எண்பதுகளில் நிகழ்வதாகக் கதையை அமைத்திருக்கலாம்!
கோவிட் -19 காலகட்டத்தில் ஓடிடி தளங்கள் தமிழ் சினிமா ரசிகர்களிடையே விஸ்வரூப வளர்ச்சி பெற, அவற்றில் நேரடியாக ரிலீஸ் செய்யப்பட்ட ‘சூரரைப் போற்று’, ‘சார்பட்டா பரம்பரை’, ‘ஏலேய்’ போன்ற படங்களும் ஒரு காரணம். ஆனால், கடந்த இரண்டாண்டுகளாகப் பெரிய நட்சத்திரங்களின் படங்கள் ஏதும் அவ்வாறு நேரடியாக வெளியிடப்படவில்லை.
இந்த நிலையில், நெடுநாட்களுக்குப் பிறகு நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகியிருக்கிறது மாதவன், நயன்தாரா, சித்தார்த், மீரா ஜாஸ்மின் நடிப்பில் தயாரிப்பாளர் சஷிகாந்த் இயக்கியுள்ள ‘டெஸ்ட்’. பின்னணிப் பாடகி சக்திஸ்ரீ கோபாலன் இதற்கு இசையமைத்திருக்கிறார். இப்படம் 146 நிமிடங்கள் ஓடுகிறது.

’டெஸ்ட்’ திரைப்படம் சென்னையைச் சார்ந்த ஒரு கிரிக்கெட் வீரரை மையப்படுத்திய கதை என்பது அதன் ட்ரெய்லரில் தெளிவாகத் தெரிந்தது.
இதனைப் பார்த்தபிறகு, பார்வையாளரான நாம் உணர்வது என்ன? Siddharth Test movie review
விளையாட்டு வீரரின் விரக்தி!
இரண்டாண்டுகளாக ‘பார்மில்’ இல்லாமல் தடுமாறி வருகிறார் இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரரான அர்ஜுன் (சித்தார்த்). சென்னையில் நடைபெறவுள்ள இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியே அவரது இறுதிப் போட்டி என்கின்றன ஊடகங்கள். ஆனால், களமிறங்கும் அணியில் அர்ஜுன் இடம்பெறுவாரா என்பதே கேள்விக்குறியாக உள்ளது.
இந்த நிலையில், ஊடகங்களைப் பயன்படுத்தி அணியில் தனது இடத்தை உறுதிப்படுத்த முடிவெடுக்கிறார் அர்ஜுன்.
இன்னொரு புறம், நீரில் இருந்து எரிசக்தி ஆற்றலைப் பெறுகிற தனது கண்டுபிடிப்பை மக்களிடம் கொண்டுசெல்லும் முயற்சியில் இருக்கிறார் சரவணன் (மாதவன்). அதற்காகச் சில ஆண்டுகளைச் செலவிட்டிருக்கிறார். அதில் வெற்றி பெற்றுவிடுவோம் என்பது உறுதியானவுடன், அதனை மாநில அரசிடம் தெரிவிக்க முனைகிறார்.

இடைப்பட்ட காலத்தில், தனது மனைவிக்குச் சொந்தமான கேண்டீனை இன்னொருவரிடம் விற்றுவிடுகிறார். அதனைப் பணயமாக வைத்து ஒரு பைனான்சியரிடம் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் திணறி வருகிறார்.
அந்த பைனான்சியரின் பெயர் தர்மேஷ் (வினய் வர்மா). பணம் கொடுக்கல் வாங்கலோடு ஹவாலா, கிரிக்கெட் சூதாட்டம் உள்ளிட்டவற்றிலும் ஈடுபடுகிறார். சென்னையில் நடக்கும் இந்தியா – பாகிஸ்தான் டெஸ்ட் ஆட்டத்தை முன்வைத்து நடைபெறும் பல ஆயிரம் கோடி ரூபாய் சூதாட்டத்தில் அர்ஜுனைத் தங்கள் பக்கம் இழுக்கத் தர்மேஷ் முயற்சிக்கிறார்.
