தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலினை மோடியால் ஒருபோதும் கட்டுப்படுத்திவிட முடியாது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
சோளிங்கரில் இன்று ஏப்ரல் 18-ந் தேதி நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது: இந்தத் தேர்தல் என்பது தமிழ்நாட்டை பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் (RSS) கைப்பற்றுவதைத் தடுப்பதற்கான ஒரு தேர்தல். நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் நரேந்திர மோடியும், அமித் ஷாவும் என்ன செய்ய முயன்றார்கள் என்பதை நீங்கள் பார்த்திருக்கக்கூடும். அவர்கள் தேசத்திடம் ஒரு பொய்யைக் கூறினார்கள். பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதாவை நிறைவேற்ற முயற்சிப்பதாக அவர்கள் கூறினார்கள்.
ஆனால் அந்த மசோதாவிற்குப் பின்னால் ஒரு கொடூரமான எண்ணம் மறைந்திருந்தது. அவர்கள் இந்தியாவின் தேர்தல் வரைபடத்தையே மாற்ற விரும்புகிறார்கள். ஒவ்வொரு மாநிலத்திற்கும் கிடைக்கும் இடங்களின் (தொகுதிகளின்) எண்ணிக்கையை அவர்கள் மாற்ற விரும்புகிறார்கள்.
அவர்கள் தென்னிந்திய மாநிலங்களை பலவீனப்படுத்த விரும்புகிறார்கள், வடகிழக்கு மாநிலங்களை பலவீனப்படுத்த விரும்புகிறார்கள் மற்றும் சிறிய மாநிலங்களை பலவீனப்படுத்த விரும்புகிறார்கள்.

நமது அரசியலமைப்புச் சட்டத்தை பிரதமர் தாக்குவதை நீங்கள் ஏற்கனவே பார்த்திருக்கிறீர்கள். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் ‘இந்தியா அதாவது பாரதம் என்பது மாநிலங்களின் ஒன்றியம்’ என்று தெளிவாக எழுதப்பட்டுள்ளது. இதன் பொருள் ஒவ்வொரு மாநிலமும் (சமமான உரிமையுடையது) என்பதுதான். ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு குரல் இருக்க வேண்டும். எல்லா மாநிலங்களுக்கும் குரல் கொடுக்கின்ற உரிமை இருக்கிறது. இதன் பொருள் ஒவ்வொரு மொழியும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதாகும். எல்லா மொழிகளும் பாதுகாக்கப்பட வேண்டும். ஒவ்வொரு மாநிலத்தின் வரலாறு, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே இதன் பொருள். ஒரு மாநிலத்தின் வரலாறும், கலாச்சாரமும், இலக்கியமும், இலக்கணமும் பாதுகாக்கப்பட வேண்டும்.
பாஜக என்ன செய்து கொண்டிருக்கிறது என்றால், தமிழ்நாட்டின் அடையாளத்தையும், சித்தாந்தத்தையும் சிதைக்கவும், தாக்கவும் முயற்சி செய்து கொண்டிருக்கிறது. பாஜக தமிழ்நாட்டுடைய அடையாளத்தையும், தமிழ்நாட்டுடைய சித்தாந்தத்தையும் அழிக்க தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. பிரதமர் மோடி ‘ஒரே நாடு, ஒரே மக்கள், ஒரே மொழி’ என்கிறார்.
இந்தியா என்பது லட்சக்கணக்கான வெவ்வேறு மக்களால் ஆனது, எல்லாரையும் உள்வாங்கியது தான் இந்தியா. தமிழ் போன்ற சிறந்த பாரம்பரியங்களைக் கொண்ட பல்வேறு மொழிகளால் ஆனது இந்தியா. மொழிகளால் பிணைக்கப்பட்டது இந்தியா. தமிழ் ஒரு சாதாரண மொழி அல்ல.
தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள், அதனால்தான் நான் தமிழ்நாட்டு மக்களுடன் நிற்கிறேன், தமிழ் ஒரு சாதாரண மொழி அல்ல. ஏன் தமிழை நேசிக்கிறோம், தமிழ் மொழிக்காக நாம் நிற்கிறோம். தமிழ் என்பது தமிழர்களின் ஆன்மா. தமிழ் ஆத்மா, தேசம். தமிழ் என்பது தமிழர்களின் தாய். தமிழ் தாய், இந்த நாட்டிற்கு. எவ்வளவு தைரியம் இருந்தால் நரேந்திர மோடியும் அமித் ஷாவும் தமிழ் மொழி மீதான தாக்குதலைத் தொடர்ந்து நடத்துவார்கள்?
அவர்கள் இதைத்தான் செய்கிறார்கள். அதனால் இதைக் கண்டிக்கிறோம். அவர்களுக்கு அதிமுக என்ற ஒரு கூட்டணி கட்சி இருக்கிறது. உண்மையை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும், நடைமுறையை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். நான் அதிமுக தொண்டர்களிடம் சொல்ல விரும்புவது என்னவென்றால், உங்கள் கட்சிக்கு தமிழ்நாட்டில் ஒரு பெரிய பாரம்பரியம் இருந்தது. அதிமுகவிற்கு சொல்லுகிறேன், உங்களுடைய கட்சி இன்று என்ன நிலையில் இருக்கிறது.
