பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து நாளை தமிழக முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளார் என்ற தகவல் வெளியான நிலையில் 22 ஆண்டுகால போராட்டம் முடிவுக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு ஜாக்டோ ஜியோ அமைப்பினரிடையே எழுந்துள்ளது.
சம வேலைக்கு சம ஊதியம், பழைய ஓய்வூதியத் திட்டம், புதிய பணியிடங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் 8 ஆவது நாளாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வரும் 6ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டம் அறிவித்துள்ளனர்.
இதனிடையே சென்னை தலைமை செயலகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகளிடம் அமைச்சர்கள் எ.வ. வேலு, தங்கம் தென்னரசு ஆகியோர் இன்று(ஜன. 2) பேச்சுவார்த்தை நடத்தினர். இந்நிலையில்பேச்சுவார்த்தையில் சங்க நிர்வாகிகள் தரப்பில்
பழைய ஓய்வூதியத் திட்டம், காலிப் பணியிட நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது
பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜாக்டோ ஜியோ அமைப்பினர், “பழைய ஓய்வூதிய திட்டத்தை முதல்வர் நாளை அறிவிப்பார் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறோம். சுமார் 22 ஆண்டுகளாக இதற்காக நாங்கள் போராடி வருகிறோம். மகிழ்ச்சியான செய்தியை முதல்வர் அறிவிப்பார் என எதிர்பார்க்கிறோம். பழைய ஓய்வூதிய திட்டம் எங்களது போராட்டத்தின் முக்கிய நோக்கம்.
நாளை முதல்வரின் அறிவிப்பை பொறுத்து மாநில நிர்வாகிகளுடன் ஆலோசித்து நாங்கள் ஏற்கனவே அறிவித்த வேலை நிறுத்த போராட்டம் குறித்த முடிவை எடுக்க உள்ளோம்.
மற்ற கோரிக்கைகள் அனைத்தையும் அமைச்சர்களிடம் பேசி இருக்கிறோம். அது குறித்த அறிவிப்பும் நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கிறோம்” என தெரிவித்துள்ளனர்.
