மெரினாவில் 300 கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மெரினா கடற்கரையில் உள்ள கடைகளை முறைப்படுத்துவது தொடர்பான வழக்கை நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார் மற்றும் ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா அமர்வு விசாரித்து வருகிறது. கடந்த டிசம்பர் 22ஆம் தேதி மெரினா கடற்கரையில் நீதிபதிகள் ஆய்வு செய்தனர்.
இந்நிலையில் வழக்கு இன்று (ஜனவரி 8) விசாரணைக்கு வந்தபோது, மெரினா கடற்கரையில் 1,417 கடைகள் அமைப்பதற்கான மாநகராட்சியின் திட்டத்திற்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
தொடர்ந்து உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், “கடைகளின் எண்ணிக்கையை கணிசமாகக் குறைத்து, குலுக்கல் முறையில் 300 கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும். , மெரினாவில் உணவு பொருட்கள், பொம்மை கடைகள், பேன்சி கடைகள் என 300 கடைகள் மட்டுமே இருக்க வேண்டும்.
ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒரு குழு அமைத்து இந்த குலுக்கல் முறையை கண்காணிக்க வேண்டும்.
தலைவர்களின் நினைவிடங்களுக்குப் பின்புறமுள்ள பகுதிகளையும் நீலக்கொடி சான்று பெற்ற பகுதிகளாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
கடற்கரை அழகை ரசிக்க முடியாத அளவுக்கு கடைகள் ஆக்கிரமித்துள்ளன.
உலகின் எந்தவொரு முக்கிய கடற்கரையிலும் இவ்வளவு கடைகள் வரிசையாக இல்லை. நீலக்கொடி பகுதிகளில் எந்தக் கடைகளையும் அமைக்கக் கூடாது. மெரினா கடற்கரையை வணிக வளாகமாக மாற்றாதீர்கள்.
கேரளாவில் உள்ள கோவளம் கடற்கரை வெளிநாட்டில் உள்ளது போல் உள்ளது. ஆனால் மெரினா கடற்கரை அப்படி இல்லை. மெரினா கடற்கரையின் பெருமையை மீட்டெடுக்க வேண்டும் ” என்று தெரிவித்தனர்.
தொடர்ந்து வழக்கில் அடுத்தக்கட்ட விசாரணையை ஜனவரி 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
