மனிதர்களுக்கு காலம் கொடுத்திருக்கும் இரண்டாவது நெருப்பு AI – மு.க.ஸ்டாலின்

Published On:

| By Pandeeswari Gurusamy

மனிதர்களுக்கு காலம் கொடுத்திருக்கும் இரண்டாவது நெருப்பு AI என மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசி உள்ளார்.

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் மாணவர்களுக்கு 10 லட்சம் மடிக்கணினி வழங்கும் “உலகம் உங்கள் கையில்” திட்ட தொடக்க விழாவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகையில் :“மாணவர்களான உங்களைப் பார்க்கும்போது எனக்குள் புது உற்சாகம் வந்துவிட்டது. மடிக்கணினி வழங்கும் இந்த நிகழ்ச்சிக்கு ‘உலகம் உங்கள் கையில்’ என்று தலைப்பு கொடுத்திருக்கிறோம். ஏன் தெரியுமா? இது வெறும் தலைப்பு இல்லை; அதுதான் உண்மை. எதிர்காலமே உங்கள் கையில்தான் உள்ளது. அதை உரக்கச் சொல்லி உணர்த்தத்தான் இத்தனை பேர் இந்த விழாவுக்கு வந்துள்ளீர்கள்.

ADVERTISEMENT

புத்தாண்டை புத்துணர்வு மிக்க மாணவ சமுதாயத்தோடு தொடங்குவது ஒரு நேர்மறை ஆற்றலைத் தருகிறது. அடுத்த தலைமுறையான உங்களை மனதில் வைத்தே இந்த மொத்த விழாவையும் ஏற்பாடு செய்துள்ளோம். அதனால்தான் கல்விக் கண்காட்சியோடு இணைத்து இந்த அறிவு விழாவை, எதிர்காலத்திற்கு தேவையான விழாவாக ஏற்பாடு செய்துள்ளோம்.

திராவிட மாடல் ஆட்சி

மாணவர்களை வளர்த்தெடுத்தால்தான் மாநிலமும் நாடும் வளரும் என்பதால்தான் நமது ஆட்சியில் ‘நான் முதல்வன்’, ‘புதுமைப் பெண்’, ‘தமிழ்ப் புதல்வன்’, லேப்டாப் திட்டம் போன்ற திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.இன்று அறிவியலும், தொழில்நுட்பமும் வளர்ந்து ஒட்டுமொத்த உலகத்தையும் நமது கைகளுக்கு எட்டக்கூடிய தொலைவுக்கு கொண்டு வந்துவிட்டது. அதை உங்கள் கைகளுக்கே கொண்டு வந்து கொடுப்பதுதான் நமது திராவிட மாடல் ஆட்சி. நூறு அல்ல, ஆயிரம் அல்ல – 20 லட்சம் லேப்டாப்களை இளைய சமுதாயத்திற்கு கொடுக்கப் போகிறோம். அதன் முதல் கட்டமாகத்தான் இன்று 10 லட்சம் பேருக்கு லேப்டாப் வழங்கத் தொடங்கியுள்ளோம்.

ADVERTISEMENT
தேங்கி விடமாட்டோம்

திராவிட இயக்கம் என்பது அறிவு இயக்கம்; அறிவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இயக்கம். அதனால்தான் அறிவியல் சார்ந்த கண்டுபிடிப்புகளை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு உடனுக்குடன் கிடைக்கச் செய்ய நமது ஆட்சி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.எடுத்துக்காட்டாக, 25 ஆண்டுகளுக்கு முன்பே இனி வரும் காலம் தொழில்நுட்பக் காலம், கம்ப்யூட்டர்களின் காலம் என்பதை உணர்ந்து ஐடி பாலிசி, டைடல் பார்க் பாலிசி கொண்டு வந்தார் நமது முத்தமிழ் அறிஞர் கலைஞர். அதனால்தான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் உலக அளவில் சாஃப்ட்வேர் துறையில் முன்னணியில் உள்ளனர்.தமிழர்களாகிய நாம் எப்போதும் கடந்த கால பெருமையையும் பேசுவோம், எதிர்கால பெருமைகளுக்காக உழைப்போம். போலிப் பெருமைகளைப் பேசி தேங்கி விடமாட்டோம். அதற்கு உதாரணம்தான் இந்த விழா.

இரண்டாவது ‘நெருப்பு’ AI.

ஏன் இதையெல்லாம் சொல்கிறேன் என்றால், உங்களது திறனும் பகுத்தறிவும் அறிவியல் பார்வையும் மேம்படுத்தப்பட்டால்தான் புதிய கண்டுபிடிப்புகள் நிகழும், தொழில்நுட்பம் வளரும்.மனித இனம் நெருப்பையும் சக்கரத்தையும் கண்டுபிடித்த காலத்திலேயே ‘இது போதும்’ என்று சுணங்கி இருந்தால், இப்போது விண்வெளியில் ஆராய்ச்சி செய்யும் அளவுக்கு சாதனைகள் படைத்திருக்க முடியுமா? நிச்சயமாக முடியாது.மனிதர்களுக்கு காலம் கொடுத்திருக்கும் இரண்டாவது ‘நெருப்பு’ AI. அதை சரியாகப் பயன்படுத்தத்தான்…இன்று உங்கள் கைகளில் லேப்டாப் கொடுத்துள்ளோம்.

ADVERTISEMENT

என்னுடைய எண்ணம் எல்லாம் – நீங்கள் என்ன படிக்கிறீர்கள்? எத்தனை டிகிரி வாங்குகிறீர்கள்? எவ்வளவு உயர் பொறுப்புகளில் இருக்கிறீர்கள்? வெற்றிகரமாகத் தொழில் நடத்துகிறீர்களா? உங்களால் எத்தனை பேருக்கு வேலை கொடுக்க முடிகிறது? உங்கள் வளர்ச்சியால் இந்தச் சமுதாயத்திற்கு என்ன செய்வீர்கள்? சுருக்கமாகச் சொன்னால், இன்றைய இளைய சமுதாயம் மதிப்புமிக்க மனிதர்களாக, பெருமைமிக்க தமிழர்களாக உயர்ந்து நிற்க வேண்டும்; எல்லோரையும் வாழ வைக்க வேண்டும். இதுதான் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் எண்ணம்.

செலவல்ல முதலீடு

இன்று நீங்கள் படிப்பதற்கான அனைத்து வாய்ப்புகளையும் ஏற்படுத்தித் தருகிறோம். எங்களைப் பொறுத்தவரை இது செலவுத் திட்டம் இல்லை; எதிர்காலத் தலைமுறைக்கான கல்வியில் செய்யப்படும் முதலீடு.படித்து உங்கள் எதிர்கால வாழ்க்கைப் பாதையை நல்ல பாதையாகத் தேர்ந்தெடுங்கள். மூன்று-நான்கு ஆண்டுகள் படிக்கும் டிகிரி மட்டுமே போதும் என்று நினைத்துவிடக் கூடாது. எல்லாத் துறைகளிலும் தினமும் புதிய வளர்ச்சிகள் வந்துகொண்டே இருக்கின்றன. அதனால் டிகிரி படிப்போடு நிற்காமல், தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு நீங்கள் தொடர்ந்து அப்கிரேட் ஆகிக்கொண்டே இருக்க வேண்டும். இனிமேல் தொழில்நுட்பத்தைப் படிப்பது ஆப்ஷன் இல்லை; உங்கள் துறையில் நிலைத்து நிற்பதற்கு அவசியம். தொழில்நுட்பம் எல்லாத் துறைகளிலும் நுழைந்துவிட்டது; எல்லோரது கைகளிலும் வந்துவிட்டது. அதை முறையாகப் பயன்படுத்தி நாம் முன்னேற வேண்டும்.

முட்டாள்தனம்

ஆனால் AI ஒருபோதும் மனிதர்களை மாற்றீடு செய்ய முடியாது. நமது வேலைகளை இன்னும் விரைவாகவும், சிறப்பாகவும் செய்வதற்குதான் AI துணை இருக்கும். இன்னும் அடிப்படையில் பல வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளன; அதைப் பயன்படுத்தி முன்னேற வேண்டும்.கடந்த தலைமுறை இளைஞர்கள் அறிவுக்காக பல புத்தகங்களைத் தேடி அலைந்தார்கள். ஆனால் இப்போது உங்களுக்கு தேவையான தகவல்களையும் அறிவையும் எப்போது வேண்டுமானாலும், எந்த இடத்தில் இருந்தும் பெறலாம்.இந்த வளர்ச்சியை குறை சொல்லி முடங்கிப்போவது முட்டாள்தனம். இதைப் பயன்படுத்தி வாழ்வின் உச்சத்தைத் தொட வேண்டியதுதான் உங்களின் பணி.

இன்று உங்கள் கைகளில் வந்திருக்கும் லேப்டாப்பை படம் பார்க்கவோ, கேம்ஸ் விளையாடவோ மட்டும் பயன்படுத்தப் போகிறீர்களா? அல்லது உங்கள் தொழில் வளர்ச்சிக்காகப் பயன்படுத்தப் போகிறீர்களா? என்பதுதான் கேள்வி.எல்லாவற்றிற்கும் நல்லது-கெட்டது என்று இரு பக்கங்கள் உள்ளன. நீங்கள் எந்தப் பக்கத்தைத் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே வெற்றி உங்கள் பக்கம் வரும்.வேறு ஏதேனும் சந்தர்ப்பத்தில் நாம் சந்திக்கும்போது, உங்கள் வெற்றிகளைச் சொல்லி நீங்கள் மகிழ்ச்சி அடைய வேண்டும்; அதில்தான் நான் பெருமைப்படுவேன்.உலகத்தோடு போட்டி போடுங்கள். அந்தப் போட்டியில் வெற்றி பெறுவதற்கான கருவியைத்தான் இன்று உங்கள் கையில் கொடுத்துள்ளோம். வெற்றி உங்களுக்காகக் காத்திருக்கிறது.நான் எப்போதும் சொல்வது போல் – நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம். படியுங்கள்… படியுங்கள்… படியுங்கள்! உங்களைப் பார்த்துக்கொள்ள நான் இருக்கிறேன். உங்கள் குடும்பத்தைப் பார்த்துக்கொள்ள நம் திராவிட மாடல் அரசு இருக்கிறது.பணம் தேவைப்படும் அம்மாக்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை, படிக்கப் பணம் வேண்டும் என்றால் மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய், பொங்கல் கொண்டாட மூன்றாயிரம் ரூபாய், பசியோடு பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு காலை உணவு, வேலை கிடைக்க உலக அளவில் தொழிற்சாலைகளைக் கொண்டு வருதல்…மொத்தத்தில் பொருளாதாரத்தைப் பாருங்கள் – டபுள் டிஜிட் வளர்ச்சியைக் கொண்டு வந்துள்ளோம்.

சூப்பர் ஸ்டார் ஸ்டேட்

அதனால்தான் உலகப் பத்திரிகைகள் தமிழகத்தை ‘சூப்பர் ஸ்டார் ஸ்டேட்’ என்று பாராட்டுகின்றன.இதுவெல்லாம் போதுமா? இன்னும் வளர்ச்சி வேண்டும். தமிழகம் உங்களை நம்பித்தான் உள்ளது. உலகம் உங்கள் கையில் உள்ளது. ஜெயித்து வாருங்கள்! நீங்களும் ஜெயித்து வாருங்கள்; நாங்களும் ஜெயித்து வர வேண்டும். எப்போதும் உங்களோடு இருப்போம்.தமிழ்நாடு வெல்லட்டும்!” என்று தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share