மது போதையையும், மதவாத அரசியல் போதையையும் தமிழகத்தில் நுழைய விடாமல் தடுக்க நாம் அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திருச்சியில் இருந்து மதுரைக்கு சமத்துவ நடைபயணத்தை மேற்கொள்ள உள்ளார். தினமும் 15 முதல் 17 கிலோ மீட்டர் நடைபயணம் மேற்கொள்ள வைகோ திட்டமிட்டுள்ளார். வரும் 12ம் தேதி மதுரையில் பயணத்தை நிறைவு செய்ய உள்ளார்.
திருச்சியில் நடைபெற்ற தொடக்க விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ், திருச்சி மக்களவை தொகுதி உறுப்பினர் துரை வைகோ ஆகியோர் பங்கேற்றனர், மேலும் இந்த தொடக்க விழாவில் விடுதலைசிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சி மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் பங்கேற்றனர். வைகோவின் நடைபயணத்தை தமிழக முதல்வர் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது அவர், “தன்னுடைய பொது வாழ்க்கையில் தமிழ்நாட்டின் குறுக்கும் நெடுக்குமாக தன் காலடி படாத இடமே இல்லை என்று சொல்லும் அளவிற்கு மக்கள் பிரச்சனைக்காக நடைபயணம் செய்தவர் வைகோ. அவரது நெஞ்சுரத்தைப் பார்க்கும்போது அவருக்கு 82 வயதா? அல்லது 28 வயதா? என்று நமக்கெல்லாம் ஆச்சரியப்பட தோன்றுகிறது. ஒரு இளைஞருக்கு உரிய வேகத்தையும், ஊக்கத்தையும், உத்வேகத்தையும் இன்று அவரிடம் நாம் பார்க்கிறோம்.
இளைஞர்களுக்கு நல்வழி காட்டிட இளைஞர்களுடன் இணைந்து சமத்துவ நடை பயணத்தை தொடங்கிட வைகோவிற்கு எனது வாழ்த்துக்கள்.
89 வயதிலும் பேஸ்புக், ட்விட்டரில் கலைஞர்
திராவிட இயக்கத்தை பொறுத்தவரை காலந்தோறும் இளைய தலைமுறையின் நலனுக்காகவும், எதிர்கால நன்மைக்காகவும், வளர்ச்சிக்காகவும் செயலாற்றிக் கொண்டிருக்கும் இயக்கமாக உள்ளது. தள்ளாத 95 வயதில் தளராமல் தொண்டு செய்தவர் தந்தை பெரியார். தமிழ்நாட்டு இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் கல்வி உள்ளிட்ட எல்லா உரிமைகளும் கிடைக்க வேண்டும். அதற்கு சாதி, மதம் உள்ளிட்ட தடைகள் அகற்றப்பட வேண்டும் என்று தனது இறுதி மூச்சுவரை பாடுபட்டவர் தந்தை பெரியார்.
அவர் வழிவந்த தலைவர் கலைஞர் 80 ஆண்டுகால பொது வாழ்க்கைக்கு சொந்தக்காரர். சக்கர நாற்காலியில் உட்கார்ந்த வண்ணம் ஓய்வில்லாமல் உழைத்தார். 16 வயதில் மாணவ நேசன் பத்திரிகையை ஆரம்பித்து இளைஞர்களுடன் உறவாடிய அவர் 89 வயதிலும் ஃபேஸ்புக், ட்விட்டரில் இளைஞர்களுடன் அரசியல் செய்தார்.
