தமிழ்நாட்டில் மாபெரும் கனவுத் திட்டத்தை அறிவிக்க உள்ளேன். 2030 ஆம் ஆண்டுக்கான தொலைநோக்குப் பார்வை கொண்டதாக அந்தக் கனவுத் திட்டம் இருக்கும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
“உங்க கனவ சொல்லுங்க” திட்டத்தினை இன்று (9.1.2026) திருவள்ளுர் மாவட்டம், பொன்னேரி வட்டம், பாடியநல்லூரில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து பேசிய முதல்வர், “உங்கள் கனவைச் சொல்லுங்கள்; அதை நிறைவேற்றித் தருகிறோம்” என்று சொல்வதற்காகத்தான் நான் இங்கு வந்துள்ளேன். 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன் திருச்சியில் நடந்த மாநாட்டில் உரையாற்றியபோது, ஏழு வாக்குறுதிகளை வழங்கியிருந்தேன்: வளரும் வாய்ப்புகள் – வளமான தமிழ்நாடு; மகசூல் பெருகும் மகிழும் விவசாயம்; குடிமக்கள் அனைவருக்கும் குறையாத தண்ணீர்; அனைவருக்கும் உயர்தரக் கல்வி மற்றும் உயர்ந்த மருத்துவம்; எழில் மிகு மாநகரங்களின் மாநிலம்; உயர்தர ஊரகக் கட்டமைப்பு – உயர்ந்த வாழ்க்கைத் தரம்; அனைவருக்கும் அனைத்துமான தமிழ்நாடு. இவை எனது கனவுகள் என்று சொல்லி அந்த வாக்குறுதிகளைத் தந்தேன். இதையெல்லாம் நாம் இப்போது நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம்.
பொருளாதாரம்
பொருளாதாரத்தை உயர்த்துவோம் என்று சொன்ன நிலையில், தமிழகம் 11.19 விழுக்காடு வளர்ச்சியுடன் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக உள்ளது. இந்தியாவிற்குள் முதலீடு செய்ய வேண்டும் என்று எந்த நிறுவனமாவது நினைத்தால், அவர்களது முதல் தேர்வாகத் தமிழ்நாடு உள்ளது. அதேபோல், விவசாயத்திற்கும் பாசனப் பரப்பு அதிகரித்துள்ளது. விளைச்சல் அதிகரித்து, லாபம் தரும் தொழிலாக மாறியுள்ளது.
கல்வி
இந்தியாவிலேயே கல்விக்காகத் தமிழ்நாடு செய்யும் அளவிற்கு எந்த மாநிலமும் செலவு செய்வதில்லை என்று பெருமையோடு சொல்லும் அளவிற்கு, மாதிரிப் பள்ளிகள், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், இல்லம் தேடிக் கல்வி, புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன், நான் முதல்வன் என்று பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். நமது பிள்ளைகளும் பள்ளிக் கல்வி, உயர்கல்வி, போட்டித் தேர்வுகளில் அடித்துத் தூள் கிளப்புகிறார்கள்.
மருத்துவம்
அதைப்போல், மருத்துவத் துறையில் தமிழ்நாடு மெடிக்கல் டூரிசத்தின் மையமாக மாறி வருகிறது. வெளிநாடுகளிலிருந்தும் மருத்துவ சிகிச்சைகளுக்காக இங்கு வருகிறார்கள். தரமான மருத்துவத்தை உங்கள் வீடுகளுக்குக் கொண்டுவந்து சேர்க்கத்தான் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ என்று ஐ.நா. மன்றமே பாராட்டும் திட்டத்தை நாம் செயல்படுத்தியுள்ளோம். அதுமட்டுமல்லாமல், இன்னுயிர் காப்போம், நம்மைக் காக்க 48, இதயம் காப்போம், பாதம் காப்போம், நலம் காக்கும் 48, ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ என ஏராளமான திட்டங்கள் மக்களின் உயிர்களைப் பாதுகாத்துக்கொண்டிருக்கின்றன.
வளர்ச்சி
மற்ற மாநிலங்களில் மாநிலத்தின் தலைநகரமும் முதல்நிலை நகரங்களும்தான் வளர்ச்சி அடைந்திருக்கும். ஆனால், தமிழ்நாட்டில்தான் இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்களும் வளர்ந்துகொண்டிருக்கின்றன. சாலைகள், பாலங்கள், போக்குவரத்து, குடிநீர் வசதி என்று உட்கட்டமைப்பு வசதிகளைப் பெற்றுள்ளன. நகரங்கள், பேரூர்கள்மட்டுமல்ல, கிராமங்களும் வளர்ந்துள்ளன. எல்லாவற்றிற்கும் மேலாக, சமூக நீதி அரசை நாம் நடத்திக்கொண்டிருக்கிறோம்.
ஆதிதிராவிடர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள், சிறுபான்மையினர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், விளிம்புநிலை மக்கள் என எல்லோருக்கும் வாழ்வாதாரத் திட்டங்களைக் கொண்டு வருகிறோம்.
ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தபோது கொரோனா என்ற கொடுமையான பாதிப்பு உச்சத்தில் இருந்தது. நல்லதுக்கு எதற்கும் ஒத்துழைக்காத, தமிழ்நாட்டுக்கும் தமிழர்களுக்கும் மட்டுமே எதிராகச் சிந்தித்துச் செயல்படக்கூடிய ஒன்றிய அரசாக இருந்து வருகிறது ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது தமிழ்நாட்டின் உரிமைகளை எல்லாம் ‘ஆமாம் சாமி’ போட்டு அடகு வைத்த அதிமுக, இப்போது எதிர்க்கட்சியான பிறகு உண்மைக்குப் புறம்பான போலி செய்திகளை உருவாக்கி அவதூறு பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
முட்டுக்கட்டை போடும் ஆளுநர்
தமிழ்நாட்டுக்கும் ஒன்றிய அரசுக்கும் பாலமாக இருக்க வேண்டிய ஆளுநர், சட்டமன்றத்தில் நாம் நிறைவேற்றக்கூடிய சட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுவதைத் தனது முதல் வேலையாகச் செய்து வருகிறார்.
முதலிடத்தில் தமிழ்நாடு
இத்தனையையும் மீறி, மக்களான நீங்கள் எங்களுடன் இருப்பதால்தான் 2021-ல் கொடுத்த 505 வாக்குறுதிகளில் 404 வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம். இந்தச் சாதனையைச் செய்தது திராவிட மாடல். ஒன்றிய அரசு நிதியைத் தர மறுத்தும், புறக்கணித்தும், அவர்கள் வெளியிடக்கூடிய புள்ளிவிவரத்தில்கூட தவிர்க்க முடியாத அளவிற்குச் சாதனைகளைச் செய்து தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது. இதை திராவிட மாடல் அரசு செய்துகாட்டி உள்ளது.
தமிழகத்தின் கஜானாவைச் சுரண்டிய கடந்த கால அதிமுக ஆட்சியாளர்கள் மக்களால் விரட்டியடிக்கப்பட்ட பின்னர், நாம் மகளிர் உரிமைத் தொகையை கொடுக்க மாட்டோம் என்று சொன்னார்கள். இன்று 1 கோடியே 31 லட்சம் மகளிருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த மறுநாளே பெண்கள் அனைவரும் மகளிர் பேருந்தில் இலவசமாகப் பயணம் செய்ய முதல் கையெழுத்துப் போட்டவன் இந்த ஸ்டாலின்.
பிரேக் பண்ண முடியாத ரெகார்ட்
சொன்னதைமட்டுமல்ல, மக்களுக்குத் தேவை என்று தோன்றினால் அதைச் செய்துகொண்டிருக்கிறோம். குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டம், நான் முதல்வன் திட்டம் போன்ற தேர்தல் அறிக்கையில் சொல்லாத திட்டங்களையும் கொண்டுவந்தோம். 10 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகளை நமது திராவிட மாடல் ஆட்சியில் ஈர்க்கப்பட்டுள்ளது. பிரேக் பண்ண முடியாத ரெகார்ட் செய்ய வேண்டும் என்பதுதான் என் கொள்கை.
இரண்டு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு, 4000 கோயில்களுக்குக் குடமுழுக்கு, 8000 கோடி ரூபாய்க்கு மேல் கோயில்களின் சொத்துக்களை மீட்டுள்ளோம். அரசு ஊழியர்களின் 22 ஆண்டு கால கோரிக்கையான பழைய பென்ஷன் திட்டம், பொங்கல் பரிசு உள்ளிட்ட உங்கள் தேவைகளை உணர்ந்து பல நல்ல திட்டங்களைத் திராவிட மாடல் அரசு செய்து வருகிறது.
அதேபோல், உங்கள் கனவுகளை நீங்களே சொல்ல வேண்டும் என்று உருவாக்கியிருப்பது தான் ‘உங்கள் கனவைச் சொல்லுங்கள்’ திட்டம். இன்றிலிருந்து 30 நாட்களுக்கு தமிழ்நாட்டில் இருக்கும் எல்லாக் குடும்பங்களையும் அரசின் சார்பில் நியமிக்கும் குழு உங்களைச் சந்திக்கும். அவர்களிடம் உங்கள் கனவுகளைச் சொல்லுங்கள். அதையெல்லாம் அவர்கள் டிஜிட்டல் முறையில் பதிவு செய்துகொள்வார்கள். அவற்றை ஆய்வு செய்து, தமிழ்நாட்டில் மாபெரும் கனவுத் திட்டத்தை அறிவிக்க உள்ளேன். 2030 ஆம் ஆண்டுக்கான தொலைநோக்குப் பார்வை கொண்டதாக அந்தக் கனவுத் திட்டம் இருக்கும்”
நான் உறுதியாக உங்கள் கனவுகளை நிறைவேற்றுவேன். தமிழகத்தை தலை சிறந்த மாநிலமாக உயர்த்துவேன் என்பதே 2026ம் ஆண்டு தேர்தலுக்குகான என் வாக்குறுதி” என்று தெரிவித்தார்.
