி ஊர்வலத்தின் போது காவல்துறை உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். சில வருடங்களுக்கு முன்பாக நீதிமன்ற வளாகத்தில் ஆம்ஸ்ட்ராங்கை பார்த்தேன். மிகவும் மென்மையாக பேசும் நபர் அவர். ஆம்ஸ்ட்ராங்கின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று நீதிபதி தெரிவித்தார்.

இந்தநிலையில், பெரம்பூரில் இருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள பொத்தூரில் ஆம்ஸ்ட்ராங் உடல் இறுதி ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

போயஸ்கார்டன் வீடு… இப்படி ஆகும் என்று தெரிந்திருந்தால் வாங்கியிருக்க மாட்டேன்: நடிகர் தனுஷ்

ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம்… தொடரும் வாதம் : வழக்கு மதியம் 2.15-க்கு ஒத்திவைப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share