வைகோவின் இளைஞர் படை
அப்படிப்பட்ட திராவிட இயக்க யுனிவர்சிட்டியில் படித்தவர்தான் அண்ணன் வைகோ. இந்த ஸ்டாலினும் அதே யுனிவர்சிட்டி மாணவன் தான். வைகோ கலைஞருக்கு பக்கத்தில் இருந்து அரசியல் கற்றுக் கொண்டவர். இமைப்பொழுதும் நம் நெஞ்சை விட்டு அகலாத கலைஞர் என்று வைகோ அடிக்கடி குறிப்பிட்டு சொல்லுவார். கலைஞர் மதுரையிலிருந்து திருச்செந்தூருக்கு நீதி கேட்டு நடை பயணத்தை நடத்திய நேரத்தில் அவருடைய கால் கொப்பளிக்க நடந்து சென்ற போது அவருக்கு பாதுகாவலராக கூடவே நடந்தவர் தான் வைகோ.
இன்று தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கக்கூடிய இளைஞர் படையோடு சமத்துவ நடை பயணத்தை நடத்துகிறார். இந்த நடைபயணத்தில் பங்கேற்கும் பலரையும் நேரில் அவரே தேர்வு செய்துள்ளார். இளைஞர்கள் எல்லாரும் பெற்றோரின் சம்மதத்தை பெற்றிருக்கிறார்களா? நடைபயணத்தால் அவர்களுடைய கல்லூரி தேர்வு ஏதேனும் பாதிக்குமா? அவர்களது உடல் திறன், மன உறுதி ஆர்வம் என எல்லாவற்றையும் உறுதி செய்துவிட்டு இந்த இளைஞர் படையை அவர் தேர்ந்தெடுத்துள்ளார்.
போதைப் பொருள் ஒழிப்பு, சாதி மத மோதல் தடுப்பு உள்ளிட்ட நாட்டுக்கு தேவையான கருத்துக்களை வலியுறுத்தி வைகோ தொடங்கி இருக்கக்கூடிய இந்த சமத்துவ நடை பயணம் மாபெரும் வெற்றி பெற வேண்டும். நிச்சயமாக வெற்றி பெறத்தான் போகிறது.
முதுமையை தூக்கி எறிந்த வைகோ
இது மாதிரியான பயணங்களில் என்ன பயன் என்று சில கேட்கலாம். காந்தியின் நடைபயணமும், மாவோவின் நடைபயணமும் வரலாற்றில் புரட்சியை ஏற்படுத்தி இருப்பது போல அந்த தாக்கத்தை அவர்கள் உணர வேண்டும். இது போன்ற நடைபயணங்களில் தான் தலைவர்கள் மக்களிடம் போய் எளிய முறையில் நேரடியாக தங்களது கருத்துக்களை சொல்ல முடியும். அந்த நடை பயணத்தின் தேவை குறித்தும் அதில் உள்ள நியாயங்கள் குறித்தும் மக்கள் பேசத் தொடங்குவார்கள் மக்கள் பேச பேசத்தான் அந்த பிரச்சனைக்கு தீர்வு காண முடியும்.
திராவிட இயக்க மேடைகளிலும் நாடாளுமன்றத்திலும் தமிழ்நாட்டிற்காக தமிழர்களுக்காக, அவர்தம் உரிமைகளுக்காக கர்ஜித்த வைகோ முதுமையை முற்றிலுமாக தூக்கி எறிந்து விட்டு இந்த நடை பயணத்தை தொடங்கி உள்ளார்.
ஒரு லட்சம் போதை மாத்திரைகள்
இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்க கூடிய போதைப் பொருட்களை நாம் நிச்சயமாக ஒழிக்க வேண்டும். அதில் எந்த கருத்து வேறுபாடும் கிடையாது. அதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டு உள்ளது. அதன் மூலம் ஓரளவிற்கு பலன் கிடைத்து வருகிறது. ஆனால் அந்த பழக்கத்திற்கு அடிமையானவர்கள் அதன் பாதிப்புகளை உணர்ந்து அந்த பழக்கத்தை கைவிட வேண்டும். அவர்களை உடன் இருப்பவர்கள் திருத்த வேண்டும்.
