பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு: மோகன் ஜி மன்னிப்பு கேட்க வேண்டும்… உயர்நீதிமன்றம் முன்ஜாமீன்!

Published On:

| By Selvam

பழனி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு பரப்பியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் இயக்குனர் மோகன் ஜிக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று (செப்டம்பர் 30) நிபந்தனை முன் ஜாமீன் வழங்கியுள்ளது.

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தப்பட்ட விவகாரம் கடந்த வாரம் தேசிய அளவில் முக்கிய விவாதப்பொருளானது.

இதுதொடர்பாக, ஐபிசி தமிழ் யூடியூப் சேனலுக்கு இயக்குனர் மோகன் ஜி அளித்த பேட்டியில், பழனி கோவிலில் வழங்கப்படும் பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரைகள் பயன்படுத்துவதாக சர்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். அவரது இந்த பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்தநிலையில், திருச்சி சமயபுரம் காவல் நிலையத்தில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி அளித்த புகாரின் பேரில் மோகன் ஜி கடந்த செப்டம்பர் 24-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். பின்னர், அவரை அன்றைய தினமே திருச்சி நீதிமன்றம் சொந்த ஜாமீனில் விடுவித்தது.

இந்தநிலையில், பழனி காவல் நிலையத்தில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி அளித்த புகாரின் பேரில் மோகன் ஜி மீது அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் முன் ஜாமீன் கேட்டு மோகன் ஜி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி பரதசக்கரவர்த்தி முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு தரப்பில், “சமுதாயத்தில் பிளவு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பழனி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரைகள் பயன்படுத்தப்படுவதாக பொய்யான குற்றச்சாட்டை மோகன் ஜி பேசியுள்ளார். தொடர்ந்து இதுபோன்ற அவதூறு கருத்துக்களை அவர் பேசி வருகிறார். அதனால் அவருக்கு முன் ஜாமீன் வழங்கக்கூடாது” என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.

இதனையடுத்து நீதிபதி பரதசக்கரவர்த்தி, “மோகன் ஜி வாய்ச்சொல் வீரராக இல்லாமல் எந்தவொரு தகவலையும் தெரிவிப்பதற்கு முன்பாக உறுதிப்படுத்த வேண்டும்.

அவருக்கு உண்மையிலேயே பழனி கோவில் மீது அக்கறை இருந்தால் அங்கு சென்று தூய்மை பணிகளை மேற்கொள்ளலாம். இல்லையென்றால், பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்கும் இடத்திற்கு சென்று 10 நாட்கள் வேலை செய்யலாம்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, “பழனி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு பரப்பியதற்காக இயக்குனர் மோகன் ஜி சமூக வலைதளத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும், தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ் ஒன்றில் இந்த விவகாரம் தொடர்பாக மன்னிப்பு கேட்டு விளம்பரம் வெளியிட வேண்டும்” என்று நிபந்தனைகளுடன் முன் ஜாமீன் வழங்கினார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்… 

விமர்சனம் : சட்டம் என் கையில் !

அமைச்சரவையில் உதயநிதிக்கு மூன்றாவது இடம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share