லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக பணியாற்றும் வைத்திலிங்கம் – மு.க.ஸ்டாலின்

Published On:

| By Pandeeswari Gurusamy

வைத்திலிங்கம் சட்டமன்றத்தில் அமர்ந்திருக்கக்கூடிய காட்சியை நான் பார்த்திருக்கிறேன். அவருடைய முகத்தில் ஒரு சோர்வு இருந்துகொண்டே இருக்கும். எதையோ பறிகொடுத்தது போல் சட்ட மன்றத்தில் அமர்ந்திருப்பார். வேண்டா வெறுப்போடு சில கேள்விகளைக் கேட்பார். இந்தக் காட்சியை நான் பழைய நேரங்களில் சட்டமன்றத்தில் பார்த்தது உண்டு. ஆனால் அது என்ன என்பதை இப்போதுதான் உணர்ந்துகொண்டேன். ‘நாம் சுயமரியாதையோடு நாம் பணியாற்ற முடியவில்லையே’ என்ற ஏக்கம்தான் அவருக்கு இருந்துள்ளது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூரில் இன்று (ஜனவரி 2) மாற்றுக் கட்சியில் இருந்து பத்தாயிரம் பேர் திமுகவில் இணைந்தனர். இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டார்.

ADVERTISEMENT

விழாவில் பேசிய திமுக தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின்,”இது மாற்றுக் கட்சியினர் இணையும் விழாவா? அல்லது இணைப்பு விழா மாநாடா? என்று எண்ணக்கூடிய அளவுக்கு இந்த நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கிறது. இவ்வளவு பெரிய கூட்டத்தில் நாம் பேசாமல் போனால் உங்களுக்கும் நிம்மதி இருக்காது, எனக்கும் நிம்மதி இருக்காது. அதனால் தான் நானே கேட்டு பேசுகிறேன்.

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தாய் கழகமா? திராவிட முன்னேற்றக் கழகத்தில் அண்ணா அறிவாலயத்திற்கு வந்து தன்னை இணைத்துக்கொண்டார். ஒரு வாரத்தில் இந்த சிறப்பான இணைப்பு நிகழ்ச்சியை நடத்திக்கொண்டிருக்கிறார் என்றால், நான் எதிர்பார்த்ததை விட அதிகமான அளவிற்கு இந்த இயக்கத்திற்கு தன்னை ஒப்படைத்துக்கொண்டு சிறப்பாக பணியாற்றுவார் என்ற நம்பிக்கை எனக்கு மட்டுமல்ல, திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கக்கூடிய ஒவ்வொருவருக்கும் வந்திருக்கிறது என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

ADVERTISEMENT

நான் வைத்திலிங்கம் அவர்களை பல நேரங்களில் பார்த்ததுண்டு. மறைந்த மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள், அதைத் தொடர்ந்து அம்மையார் ஜெயலலிதா அவர்களுடைய தலைமையில் நமது வைத்திலிங்கம் பணியாற்றிய நேரத்தில், அவர்களுக்கு விசுவாசமாக இருந்து சிறப்பாக, சுறுசுறுப்பாக எல்லோரையும் கவரக்கூடிய வகையில் பணியாற்றிய அந்தக் காட்சியையும் நான் பார்த்தது உண்டு.

எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக கட்சி உடைந்து சின்னா பின்னமாகி இருந்த நிலையில், வைத்திலிங்கம் சட்டமன்றத்தில் அமர்ந்திருக்கக்கூடிய காட்சியை நான் பார்த்திருக்கிறேன். அவருடைய முகத்தில் ஒரு சோர்வு இருந்துகொண்டே இருக்கும். எதையோ பறிகொடுத்தது போல் சட்ட மன்றத்தில் அமர்ந்திருப்பார். வேண்டா வெறுப்போடு சில கேள்விகளைக் கேட்பார். இந்தக் காட்சியை நான் பல நேரங்களில் சட்டமன்றத்தில் பார்த்தது உண்டு. ஆனால் அது என்ன என்பதை இப்போதுதான் உணர்ந்துகொண்டேன். ‘

ADVERTISEMENT

‘சுயமரியாதையோடு நாம் பணியாற்ற முடியவில்லையே’ என்ற ஏக்கம்தான் அவருக்கு இருந்துள்ளது. என்ன,  வைத்திலிங்கம் கொஞ்சம் லேட்டாக வந்து சேர்ந்துள்ளார். லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக பணியாற்றப் போகிறார். அதுதான் நமக்கு ஒரு மகிழ்ச்சியைத் தந்துகொண்டிருக்கிறது.

தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிறது. தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை நாம் பெறப் போகிறோம் என்பதில் யாருக்கும் எள்ளளவும் சந்தேகம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இன்று இணைந்திருக்கக்கூடிய தொண்டர்களையும் வைத்திலிங்கத்தையும் வரவேற்று, தேர்தல் பணியாற்ற உறுதி ஏற்போம், சபதம் ஏற்போம்.

மீண்டும் நம்முடைய திராவிட மாடல் அரசு உதயமாகி, ஏற்கனவே செய்திருக்கக்கூடிய சாதனைகளை மிஞ்சக்கூடிய அளவிற்கு மேலும் பல சாதனைகளை உருவாக்கித் தருவதற்கு நம்முடைய படை மும்முரமாக இருக்க வேண்டும். வெல்வோம்! 200 படைப்போம்! வரலாறு வெல்வோம்! ஒன்றாக!” என்று கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share