போதைப்பொருள் பழக்கம் என்பது மிகப்பெரிய நெட்வொர்க். அந்த நெட்வொர்க்கை அழிக்க மாநில அரசுகளும், ஒன்றிய அரசும் இணைந்து செயல்பட வேண்டும். ஏராளமான போதை வஸ்துகள் நாட்டிற்குள் வருகிறது. அதிகப்படியான போதை பொருட்கள் எந்தெந்த துறைமுகங்கள் வழியாக நாட்டிற்குள் வருகிறது என்பதை நாம் செய்திகளில் பார்க்கிறோம். இந்த நுழைவு வாயில்களை நாம் அடைத்தாக வேண்டும். நாட்டின் எல்லைக்குள் போதை பொருட்கள் வருவதையும், மாநிலம் வீட்டு மாநிலங்கள் கடத்தப்படுவதையும் ஒன்றிய அரசின் முகமைகள் தீவிரமாக கண்காணித்து அதை தடுக்க வேண்டும். அதற்கு அனைத்து மாநில அரசுகளும் தேவையான ஒத்துழைப்பை தர வேண்டும்.
கடந்த சில மாதங்களில் திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை போன்ற மாவட்டங்களில் இருந்து ஒரு லட்சத்திற்கும் அதிகமான போதை மாத்திரைகளை பிடித்துள்ளோம். இந்த கடத்தலில் சம்பந்தப்பட்டவர்கள் மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா, ஹரியானா போன்ற மாநிலங்களைச் சார்ந்தவர்களாக உள்ளனர். அதேபோல் மேலும் சில வழக்குகளில் குற்றவாளிகள் நைஜீரியா, செனகல் போன்ற நாடுகளை சார்ந்தவர்களாக உள்ளனர். இப்படிப்பட்ட நெட்வொர்க்கை ஒழிக்க எல்லோரும் கைகோர்க்க வேண்டும். நம்மைப் பொறுத்தவரை போதைப்பொருள் பழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று தமிழக அரசின் துறைகள் ஒன்றிய அரசின் துறைகள் மற்றும் அண்டை மாநில காவல் துறைகளுடனும் முழு ஒத்துழைப்பை கொடுத்து செயல்பட்டு வருகிறது.
கலைத்துறையின் பொறுப்பு
போதை ஒழிப்பு என்பது சமூகத்தின் கூட்டுப் பொறுப்பாக இருக்க வேண்டும். முக்கியமாக கலைத்துறையைச் சார்ந்தவர்கள் பொறுப்புணர்ச்சியோடு தங்களது படைப்புகளை உருவாக்க வேண்டும். போதையின் தீமைகளை சொல்வது தவறல்ல.. அதை குளோரிபை செய்வது ஒரு தலைமுறையை சீரழித்து விடும்.
பெற்றோர்களின் கடமை
அதேபோல் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மீது உள்ள பாசத்தை காண்பிக்க வேண்டும். அதற்காக அவர்கள் பாதை மாறி போகும்போது வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கக் கூடாது. யூட்யூப் போன்றவை மூலமாக ஈசியாக வரக்கூடிய பணம் பசங்களை தவறான பாதையில் அழைத்துச் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே குழந்தைகளை பொறுப்போடு வளர்க்க வேண்டும் என்று பெற்றோர்களை கேட்டுக்கொள்கிறேன். முக்கியமாக அம்மா, அப்பா, அக்கா, தங்கை என்று வீட்டில் இருக்கும் சொந்தங்கள் நமது வீட்டில் உள்ள பையன்கள் வழி தவறி போகாமல் இருப்பதை கண்காணிக்க வேண்டும். ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசினாலே பாதி பாரம் குறைந்து விடும். தவறான பாதைக்கு போகக்கூடிய தேவை நிச்சயமாக இருக்காது. அதேபோல் ஆசிரியர்கள் சமூக வலைதள பிரபலங்கள் என எல்லோரும் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வை தொடர்ந்து பரப்ப வேண்டும்.