மேற்சொன்னவர்களின் தனிப்பட்ட ஆசைகளுக்கு நடுவே சில மனிதர்கள் சிக்கிக்கொண்டு அல்லாடுகின்றனர்.
அர்ஜுனின் கிரிக்கெட் ஆர்வத்திற்குக் கொஞ்சமும் குறைவில்லாமல் அவரது பத்து வயது மகன் ஆதியும் ‘அவ்விளையாட்டே கதி’ என்று இருக்கிறார். ஆனால், மகன் சொல்கிற விஷயங்களில் கவனம் செலுத்த முடியாத அளவுக்கு மனச்சிக்கலில் தவிக்கிறார் அர்ஜுன். அதனால், ஆதி காயங்களை மட்டுமே எதிர்கொள்கிறார். ஒருகட்டத்தில் அது போன்ற காயங்களை மனைவி பத்மாவுக்கும் (மீரா ஜாஸ்மின்) தருகிறார் அர்ஜுன்.
தர்மேஷுக்கு உத்தரவுகள் இடும் சூதாட்டத் தரகர்கள், ‘எப்படியாவது அர்ஜுனை வளைத்துப் போடச் சொல்லி’ அழுத்தம் கொடுக்கின்றனர்.

அந்தச் சூழலில், ‘தன்னால் அர்ஜுனைக் கட்டுப்படுத்த முடியும்’ என்கிறார் அவரிடம் கடன் வாங்கிய சரவணன். அந்த மனிதரை நம்பவா, வேண்டாமா என்று யோசிக்கும் அவகாசம் கூட, அவரிடத்தில் வேலை பார்ப்பவர்களுக்குக் கிடைப்பதில்லை.
சரவணன் மனைவி குமுதா (நயன்தாரா) செயற்கைக் கருத்தரித்தல் முறையில் குழந்தை பெற முடிவெடுக்கிறார்.
ஒரு ஆசிரியை என்ற நிலையைத் தாண்டி அர்ஜுன் மகன் ஆதி உடன் நெருக்கம் காட்டுகிறார் குமுதா. அது அவரது வேலைக்கே சிக்கலை ஏற்படுத்துகிறது. இந்த நிலையில், ஒருநாள் ஆதியை அவர் தனது வீட்டிற்கு அழைத்து வருகிறார். அதனை ஆதியின் வீட்டாருக்குத் தெரியப்படுத்த முடியாத இக்கட்டான நிலைக்கு ஆளாகிறார்.
மேற்சொன்ன விஷயங்களில் இருந்து குறிப்பிட்ட சம்பவங்கள் அவற்றோடு சம்பந்தப்பட்டவர்களின் வாழ்வை அடியோடு புரட்டிப் போடுவது பிடிபடும்.
‘டெஸ்ட்’ திரைப்படம், ஒரு கிரிக்கெட் வீரரின் விரக்தியில் இருந்தே தொடங்குகிறது. தனது கிரிக்கெட் வாழ்க்கை அஸ்தமனம் ஆகவில்லை என்பதில் அவர் உறுதியாக இருக்க, சுற்றியிருக்கும் உலகமோ ‘அவரது கதை முடிந்துவிட்டதாக’ எண்ணுகிறது.
இரண்டில் எந்த நம்பிக்கைக்கு வலு அதிகம் என்று சொல்கிறது இத்திரைப்படம். அதுவே இப்படத்தின் யுஎஸ்பி ஆக இருந்திருக்க வேண்டும். அது சரியான முறையில் திரையில் கடத்தப்படவில்லை.
தாக்கம் எப்படி?
இதற்கு மேல் சொல்லப்படுகிற விஷயங்கள் ‘ஸ்பாய்லர்’ ஆக இருக்கக்கூடும். அதனை விரும்பாதவர்கள் இதோடு நிறுத்திக் கொள்ளலாம்.
மேற்சொன்ன கதையில் இருந்து, கிரிக்கெட் விளையாட்டுக்கும் அதனைத் தனது உயிராக எண்ணும் அர்ஜுன் பாத்திரத்திற்குமான முக்கியத்துவம் நமக்குத் தெரியவரும்.
