உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து விட்டு உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தாக்கல் செய்வதா என ராமதாஸ் தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் தலைவர் அன்புமணிக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.
இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
அதில், ‘தனக்கும் தனது மகனுக்கும் இடையே இருக்கும் பிரச்சினை தீர்க்கப்படும் வரை மாம்பழம் சின்னத்தை முடக்கி வைக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
அதோடு, உரிமையியல் வழக்கில் தீர்வு வரும் வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் தேதிகளை அறிவிக்க வேண்டாம் என்று தேர்தல் ஆணையத்துக்கு இடைக்கால உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி அருள் முருகன் முன்பு இன்று (பிப்ரவரி 20) விசாரணைக்கு வந்தது.
ராமதாஸ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அருள், ‘2025 ஆம் ஆண்டு மே 28ஆம் தேதியுடன் அன்புமணியின் பதவி காலம் முடிந்து விட்டது. ஆனால் அவர் போலியான ஆவணங்களை தாக்கல் செய்து 2026 ஆம் ஆண்டு வரை பதவி காலம் இருப்பதாக தேர்தல் ஆணையத்தில் கடிதம் அளித்திருக்கிறார்’ என்று வாதம் முன்வைத்தார்.
ராமதாசை கட்சியின் தலைவராக அறிவிக்க கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது” என்றும் தெரிவித்தார்.
தேர்தல் ஆணையம் சார்பில், ‘இது தொடர்பான வழக்கில் உரிமையியல் நீதிமன்றத்தை நாட டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவின் அடிப்படையில் அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட கட்சியான பாமக உள்கட்சி விவகாரத்தில் தலையிட முடியாது. மாம்பழம் சின்னம் முடக்கம் செய்வது குறித்து தேர்தல் ஆணையம் முடிவெடுக்க முடியாது’ என்று தெரிவிக்கப்பட்டது.
அப்போது தலைமை நீதிபதி, தந்தை சொல்லை மகன் கேட்பது இல்லையா? என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு ராமதாஸ் தரப்பு வழக்கறிஞர், கேட்பது இல்லை என்று சொல்ல,
அன்புமணி சார்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயன் ஆஜராகி, ’ஏற்கனவே பாமக தொடர்பான வழக்கில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் சமரசம் செய்ய முயற்சித்தார். ஆனால் அது நடைபெறவில்லை. இந்த வழக்கின் மனுவில் ராமதாஸ் போட்டுள்ள கையெழுத்து சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அவருக்கு வயதாகிவிட்டது. கட்சியின் மீதான கட்டுப்பாட்டை இழந்துவிட்டார்’ என்று தெரிவித்தார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த ராமதாஸ் தரப்பு வழக்கறிஞர் அருள், ‘அவரது வாதத்தை நான் உறுதியாக எதிர்க்கிறேன். ராமதாஸ் முழு உடல் தகுதியுடன் ஆரோக்கியமாக இருக்கிறார். நீச்சல் பயிற்சி எடுக்கிறார். நடைப்பயிற்சி மேற்கொள்கிறார். அவர் மீது பொய்யான குற்றச்சாட்டை சுமத்துகிறார்கள். இவை அனைத்தும் ஜோடிக்கப்பட்ட கதைகள். எனது நண்பர்(மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயன்) இங்கு வாதிட முடியாது. ஏனெனில் இந்த வழக்கு நடைமுறைகளில் அவர் ஒரு தரப்பு அல்ல’ என்று வாதங்களை முன் வைத்தார்.
இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துவிட்டு உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தாக்கல் செய்வதா… நீதிமன்ற நேரத்தை வீணடித்தால் அபராதம் விதிக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.
மேலும், உட்கட்சி விவகாரம் தொடர்பாக ஏற்கனவே சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருக்கிறீர்கள் என்பதால் அங்கேயே நிவாரணம் தேடி கொள்ளலாம் என்று கூறி இரு வழக்குகளும் விசாரணைக்கு உகந்ததல்ல என தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
உரிமையியல் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தேர்தல் ஆணையத்தை அணுகலாம் எனவும் நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.
