டாஸ்மாக் முறைகேடு: ஆகாஷ் பாஸ்கரன் வழக்கு- அமலாக்கத்துறைக்கு ரூ30,000 அபராதம் விதித்த உயர்நீதிமன்றம்

Published On:

| By Mathi

High Court ED

திரைப்படத் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வழக்கில் பதில் மனுத் தாக்கல் செய்யாத அமலாக்கத் துறைக்கு ரூ30,000 அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் மதுபான ஆலைகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஏப்ரல் மாதம் சோதனை நடத்தினர். இதன் பின்னர் அமலாக்கத்துறை வெளியிட்ட அறிக்கையில் ரூ1,000 கோடி மோசடி நடந்துள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் திரைப்படத் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்தரன் ஆகியோருக்கு சொந்தமான வீடுகள், நிறுவனங்களிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்த சோதனைகளுக்குப் பின்னர் ஆகாஷ் பாஸ்கர், விக்ரம் ரவீந்திரன் நிறுவனங்கள் சீல் வைக்கப்பட்டன.

இதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் இருவரும் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் வி.லட்சுமி நாராயணன் பெஞ்ச் விசாரித்தது. இவ்வழக்கில் அமலாக்கத்துறையின் நடவடிக்கைகளுக்கு தடை விதித்த உயர்நீதிமன்றம், பதில் மனுத் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.

ADVERTISEMENT

இந்த நிலையில் இன்று ஆகஸ்ட் 6-ந் தேதி இவ்வழக்கின் விசாரணை நடைபெற்றது. இன்றைய விசாரணையின் போது அமலாக்கத்துறை தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்ய அவகாசம் கேட்கப்பட்டது.

ஆனால் இதனை நிராகரித்த நீதிபதிகள், ஏற்கனவே 2 முறை அவகாசம் கொடுத்தும் ஏன் அமலாக்கத்துறை பதில் மனுத் தாக்கல் செய்யவில்லை என கேள்வி எழுப்பினர். இருப்பினும் அமலாக்கதுறை தரப்பில் மீண்டும் அவகாசம் கேட்கப்பட்டது.

ADVERTISEMENT

இதனையும் நிராகரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், அமலாக்கத்துறை பதில் மனுத் தாக்கல் செய்யாததால் ரூ30,000 அபராதம் விதித்து உத்தரவிட்டனர். இந்த தொகையை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் நிவாரண நிதிக்கு வழங்கவும் உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 20-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share