ஒன்றிய அமைச்சர்களின் வெறுப்பு பேச்சுகள்
இன்று நாட்டில் நிலவக்கூடிய முக்கியமாக பிரச்சனை என்றால் அது சாதி, மத மோதல்கள் தான். ஒன்றிய அமைச்சர்கள் உள்ளிட்ட பொறுப்பில் இருக்கக்கூடியவர்கள் இப்போது வெறுப்புப் பேச்சுக்களை பேசுவதை பார்க்கிறோம். தனிப்பட்ட முறையிலான அவர்களது கொள்கைகளுக்காக நமது இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டையும், அமைதியையும், சீர்குலைக்கக்கூடிய நாசகரமான வேலையில் அவர்கள் ஈடுபட்டு உள்ளனர். நாட்டில் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள். ஆதி திராவிடர்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள் என்று எல்லோரும் அச்சத்தில் வாழக்கூடிய நிலைமை என்று ஏற்பட்டுள்ளது.
ஆன்மீகத்தை வம்பு செய்ய பயன்படுத்தும் கும்பல்
அண்மையில் கிறிஸ்துமஸ் விழாவின் போது நாட்டின் பல்வேறு இடங்களில் நடந்த தாக்குதல் குறித்து எல்லோருக்கும் தெரியும். சில ஆண்டுகளுக்கு முன்னர் நம் நாட்டில் இந்த நிலை இருந்ததா? ஊரே ஒன்று சேர்ந்து மகிழ்ச்சியாக இருந்த காலம் போய் ஒருவருக்கு ஒருவர் எதிரியாக கட்டமைக்கும் வேலையை பிளவுவாத சக்திகள் இன்று தெளிவாக செய்து கொண்டிருக்கின்றனர். அன்பு செய்ய சொல்லித் தர வேண்டிய ஆன்மீகத்தை சில கும்பல் வம்பு செய்வதற்காக பயன்படுத்துகிறார்கள். இந்த நிலையில்தான் வைகோ இந்த சமத்துவ நடை பயணத்தை தொடங்கி உள்ளார்.
திராவிட இயக்கத்திற்கு பல்வேறு திருப்புமுனைகளை கொடுத்த நகர் தான் இந்த திருச்சி நகர். வைகோவின் இந்த நடைபயணம் நிச்சயமாக புதிய வரலாற்றை படைக்கும். இந்த நடைபயணத்தின் தாக்கத்தை சமூக வலைத்தளங்களில் கொண்டு சென்று இளைஞர்களிடையே பேசு பொருளாக ஆக்க வேண்டியது ஊடகங்கள் உள்ளிட்ட அனைவரது கடமை. மது போதையையும் அதைவிட ஆபத்தான மதவாத அரசியல் போதையையும் தமிழ்நாட்டிற்குள் நுழைய விடாமல் தடுத்திட நாமெல்லாம் ஒன்று சேர வேண்டும். வைகோவின் நடைபயணம் நிச்சயமாக புதிய எழுச்சியை உருவாக்க இருக்கிறது. இந்த நடைபயணம் வெற்றி பெற நான் வாழ்த்துகிறேன்.
முதல்வர் வேண்டுகோள்
அதேநேரத்தில் உரிமையோடு அவரிடத்தில் உங்கள் அனைவரின் சார்பிலும் ஒரு கோரிக்கையை வைக்க விரும்புகிறேன் உங்களுடைய நோக்கம் பெரிது என்றாலும் உங்களுடைய உடல்நலம் எங்களுக்கு பெரியது. எனவே இந்த பயணத்தை நீங்கள் கவனமாக மேற்கொள்ள வேண்டும். அது மட்டுமல்ல இது போன்ற கடுமையான நடைபயணங்களை நீங்கள் இனி மேற்கொள்ளக்கூடாது என்பது எனது அன்பான வேண்டுகோள். நீங்கள் கட்டளையிட்டால் அதை செய்வதற்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் தயாராக உள்ளனர். அதனால்தான் உரிமையோடு கேட்கிறேன் நீங்கள் உடல்நலத்தை பாதுகாக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