எதிலும் அசட்டையாக இருப்பது போன்ற அப்பாத்திர வடிவமைப்பானது, கிரிக்கெட்டில் மட்டுமே அது தீவிரக் கவனம் செலுத்துவதை உணர்த்துவதாக உள்ளது. ஆனால், அது நமக்குச் சட்டென்று பிடிபடாது.
அப்பாத்திரத்தின் கிரிக்கெட் ஆர்வத்தை அடிக்கோடிடும் விதமான காட்சியமைப்பு இதில் இல்லை. அது பார்வையாளர்களைக் குழப்பத்தில் தள்ளுகிறது.
இந்தக் கதையில் சிறுவன் ஆதி காணாமல் போவதாகச் சில காட்சிகள் வருகின்றன.
அந்த இடத்தில் அர்ஜுன் – பத்மா பாத்திரங்கள் ‘ரியாக்ட்’ செய்திருக்கும் விதம் பார்வையாளர்களை நிச்சயம் திருப்திப்படுத்தாது.
‘என்னதான் மேல்தட்டு மக்களா இருந்தாலும், புள்ளை காணாமப் போனாலும் இப்படித்தான் இருப்பாங்களா’ என்று ‘கமெண்ட்’ செய்யும் அளவுக்கே அந்த சித்தரிப்பு உள்ளது.
இவை போதாதென்று ஏகப்பட்ட முன்னாள், இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் சிலரின் சாயலை அர்ஜுன் பாத்திரத்தின் மீது பூச முயற்சித்திருக்கிறார் இயக்குனர். அது ஏற்புடையதாக இல்லை.
கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக, கிரிக்கெட் உலகை உற்றுக் கவனித்துவரும் ஒருவரால் இக்கதையில் முன்னாள் வீரர் சவுரவ் கங்குலி வாழ்க்கையின் சாயல் இருப்பதை உணர முடியும். லார்ட்ஸ் டெஸ்ட் செஞ்சுரி, தாதா என்ற செல்லப் பெயர் உட்படச் சில விஷயங்கள் அதற்கு வழிகோலுகின்றன.
ஆனாலும் ரவிச்சந்திரன் அஸ்வின், ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர் உட்படச் சிலரது சாயலை அர்ஜுன் பாத்திரத்தில் புகுத்த முயன்றது எடுபடவில்லை. அதேநேரத்தில், சவுரவ் கங்குலியோடு பொருந்தும் வகையிலும் அப்பாத்திரம் முழுமையாக வடிவமைக்கப்படவில்லை.

இந்த திரைக்கதையின் மையமே இந்தியா – பாகிஸ்தான் ஆட்டம் தான். அதில் இடம்பெறும் வீரர்களை இன்னும் கொஞ்சம் விரிவாகக் காட்டியிருக்கலாம்.
இப்படத்தில் சரவணன், குமுதா மற்றும் தர்மேஷ், குட்டி உள்ளிட்ட பாத்திரங்கள் கூட முழுமையற்றுத் திரையில் தெரிகின்றன.
அதற்கு இயக்குனர் சஷிகாந்த் மற்றும் சுமன் குமாரின் எழுத்தாக்கமே காரணம்.
முக்கியமாக, சமகாலத்தில் நிகழ்வதாக இந்தக் கதையை வடிவமைத்திருப்பது ஆகப்பெரிய குறையாகத் தெரிகிறது. லாஜிக் மீறல்கள் கொத்துகொத்தாக நம் மனதில் எழக் காரணமாக உள்ளது.
மாறாக, எண்பதுகளில் நிகழ்வதாக இக்கதையை வடிவமைத்திருக்கலாம். அது நிகழ்ந்திருக்கும் பட்சத்தில், இந்த திரைக்கதையும் காட்சிகளும் ஏற்புடையதாக மாறியிருக்கும்.
நடிப்பைப் பொறுத்தவரை மையக் கதாபாத்திரங்களில் நடித்த மாதவன், சித்தார்த், நயன்தாரா தொடங்கி அனைவருமே சிறப்பாக நடித்திருக்கின்றனர்.
