சாம்சங் தொழிலாளர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்த தடையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சாம்சங் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்டது.
சிஐடியூ தொழிற்சங்கம் சார்பில் வழக்கறிஞர் திருமூர்த்தி ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார்.
அதில், “கைது செய்யப்பட்ட 7 பேரை ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றம் சொந்த பிணையில் விடுவித்தும் போலீசார் சட்டவிரோதமாக காவல்நிலையம் அழைத்துச் சென்று வைத்துள்ளனர். சாம்சங் தொழிலாளர்கள் எந்த வன்முறைக்கும் இடமில்லாமல், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு இன்று (அக்டோபர் 9) பிற்பகல் நீதிபதிகள் பாலாஜி, வேல்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் தாமோதரன், “தொடர் போராட்டத்தில் கைதான தொழிலாளர்கள் சிறையில் அடைக்கப்படவில்லை. யாரும் சட்டவிரோத காவலில் இல்லை” என வாதிட்டார்.
மனுதாரர் தரப்பில், “ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், அமைதியான முறையில் சாம்சங் ஊழியர்கள் போராட்டம் நடத்த தடையில்லை என்று கூறியிருக்கிறார்” என்று தெரிவிக்கப்பட்டது.
இதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், ஏற்கனவே உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுபடி சாம்சங் ஊழியர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்த தடையில்லை என்று தெரிவித்து ஆட்கொணர்வு மனுவை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா