தமிழ்நாடாக இருப்பதே பலரது கண்ணை உறுத்துகிறது! – முதல்வர் ஸ்டாலின்

By Pandeeswari Gurusamy

|

Published on 13 Apr 2026, 10:47 PM

Stalin

திருவள்ளூரில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் இன்று (ஏப்ரல்13) திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார்.

அப்போது திமுகவின் நலத்திட்டங்கள் மற்றும் தேர்தல் அறிக்கை குறித்து விளக்கிய முதல்வர் ஆவடி தொகுதியில் நாசர், திருவள்ளூர் தொகுதியில் வி.ஜி. ராஜேந்திரன், கும்மிடிப்பூண்டி தொகுதியில் கோவிந்தராஜன், பூவிருந்தவல்லி தொகுதியில் கிருஷ்ணசாமி , பொன்னேரி தொகுதியில் துரை சந்திரசேகர், திருத்தணி தொகுதியில் கிருஷ்ணமூர்த்தி ஆகியோருக்கு வாக்களிக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.

ADVERTISEMENT

தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், “தமிழ்நாட்டின் குறுக்கும் நெடுக்கும் உழைப்பால் அளந்து, தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் என்ன தேவை என்று மைக்ரோ லெவலில் கவனித்து செயல்படுத்திக் கொண்டு இருக்கிறேன்! அதுதான், உங்கள் முன்னால் நிற்கும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்!

திருவள்ளூர் மாவட்டத்துக்கு போகிறோம் என்று சொன்னதும், எனக்கு முதலில் நினைவுக்கு வந்த பெயர், டானியா. நாசருக்கு தெரியும்; தொடர்ந்து இரண்டு நாட்களாக டி.வி.யில் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்; சோசியல் மீடியாவிலும் பார்த்தேன். அரியவகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைதான் டானியா என்ற சிறுமி. ஆவடி, வீராபுரத்தில் இருக்கிறார்கள். அந்தக் குழந்தையை, என் குழந்தையைப் போன்று கவனித்து, பெரிய ஆபரேஷன் செய்து, அவர்கள் முகத்தில் அழகான புன்னகை தோன்றுவதைப் பார்த்துப் பார்த்து இன்றைக்கும் நான் மகிழ்ச்சி அடைந்து கொண்டிருக்கிறேன்.

ADVERTISEMENT

இங்கு இருக்கிறாரே நம்முடைய நாசர், அவருக்கு எத்தனை முறை ஃபோன் செய்து அந்தக் குழந்தையைப் பற்றி விசாரித்தேன் என்று அவருக்குத் தெரியும். அந்தக் குழந்தை, “நான் படித்து, டாக்டராகி, என்னைப் போன்று இருப்பவர்களுக்கு இலவசமாக சிகிச்சையளிப்பேன்” என்று சொன்னபோது, நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை! “எல்லாருக்கும் எல்லாம்!” “அனைவரும் சமம்!” என்று வாய் வார்த்தைக்காக சொல்பவன் அல்ல, இந்த ஸ்டாலின். “கடையனுக்கும் கடைத்தேற்றம்” என்று செயல்களில் காண்பிப்பவன்.

அதேபோன்று, ஆவடி – பருத்திப்பட்டில், நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த திவ்யா – ப்ரியா – தர்ஷினி என்ற மூன்று மாணவிகள். அவர்கள் படிக்கும் பள்ளிகளில், தாங்கள் சந்திக்கும் பாகுபாடுகளைச் சொல்லி, வீடியோ வெளியிட்டிருந்தார்கள். நான் சோசியல் மீடியாவில் பார்த்தேன். சமூகத்தின் இந்த மனநிலையை உடைக்க வேண்டும் என்று அப்போதே நினைத்த நான், உடனே நாசரை அழைத்தேன். விசாரித்தேன். அவர்கள் வீட்டுக்கே நேராகச் சென்றேன். அங்கு சென்று, அவர்கள் அன்பாக கொடுத்த உணவைச் சாப்பிட்டு, இங்கு அன்பும் – சமத்துவமும் மட்டும்தான் நிலைக்கும் என்று காட்டினேன்.

ADVERTISEMENT

இப்படி, ஒவ்வொரு செயலிலும், நம்முடைய தமிழ்நாட்டை முன்னோக்கி அழைத்துக் கொண்டு போக வேண்டும் என்றுதான், போராடிக் கொண்டு இருக்கிறேன். ஆம், போராடுகிறேன். தொடர்ந்து போராடுவேன். போராடிக் கொண்டேதான் இருப்பேன். போராடியேதான் நான் சாவேன். ஏன் என்றால், தமிழ்நாடு – தமிழ்நாடாக இருப்பதே பலரது கண்ணை உறுத்துகிறது!

ஒன்றிய அரசின் ஏஜெண்ட்டாக, தமிழ்நாட்டில் ஏட்டிக்குப் போட்டி அரசாங்கம் நடத்தலாம் என்று நினைத்து ஒருவர் வந்தார். யார்? ஆளுநர் ரவி. “இனிமேல் – இந்த மாநிலத்தை – தமிழ்நாடு என்று அழைக்கக் கூடாது; தமிழகம் என்றுதான் சொல்ல வேண்டும்” என்று சொன்னார். பல ஆண்டுகாலமாக போராடி, தியாகி சங்கரலிங்கனார் அவர்கள், உண்ணாவிரதம் இருந்து, உயிர்கொடுத்தும் நிறைவேறாத கோரிக்கையை, தமிழன்னையின் தலைமகனாக வந்த நம்முடைய பேரறிஞர் அண்ணாதான், நம்முடைய தாய்க்கு “தமிழ்நாடு” என்று பெயர் சூட்டி நிறைவேற்றினார். இதை நாம் விட்டுக் கொடுக்க முடியுமா? விட்டுக் கொடுத்தால் நாம் எல்லாம் தமிழர்கள்தானா?

தமிழ்நாடு என்று சொல்லக் கூடாது என்று சொன்னது, ஆர்.என்.ரவி என்ற தனிநபரின் குரல் மட்டும் அல்ல; அது, பா.ஜ.க.வின் குரல்! பின்னால் இருந்து இயக்கும், ஆர்.எஸ்.எஸ்.-இன் குரல்!

அதுமட்டுமல்ல, பா.ஜ.க.-வினர் என்னவெல்லாம் பேசினார்கள்… தமிழ்நாடு பெயரை மட்டுமல்ல; நாங்கள் நினைத்தால், தமிழ்நாட்டையே இரண்டாக உடைப்போம் – அந்த பவர் எங்களுக்கு இருக்கிறது என்று திமிராக பேசினார்கள்.

சவால்விட்டு சொல்கிறேன்! இந்த ஸ்டாலின் உயிரோடு இருக்கும் வரைக்கும் – தி.மு.க. இருக்கும் வரைக்கும் – தமிழ்நாட்டை உங்களால் தொட்டுக்கூட பார்க்க முடியாது! தைரியம் இருந்தால், தமிழ்நாட்டுக்கு தட்சிணப் பிரதேசம் என்று பெயர் வைப்போம் என்று சொல்லுங்கள் பார்ப்போம். அனைவரும், அடிமைசாமி போன்று வாய்மூடிக் கொண்டு இருக்க மாட்டோம்! நாங்கள் எல்லாம் சுயமரியாதைக்காரர்கள்!

இப்போது தேர்தலுக்காக வந்த பா.ஜ.க., தமிழ்நாட்டில் இப்போது என்ன பேசுகிறார்கள்? அ.தி.மு.க. வெற்றி பெற்றாலும், அது N.D.A. கூட்டணி அரசாகத்தான் இருக்கும். மும்மொழிக் கொள்கையை கொண்டு வருவோம் என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

யாரோ ஒருவர் வாய் தவறி பேசிய பேச்சு அல்ல இது; ஒன்றிய அமைச்சர்களாக இருக்கும் பியுஷ் கோயல் அவர்கள், தர்மேந்திர பிரதான் அவர்கள், இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே அவர்கள் என்று அனைவரும் இதையேதான் பேசிக் கொண்டு இருக்கிறார்கள்.

நான் கேட்கிறேன், இதைக் கண்டித்து, பழனிசாமி வாயிலிருந்து, ஒரே ஒரு வார்த்தையாவது வந்திருக்கிறதா? ஆமாம்சாமி போட்டு, அடிமைசாமியாக இருக்கும் பழனிசாமிக்கு, இதையெல்லாம் எதிர்த்துக் கேட்க, முதுகெலும்பு இருக்கிறதா? பழனிசாமியும், பழனிசாமிக்கு படியளக்கும் ஆர்.எஸ்.எஸ். சாமிகளும் என்ன திட்டம் போட்டாலும் தமிழ்நாட்டின் வளர்ச்சியைத் தடுக்க முடியாது!”என்றார்.

மேலும் பேசிய அவர், “கடந்த சில ஆண்டுகளாக, தமிழ்நாட்டிற்குள் கலவரத்தை உண்டாக்க எப்படிப்பட்ட சதித்திட்டங்களை எல்லாம் போட்டார்கள்.

இன்றைக்கு நம்முடைய தமிழ்நாட்டில் வடமாநிலங்களை சேர்ந்த ஏராளமான சகோதர-சகோதரிகள் வாழ்கிறார்கள். அவர்கள் என்ன சொல்கிறார்கள்? “எங்களுடைய மாநிலங்களில் மறுக்கப்பட்ட பல வாய்ப்புகள் தமிழ்நாட்டில் கிடைக்கின்றன. எங்களின் வாழ்க்கைத்தரம் உயர்கிறது” என்று மகிழ்ச்சியுடன் பேட்டி கொடுக்கிறார்கள்.

ஆனால், பா.ஜ.க. என்ன செய்தது? இங்கே வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுகிறார்கள் என்று இல்லாத புரளியை எல்லாம் கிளப்புகிறார்கள். இதுபோன்ற பல கலவரத் திட்டங்களை சுக்குநூறாக உடைத்திருக்கிறோம். ஒவ்வொரு அவதூறையும் உண்மைகளால் உடைத்து எறிந்திருக்கிறோம்.

தமிழ்நாட்டின் மீது இப்படி அபாண்டமாக பழி சுமத்துகிறீர்களே என்று பழனிசாமிக்கு ஒருமுறையாவது கோபம் வந்ததா?

ஒடிசா மாநிலத்தில் வாக்கு வாங்க வேண்டும் என்று, தமிழர்களை திருடர்கள் என்று சொல்கிறீர்களே, இது என்ன நியாயம் என்று பழனிசாமி பொங்கி எழுந்தாரா?

மதுரை-கோவைக்கு மெட்ரோ ரயில் தர மாட்டோம் என்று அடாவடி செய்கிறார்களே, பழனிசாமிக்கு ரோஷம் பொத்துக் கொண்டு வந்ததா?

பத்து வருடத்திற்கும் மேல், செங்கல் செங்கல்லாக எய்ம்ஸ் மருத்துவமனையை இன்னும் கட்டுகிறார்களே என்று பழனிசாமிக்கு ஆத்திரம் வந்ததா?

விவசாயிகளை வஞ்சிக்கும் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து, பழனிசாமி எதாவது கொந்தளித்தாரா?

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக, பழனிசாமி கோபப்பட்டாரா?

இப்போதுகூட, மும்மொழிக் கொள்கை என்று பேசும் பா.ஜ.க-வை எதிர்த்து போராடினாரா?

தமிழ்நாட்டை பாதிக்கும் தொகுதி மறுசீரமைப்பை எதிர்த்து பழனிசாமி என்றைக்காவது குரல் கொடுத்திருக்கிறாரா?

கிறிஸ்தவர்களுக்கு எதிராக F.C.R.A. சட்டம் இப்போது கொண்டுவரப் போகிறார்கள், அதை எதிர்த்து பழனிசாமி பொங்கி எழுந்தாரா?

பொதுசிவில் சட்டம் என்று பேசுகிறார்களே, அதை பழனிசாமி தட்டிக் கேட்டாரா?

இப்படி தமிழ்நாட்டிற்காகவும் – தமிழ்நாட்டு மக்களுக்காகவும் எந்தக் குரலையும் எழுப்பாமல், எந்த முகத்துடன் வெட்கமில்லாமல் வாக்கு கேட்டு வருகிறார் பழனிசாமி?

தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்து கொண்டிருக்கும் பா.ஜ.க-விற்கு பல்லக்கு தூக்குகிறீர்களே, மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி அவர்களே, கொஞ்சமாவது சூடு – சுரணை – சுயமரியாதை இருக்க வேண்டாமா உங்களுக்கு?

பா.ஜ.க.-விற்கு பாதம்தாங்கியாக இருந்து துரோகம் செய்வதால் உங்களுக்கு கிடைக்கும் வெகுமானம் எவ்வளவு? எவ்வளவு வெகுமானம் வந்தாலும், தமிழ் மானத்தை அடகு வைக்கலாமா?

கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். பழனிசாமி தமிழ்நாட்டை ஆட்சி செய்த நான்கு ஆண்டுகள் என்பது, ஊழல்களும் – மக்கள் விரோத நடவடிக்கைகளும் நிறைந்த, இருண்ட ஆட்சிக்காலம்.

சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், அவருடைய ஆட்சியின் அடையாளங்கள் என்ன? பொல்லாத ஆட்சிக்கு, பொள்ளாச்சியே சாட்சி! துப்புக்கெட்ட ஆட்சிக்கு தூத்துக்குடியே சாட்சி! கொடூரமான ஆட்சிக்கு கொடநாடே சாட்சி! கேடுகெட்ட ஆட்சிக்கு சாத்தான்குளமே சாட்சி என்று எல்லாமே நெகட்டிவாகத்தான் இருக்கிறது. தவறுக்கு மேல் தவறுகள் செய்த பழனிசாமி, தன்னுடைய தவறுகளில் இருந்து தப்பிக்க சரண்டரான இடம்தான் பா.ஜ.க. வாஷிங்மெஷின். தன்னுடைய தவறுகளிலிருந்து தப்பிக்க, அவர் கொடுத்த விலைதான், தமிழ்நாட்டினுடைய உரிமைகள்.

அ.தி.மு.க-விற்கு விழும் ஒவ்வொரு வாக்கும், பா.ஜ.க.-விற்கு விழும் வாக்குகள், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு விழும் தடைக்கற்கள்!

எனவே, தமிழ்நாட்டை வட்டமிடும் பா.ஜ.க. எனும் பருந்தை விரட்டியடிக்க வேண்டும். அதனால்தான் நடக்கும் தேர்தல், தமிழ்நாடு வெர்சஸ் N.D.A. என்று அழுத்தமாக சொல்கிறேன்.” என தெரிவித்தார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel