இந்தியத் துணைக்கண்ட வரலாறு தமிழ்நாட்டிலிருந்து தொடங்கி எழுதப்பட வேண்டும். அதேபோல், வளர்ச்சி வரலாற்றை தெற்கில் தமிழ்நாட்டிலிருந்து தொடங்கி எழுதப்பட வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் தனியார் தொலைக்காட்சி நடத்தும் கருத்தரங்கை தொடங்கி வைத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, இந்திய அரசியலில் தனித்துவமான மாடலாகத் திகழ்வது திராவிட மாடல் ஆகும். எல்லா மாவட்டங்களும், இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்களும், ஊரகப் பகுதிகளும் கூட சமமாக வளர்ச்சி அடைந்துள்ளன. சிறப்பான உட்கட்டமைப்பு வசதிகளும், போக்குவரத்து வசதிகளும் நிறைந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.இந்த மாநிலத்திற்கு எங்களிடம் பரந்துபட்ட அரசியல் பார்வை உள்ளது. இங்கு சமூக நீதி, சமத்துவம், சமூக நல்லிணக்கம் மற்றும் மக்கள் நலன் ஆகியவற்றையே மிக முக்கியமாகக் கருதுகிறோம். திறமையான ஆட்சி நடைபெறுவதால்தான், இந்தியாவில் மிக உயர்ந்த 11.19 சதவீத பொருளாதார வளர்ச்சியை திராவிட மாடல் ஆட்சியில் சாத்தியப்படுத்தியுள்ளோம்.இந்த வளர்ச்சியை நாங்கள் சாதாரணமாக அடைந்துவிடவில்லை. சமூகத்தில் எந்த ஒரு பிரிவும் விடுபட்டுவிடக் கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்து, திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தியுள்ளோம்.
ஒருபுறம் ஒன்றிய பாஜக அரசு தொடர்ந்து ஏற்படுத்தி வரும் அரசியல் நெருக்கடிகளை எதிர்கொண்டு, மறுபுறம் தொலைநோக்குப் பார்வையுடன் எதிர்காலத்திற்கான திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகிறோம். தேவைகளுக்கு ஏற்ப எங்கள் கொள்கைகளும் பரிணமித்து வருகின்றன.மகளிர், குழந்தைகள், மாணவர்கள், இளைஞர்கள், தொழில் முனைவோர், உழவர்கள், நெசவாளர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என்று அனைத்துத் தரப்பினருக்கும் நன்மைகளைச் செய்து வருகிறோம்.
2021 தேர்தல் அறிக்கையில், மகளிருக்கு ரூ.1000உரிமைத் தொகை தருவோம் என்று சொன்னபோது எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன. அதே சமயம், அவர்களும் பெண்களுக்கு ரூ.1500 கொடுப்போம் என்று தங்கள் தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தனர். ஆனால் மக்கள் அவர்களின் வாக்குறுதியை நம்பவில்லை. திமுக சொன்னால் செய்யும் என்ற நம்பிக்கையுடன் வாக்களித்தனர்.
திராவிட மாடல் நாட்டிற்கு வழிகாட்டி
அந்த நம்பிக்கையை நாங்கள் காப்பாற்றினோம். இப்போது ஒரு கோடி 30 லட்சத்து 69 ஆயிரத்து 831 மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 ரூபாய் வழங்கி வருகிறோம். இதுவரை ரூ.33,461 கோடி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், மகளிருக்கு பேருந்துகளில் கட்டணமில்லா பயணம் என்று சொன்ன திமுக வெற்றி பெற்ற மறுநாளே விடியல் பயணத் திட்டத்தில் பெண்கள் கட்டணமில்லாமல் பயணிக்கத் தொடங்கினர். இதுவரை ரூ. 13,387 கோடி மதிப்பிலான பயணங்களை அவர்கள் மேற்கொண்டுள்ளனர். பின்னர் திருநங்கைகளுக்கும், மலைப்பகுதி மக்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் இத்திட்டத்தை விரிவாக்கம் செய்தோம். இந்த இரண்டு திட்டங்களையும் தற்போது பல மாநிலங்கள் பின்பற்றத் தொடங்கியுள்ளன. இதுதான் திராவிட மாடல் நாட்டிற்கு வழிகாட்டி என்பதற்கான அடையாளம்.
இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. நாள்தோறும் 19 லட்சத்து 34 ஆயிரத்து 69 குழந்தைகள் சத்தான உணவை உட்கொண்டு வகுப்பறைக்குள் அடியெடுத்து வைக்கின்றனர்.தொடர்ந்து இத்திட்டத்தை விரிவுபடுத்தினோம். காலை உணவு சமைக்கும் சுமையைப் பெண்களிடமிருந்து குறைத்தோம். இதன் எதிரொலி சமூக முன்னேற்றக் குறியீடுகளில் தெரிய வந்தது.
மாணவர்களின் இடைநிற்றலைத் தவிர்க்கும் வகையில், 12 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1000 வழங்கும் புதுமைப்பெண் மற்றும் தமிழ் புதல்வன் திட்டங்களைத் தொடங்கினோம். 2.15 கோடிக்கும் அதிகமான மக்கள் பயன்பெறும் வகையில் மக்களைத் தேடி மருத்துவம், விபத்து ஏற்பட்ட முதல் 48 மணி நேரத்தில் சிகிச்சைச் செலவை அரசே ஏற்கும் இன்னுயிர் காப்போம் – நம்மை காக்கும் 48 போன்ற திட்டங்கள் உள்ளன.
மேலும்இல்லம் தேடிக் கல்வி, எண்ணும் எழுத்தும், இதயம் காப்போம், ஊட்டச்சத்தை உறுதி செய், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம், கலைஞர் கனவு இல்லம், கலைஞர் கைவினைத் திட்டம், வடசென்னை வளர்ச்சித் திட்டம், தோழி விடுதி, ஸ்டார்ட்அப் தமிழ்நாடு, பேராசிரியர் அன்பழகனார் பள்ளி மேம்பாட்டுத் திட்டம், பெருந்தலைவர் காமராஜர் கல்லூரி மேம்பாட்டுத் திட்டம், அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகைத் திட்டம், வேர்களைத் தேடி, தாயுமானவர் அன்புக்கரங்கள் என வரிசையாக ஏராளமான திட்டங்களை உருவாக்கியுள்ளோம்.
உட்கட்டமைப்பைப் பொறுத்தவரை, கலைஞர் நூற்றாண்டு நூலகம் (கிண்டி), கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை, கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம், திருச்சி பஞ்சப்பூரில் கலைஞர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், கீழடி அருங்காட்சியகம், பொருநை அருங்காட்சியகம், கோவை ஜி.டி. நாயுடு பாலம், மதுரை வீரமங்கை வேலு நாச்சியார் மேம்பாலம் உள்ளிட்ட ஏராளமான திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம்.
இந்தியத் துணைக்கண்ட வரலாறு தமிழ்நாட்டிலிருந்து தொடங்கி எழுதப்பட வேண்டும். அதேபோல், வளர்ச்சி வரலாற்றை தெற்கில் தமிழ்நாட்டிலிருந்து தொடங்கி எழுதப்பட வேண்டும். இந்த வளர்ச்சி வரலாற்றைத் தாங்கிக்கொள்ள முடியாதவர்கள் WhatsApp யுனிவர்சிட்டியில் பொய்களைப் பரப்பிக்கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் எங்கள்மீது வைக்கும் குற்றச்சாட்டுகள் எல்லாமே பழைய ஸ்கிரிப்ட் தான்.
- அரசியல் வாரிசு: இதற்கு ஏற்கனவே பதில் சொல்லிவிட்டேன். யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஆனால் மக்களுக்கு முன் நின்று நம்பிக்கை பெற்று வாக்குகள் வாங்கினால்தான் வெற்றி பெற முடியும்.
- ஊழல் : ஊழல் குற்றச்சாட்டுகள் எதையும் ஆதாரத்துடன் யாராவது நிரூபித்துள்ளார்களா? கற்பனைக் குற்றச்சாட்டுகளைச் சொல்லி பழி சுமத்திக்கொண்டிருக்கிறார்கள். பாஜகவிடம் நான் கேட்பது என்ன என்றால் உங்களுடன் இருப்பவர்கள் எல்லாமே ஊழல்வாதிகள்தானே? உச்ச நீதிமன்றம் வரை சென்று தண்டிக்கப்பட்டவர்கள்கூட உள்ளனர். அதிமுக மீது நீங்கள் கூட்டணி இல்லாதபோது எத்தனை குற்றச்சாட்டுகள் சொன்னீர்கள்? இப்போது உங்கள் வாஷிங் மெஷினில் எல்லாரையும் வெளுத்துவிட்டீர்களா?
- இந்து விரோதக் கட்சி : திமுகவை இந்து விரோத கட்சி என்று சொல்கிறார்கள். உண்மை என்னவென்றால், பாஜக இல்லாத மாநிலங்களில்கூட இல்லாத அளவுக்கு, 1730 நாட்களில் 4000-க்கும் மேற்பட்ட கோயில்களுக்கு குடமுழுக்கு செய்துள்ளோம். உண்மையான பக்தர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். இப்படி பாஜக வைத்த குற்றச்சாட்டுகள் அனைத்துக்கும் ஆதாரத்துடன் பதில் சொல்லிவிட்டேன்.
ஆனால் அவர்களோ என் கேள்விகளுக்கு எதற்கும் பதில் சொல்லவில்லை.இப்போதும் கேட்கிறேன்.. இந்தி திணிப்பை ஏற்காததால் தடுக்கப்பட்ட கல்வி நிதி எப்போது வரும்?
கோவை, மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு எப்போது அனுமதி வரும்?
கீழடி அறிக்கை எப்போது வெளிவரும்?
இவை எல்லாமே பாஜக தமிழகத்திற்கு செய்து வரும் துரோகப் பட்டியல். அவர்கள் ஒவ்வொரு முறை இங்கு வரும்போதும் இந்தப் பட்டியல் நீளமாகிக்கொண்டே போகிறது.
நாங்கள் ஏன் இவற்றைப் பேசுகிறோம் என்றால், நமது இந்திய நாடு ஒற்றுமையாகவும் வலிமையாகவும் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். மாநிலங்கள்தான் நாட்டின் அடித்தளம். இந்தியா என்பது யூனியன் ஆஃப் ஸ்டேட்ஸ் என்பதை பாஜக உணர வேண்டும். அரசியலமைப்புச் சட்டத்தையும் நாட்டையும் காப்பாற்றுவதுதான் உண்மையான நாட்டுப்பற்று என்று நாங்கள் அழுத்தமாகச் சொல்கிறோம்.என்டிஏ என்ற பெயரில் தமிழ்நாட்டில் பாஜக உருவாக்கியுள்ள கூட்டணிக்கு எந்தக் கொள்கையும் இல்லை. அது முழுக்க முழுக்க கட்டாயத்தாலும், சிலரின் சுயநலத்தாலும் உருவான துரோகக் கூட்டணி.
நீட் தேர்வு விலக்கு குறித்து அக்கறை காட்டும் எதிர்க்கட்சியினர், தங்கள் கூட்டணித் தலைமை பாஜகவிடம் அதை ஏன் வலியுறுத்தத் தயங்குகிறார்கள்? தமிழ்நாட்டின் மேல் பாஜக வலுக்கட்டாயமாகத் திணித்த திட்டங்கள் குறித்து குரல் எழுப்பத் திராணியில்லாதவர்கள், எப்படி நெஞ்சை நிமிர்த்தி மக்களுக்காகக் கேள்வி எழுப்புவார்கள்? தமிழ்நாட்டின் தன்மானத்தைக் காக்க எப்படி தலைநிமிர்ந்து பேசுவார்கள்?அதனால்தான் வரவிருக்கும் தேர்தலை தமிழ்நாடு vs என்டிஏ என்று அழுத்தமாகச் சொல்கிறேன். வழக்குகளால் மிரட்டப்பட்டு, முழுக்க முழுக்க சுயநலத்துடன் அமைக்கப்பட்ட என்டிஏ கூட்டணி, அடுத்தடுத்த துரோகங்களுக்கான அச்சாரம்தான்” என்று தமிழக மக்கள் பார்க்கிறார்கள் என்றார்.
