“எனது குழந்தை குறைமாத குழந்தை என்று அமைச்சர் கூறியது வேதனை அளிக்கிறது” என கை அகற்றப்பட்ட ஒன்றரை வயது குழந்தையின் தாய் கூறியுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தஸ்தகீர் – அஜிஸா தம்பதிக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன், தேவகோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தை ஒன்று பிறந்தது. 40 வாரங்களில் பிறப்பதற்குப் பதிலாக 32 வாரங்களிலேயே பிறந்த அந்தக் குழந்தையின் எடை மிகக் குறைவாக இருந்ததால் அந்த மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில், குழந்தை பிறந்த மூன்று மாதங்களுக்குப் பிறகு, குழந்தையின் தலையின் சுற்றளவு அதிகரிக்கத் தொடங்கியது. சராசரியாக 37 செ.மீ. இருக்க வேண்டிய தலையின் சுற்றளவு 61 செ.மீ. அளவுக்கு அதிகரித்தது.
இதனால் கடந்த ஆண்டு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது அக்குழந்தை. குழந்தையின் தலையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்பதால் ராஜீவ் காந்தி அரசு தலைமை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது.
தலையில் இருக்கும் நீரை வெளியேற்ற ஒரு குழாய் பொருத்தப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனையடுத்து குழந்தைக்கு தொடர் மருத்துவக் கண்காணிப்பு தேவைப்பட்டதால் பெற்றோர் சென்னையிலேயே தங்கியிருந்தனர்.
இந்நிலையில், கடந்த மே 29 ஆம் தேதி குழந்தையை உடல்நலக் குறைவு காரணமாக ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பெற்றோர் அனுமதித்தனர்.
அப்போது, குழந்தைக்கு மருந்தும் திரவ உணவும் கொடுப்பதற்காக அதன் வலது கையில் பொருத்தப்பட்ட ஊசியின் காரணமாக, கை கொஞ்சம் கொஞ்சமாக கருக ஆரம்பித்துள்ளது.
இதை செவிலியர்களிடம் குழந்தையின் பெற்றோர் கூறியபோது அலட்சியமாக இருந்ததாக குற்றம்சாட்டப்படுகிறது.
பின்னர் மே 30 ஆம் தேதி காலை மருத்துவரிடம் குழந்தையின் கையை காண்பித்த போது, மருத்துவர் மருந்து வாங்கிக் கொடுத்து தேய்க்க சொல்லியுள்ளார். ஆனால் ஜூலை 1 ஆம் தேதி குழந்தையின் கையில் தோல் உரிய ஆரம்பித்துள்ளது.
அதை பெற்றோர்கள் மருத்துவரிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து குழந்தைக்கு ஸ்கேன் செய்து பார்த்ததில் வலது கையில் ரத்த ஓட்டம் தடைப்பட்டது தெரியவந்துள்ளது.
இதனால் குழந்தையின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்றால் கையை அகற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது அந்தக் குழந்தையின் வலது கை அகற்றப்பட்டுள்ளது.

தவறான சிகிச்சையின் காரணமாக குழந்தையின் கை அகற்றப்பட்டுள்ளதாக பெற்றோர் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் தன்னுடைய குழந்தைக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று பெற்றோர் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் அலட்சியம் ஏதும் நடந்திருக்கிறதா என்பதை அறிய உயர்மட்ட மருத்துவர்கள் குழு ஒன்றை அமைக்க மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, ரத்த நாள சிகிச்சைத் துறையின் இயக்குநர், பொது மருத்துவத் துறையிலிருந்து ஒரு இயக்குநர், குழந்தைகளுக்கான குருதித் துறையின் மூத்த மருத்துவர்கள் ஆகியோரை கொண்ட குழு அமைக்கப்பட்டிருக்கிறது.
குழந்தை தற்போது ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறது.
இதனிடையே குழந்தை குறைமாதத்தில் பிறந்துள்ளதால் நிறைய பிரச்சனை இருக்கின்றது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியது வேதனையாக உள்ளது என்று பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய குழந்தையின் தாய் அஜிஸா, “என் குழந்தைக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு தமிழ்நாடு அரசு பதில் சொல்லியே தீர வேண்டும். அரசின் நடவடிக்கை இந்த மருத்துவர், செவிலியருடன் நின்றுவிடக் கூடாது. இனிமேல் வேறு எந்த மருத்துவரோ, செவிலியரோ மறந்து கூட இதுபோன்ற தவறை செய்யக் கூடாது என்கிற அளவுக்கு அது இருக்க வேண்டும்.
நேற்று என்னை நேரில் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் என்னுடைய குழந்தையை பல முறை குறைமாத குழந்தை என்றே குறிப்பிட்டார். அத்துடன், குழந்தை பல குறைபாடுகளுடனே இருந்ததாக அவர் கூறினார். எந்தவொரு தாயிடமும் அவர் குழந்தையை குறைமாத குழந்தை என்று கூறக் கூடாது. அதனை அவர் விரும்ப மாட்டார். ஆனால் அமைச்சர் அதனை பல முறை கூறினார்.
குறை மாத குழந்தை குறைபாடுகள் இல்லாமல் இருக்கக் கூடாதா? இன்று எவ்வளவோ குழந்தைகள் குறை மாதத்தில் பிறந்து நன்றாக இல்லையா? என் குழந்தை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக எந்த குறையும் இல்லாமல் நன்றாகவே இருந்தது. ஆனால், இந்த ஊசி போட்ட பின்னரே பிரச்சனை தொடங்கியது.
என் குழந்தையின் தலை சுற்றளவு 61 செ.மீ. என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தனது பேட்டியில் கூறினார். ஆனால், இன்று நான் அளந்து பார்த்த போது 53 செ.மீ. தான் இருந்தது. யார் அளித்த தகவலின் பேரில் அமைச்சர் அவ்வாறு கூறினார்? அரசு மருத்துவர்கள், செவிலியர்களை காப்பாற்றும் நோக்கிலேயே நடந்து கொள்கிறார்கள்” என்று குற்றம்சாட்டினார்.
மோனிஷா
ஜெயலலிதாவின் புடவைகள், தங்க வைர நகைகள் : விஜிலன்ஸுக்கு பறந்த கடிதம்!