அது முன்பு இருந்த அதிமுக அல்ல. அதிமுக இப்போது எங்கே இருக்கிறது, எப்படி இருக்கிறது என்று தெரியும். அது இப்போது பாஜகவால் முழுமையாகக் கைப்பற்றப்பட்டுள்ளது. அதிமுகவை பாஜக முழுமையாக உள்வாங்கி இருக்கிறது.
அதிமுக தலைமையின் ஊழல், அதிமுகவை பாஜக முழுமையாகக் கைப்பற்ற அனுமதித்துள்ளது. ஊழலில் மலிந்திருந்த அதிமுகவை மிரட்டி காப்பாற்றுவதற்காக, மிரட்டி அதிமுகவை பாஜக தன்னுடைய கைவசம் பிடித்திருக்கிறது, இதுதான் உண்மை. இப்போது அதிமுக என்பது பாஜகவின் ஒரு கருவி மட்டுமே. அவர்கள் தமிழ்நாட்டிற்குள் நுழைய அதிமுகவைப் பயன்படுத்த முயற்சிக்கிறார்கள். அதிமுகவை பயன்படுத்துவதற்கு எல்லா முயற்சியும் எடுத்து, அதிமுகவை தொடர்ந்து பாஜக பயன்படுத்தி வருகிறது.
நானும், காங்கிரஸ் கட்சியும் தமிழ்நாட்டைத் தமிழ் மக்களே ஆள வேண்டும் என்று நம்புகிறோம். நான் நம்புகிறேன், காங்கிரஸ் பேரியக்கம் நம்புகிறது, தமிழ்நாட்டில் அது நடப்பதற்கு வாய்ப்பு இல்லை, நடக்காது. தமிழ்நாடு தமிழ் மக்களால் ஆளப்பட வேண்டும்.
தமிழ்நாடு தமிழர்களால்தான் ஆளப்பட வேண்டும். தமிழ்நாட்டைத் தமிழ்நாட்டு எம்.எல்.ஏ-க்களும், தமிழ்நாட்டு முதலமைச்சரும்தான் ஆள வேண்டும். டெல்லியிலிருந்து எவரும் இங்கு பினாமி ஆட்சி நடத்த முடியாது.
நாங்களும் டெல்லியில் ஆட்சி செய்திருக்கிறோம். ஆனால், டெல்லியில் இருந்துகொண்டு ஒருபோதும் தமிழ்நாட்டை ஆதிக்கம் செய்ய நாங்கள் முயன்றதில்லை.
நாங்கள் எங்களின் சகோதரர் மு.க.ஸ்டாலின் அவர்களோடும், திமுக-வோடும் ஒரு கூட்டணியாகத்தான் இருந்திருக்கிறோம். ஆனால், ஒருபோதும் நாங்கள் திமுக-வை மிரட்டியதோ, தாக்கியதோ அல்லது அமலாக்கத்துறை (ED), வருமான வரித் துறையை ஏவிவிட்டதே கிடையாது.
ஆனால், இன்று பாஜக (BJP) என்ன செய்கிறது? அது அஇஅதிமுக-வை (AIADMK) தாக்குகிறது. அஇஅதிமுக-வின் தலைமையை அவர்கள் மிரட்டுகிறார்கள். அதன் விளைவாக, அஇஅதிமுக தலைமை இன்று முழுமையாக பாஜகவி-வின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
நான் இங்கே ஒரு செய்தியைச் சொல்ல விரும்புகிறேன்: எது நடந்தாலும் சரி, பாஜக-வும் ஆர்எஸ்எஸ்-ஸும் ஒருபோதும் தமிழ்நாட்டிற்குள் நுழைய முடியாது.
நேற்றைய தினம், நாடாளுமன்றத்தில் தொகுதி மறுசீரமைப்பு மூலம் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்க முயன்ற பாஜக-வை நாங்கள் தடுத்து நிறுத்தினோம். தென் மாநிலங்களின் மற்றும் சிறிய மாநிலங்களின் நாடாளுமன்றத் தொகுதிகளைக் குறைக்க முயன்ற பாஜகவின் முயற்சியை நாங்கள் முறியடித்தோம்.
நேற்றைய தினம் பாஜக செய்ய முயன்றது ஒரு தேச விரோதச் செயல். அது மாநிலங்களின் கூட்டமைப்புக்கு எதிரானது. ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் பாறையைப் போல உறுதியாக நின்று பாஜக-வின் இந்தத் திட்டத்தைத் தோற்கடித்தோம்.
