நிதி நிறுவன மோசடி வழக்கு… தேவநாதனுக்கு 7 நாட்கள் போலீஸ் கஸ்டடி!

Published On:

| By Selvam

நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதன் யாதவை 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை சிறப்பு நீதிமன்றம் இன்று (ஆகஸ்ட் 27) அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

சென்னை மயிலாப்பூரில் ‘தி மயிலாப்பூர் இந்து பெர்மனெண்ட் பண்ட் லிமிடட்’ நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தில் முதலீடு செய்த 144 பேரிடம் இருந்து ரூ.525 கோடி மோசடி செய்ததாக அந்நிறுவனத்தின் இயக்குனரும் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக கட்சியின் தலைவருமான தேவநாதன் யாதவ் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த குணசீலன், மகிமைநாதன் ஆகிய மூன்று பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கடந்த ஆகஸ்ட் 13-ஆம் தேதி கைது செய்தனர்.

ADVERTISEMENT

இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் குறித்தும், யார் யாருக்கு நிதி சென்றுள்ளது? என்பது குறித்தும் விசாரிக்க வேண்டியுள்ளதால் மூன்று பேரையும் 10 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த மனு நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி மலர் வாலண்டினா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கைது செய்யப்பட்ட மூன்று பேரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

ADVERTISEMENT

இதனையடுத்து, மூன்று பேரையும் ஏழு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், செப்டம்பர் 3-ஆம் தேதி மாலை 4 மணிக்கு மூன்று பேரையும் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தார்.

ADVERTISEMENT

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

2 கால்லயும் வேற வேற செருப்பு, டிரெண்டிங்னு சமாளிங்க! விஜே.மணிமேகலையை கலாய்த்த ரசிகர்கள்!

கொட்டுக்காளி வசூல்… சிவகார்த்திகேயனை மறைமுகமாக சாடிய அமீர்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share