வழக்கம்போல, இந்த படத்திலும் ‘ஜஸ்ட் லைக் தட்’ நடித்து நம்மை ஈர்த்துவிடுகிறார் மாதவன். ஆனாலும், இந்த பாத்திரத்தில் அவரைப் பார்க்கும்போது ‘ஏற்கனவே இப்படிப் பார்த்துவிட்டோமே’ என்பது போன்ற எண்ணம் பிறக்கிறது.
’இந்த டெஸ்ட் போட்டியில் ஆடுவேனா’ என்பதைத் தவிர வேறொன்றும் நினையாதவராக, முதல் பாதியில் வந்திருக்கிறார் சித்தார்த். இரண்டாம் பாதியில் அந்த வாய்ப்பு கிடைத்தும் முழுமையாக அதனைச் செயல்படுத்த இயலாதவராகத் தவித்திருக்கிறார்.
‘உன்னை நீ நல்லவன்னு நினைச்சிட்டு இருக்கியா’ என்று மாதவன் கேட்குமிடத்தில், நயன்தாராவின் ரியாக்ஷன் அருமை. அதையொட்டிய காட்சிகள் அனைத்திலும் அவரது நடிப்பு நம்மை அசரடிக்கிறது.

இவர்கள் மூவரைத் தாண்டி மீரா ஜாஸ்மின், மோகன் ராம், காளி வெங்கட், ஆடுகளம் முருகதாஸ், வினய் வர்மா உள்ளிட்ட சிலர் வந்து போகின்றனர். ஆனால், பெரிதாக ‘ஸ்கோர்’ செய்ய அவர்களுக்கு வாய்ப்பு தரப்படவில்லை.
மீரா ஜாஸ்மின் பாத்திரம் சரியாக எழுதப்படவில்லையோ என்று கூடத் தோன்றுகிறது.
இவர்கள் போதாதென்று நாசர், மீரா கிருஷ்ணன், தீபா சங்கர், ஸ்ரீராம், அஜித் கோஷி, ஷ்யாம் குமார் உட்படச் சிலர் இதில் வந்து போயிருக்கின்றனர்.
ஒளிப்பதிவாளர் விராஜ் சிங் கோஹில், படத்தொகுப்பாளர் டி.எஸ்.சுரேஷ், தயாரிப்பு வடிவமைப்பாளர்கள் மதுசூதன் – ஸ்வேதா சாபு சிரில் மற்றும் பல தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பு, ரொம்பவே செறிவான படத்தைப் பார்க்கும் உணர்வைத் தந்துவிடுகிறது.
இசையமைப்பாளராக அறிமுகம் ஆகியிருக்கும் சக்திஸ்ரீ கோபாலன் பின்பாதியில் பின்னணி இசையில் நம்மை வசீகரிக்கிறார்.
கிரிக்கெட் வீரர் ஒருவர் பார்மில் இல்லாததையும், ஓய்வு பெற வேண்டிய நெருக்கடிக்கு ஆளாவதையும் மையமாகக் கொண்டு ‘டெஸ்ட்’ கதையைப் படமாக ஆக்க முனைந்திருக்கிறார் இயக்குனர் சஷிகாந்த்.
உண்மையான தகவல்கள் படத்தில் இடம்பெறத் தேவையில்லை என்றபோதும், ரசிகர்களைக் கதையோடு ஒன்றவைக்கத் தேவையான சில தகவல்களை உண்மைக்கு நெருக்கமாகக் காட்டியிருக்கலாம். அப்படிச் செய்யாமல் தவிர்த்திருப்பது, ஜவுளிக்கடையின் வெளிப்புறம் அலங்காரத்திற்கு வைக்கப்பட்டிருக்கும் ஆளுயரப் பொம்மையின் அழகைப் பார்த்து ரசிக்கும் உணர்வையே தருகிறது. அந்த கால அவகாசத்தில், அந்த பொம்மையின் வலியையும் வாழ்க்கையையும் எப்படித் தெரிந்துகொள்ள முடியும்? Siddharth Test movie review