சகோதர சகோதரிகளே, பாஜக இந்தியாவின் ஜனநாயக அடித்தளத்தைத் தாக்கி வருகிறது. அவர்கள் தொகுதி மறுசீரமைப்பை ஒரு அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்துகிறார்கள். அவர்கள் ஏற்கனவே அஸ்ஸாம் மற்றும் ஜம்மு காஷ்மீரின் தேர்தல் வரைபடத்தை மாற்றிவிட்டார்கள், அதையே இப்போது நாடு முழுவதும் செய்யத் துடிக்கிறார்கள்.
உங்களின் வரலாறு, உங்களின் கலாச்சாரம், உங்களின் மொழி மற்றும் மரபுகளைத் தாக்குவதே பாஜக-வின் முக்கிய நோக்கம். எங்களின் கூட்டணி அதை நிச்சயம் தடுத்து நிறுத்தும். தமிழ்நாடு இந்த நாட்டிற்குப் பல நன்மைகளைச் செய்திருக்கிறது.
இது தேசிய அளவில் தொடர்கிறது. இது ஒன்றும் புதிய விஷயம் அல்ல, ஏனென்றால் நான் சிறுவனாக இருந்தபோது என் பாட்டியின் மீது நீங்கள் காட்டிய அன்பு எனக்கு நினைவிருக்கிறது.
என் பாட்டி அன்னை இந்திரா காந்தி காலம் முதல் உங்களை நேசித்துக் கொண்டிருக்கிறோம். அதைத் தொடர்ந்து என் தந்தையும், நானும் கடைப்பிடித்து வருகிறோம்.
எனவே இது தமிழ்நாட்டு மக்களுக்கும் என் குடும்பத்திற்கும் இடையிலான உறவு. நீங்களும் என்னை உணர்வுப்பூர்வமாக ஆதரிக்கிறீர்கள். எனவே நான் டெல்லியில் உங்களுடைய போர் வீரனாகப் போராடிக் கொண்டிருக்கிறேன் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
உங்களுக்கு என்ன பாதுகாப்பு வேண்டும், என்ன பிரச்சனை என்றாலும், உங்கள் சகோதரனாகிய நான் புதுடெல்லியில் உங்களுக்காக குரல் கொடுக்க இருக்கிறேன்.
பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகள் நமது கொள்கை ரீதியான எதிரிகள். அவர்கள் அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணான ஒரு இந்தியாவை உருவாக்க நினைக்கிறார்கள்.
மகாத்மா காந்தி, அம்பேத்கர் மற்றும் ஜவஹர்லால் நேரு ஆகியோரின் புகழைச் சீரழிக்க அவர்கள் முயல்கிறார்கள்.
அவர்கள் வெறுப்பு, கோபம் மற்றும் ஆக்கிரமிப்பு நிறைந்த இந்தியாவை உருவாக்க நினைக்கிறார்கள்.
நமக்குத் தேவையானது அன்பு, பாசம் மற்றும் நல்லுறவு கொண்ட இந்தியா. எல்லா மதங்களும், மொழிகளும், கலாச்சாரங்களும் மதிக்கப்படும் இந்தியா நமக்கு வேண்டும்.
இது இரண்டு வெவ்வேறு சித்தாந்தங்களுக்கும், தேசத்தைப் பற்றிய இரண்டு வெவ்வேறு பார்வைகளுக்கும் இடையிலான போர். பாஜகவின் அந்தப் பார்வையை நாம் வீழ்த்துவோம்.
நேற்று பிரதமர் மோடியின் முகத்தைப் பார்த்திருப்பீர்கள். அவரிடம் தன்னம்பிக்கை அறவே இல்லை. எதிர்க்கட்சியினரை நேருக்கு நேர் எதிர்கொள்ளக் கூட முடியாமல் அவர் அமர்ந்திருந்தார்.
ஏனென்றால், அவர் அமெரிக்காவால் கட்டுப்படுத்தப்படுகிறார். நமது நாட்டை அடகு வைக்கும் வகையில் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே அவர் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
அவர்கள் நமது தரவுகளைக் கொடுத்திருக்கிறார்கள். அவர்களிடம் திட்டங்கள் உள்ளன, தரவுகள் உள்ளன. அவர் விவசாயிகளை விற்றுவிட்டார். அவர் சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களை விற்றுவிட்டார். இன்று டொனால்ட் டிரம்ப் மோடியிடம் குதி என்று சொன்னால், மோடி குதிக்கிறார். மோடி குதிக்கிறார், விவசாயிகளின் பொருளாதாரத்தை அனைத்தையும் விற்றுவிட்டார். டொனால்ட் டிரம்ப் மோடியிடம் படு என்று சொன்னால், மோடி படுத்துக் கொள்கிறார். மோடி அவர்கள் கீழே விழுந்திருக்கிறார். கீழே விழுந்து விழுந்து அவர் இந்தியாவிற்கு எதிரான வேலைகளைப் பார்க்கிறார். ஏனென்றால் டொனால்ட் டிரம்ப் நரேந்திர மோடியை முழுமையாகக் கட்டுப்படுத்துகிறார்.
எதற்காக மக்களுக்கு எதிராக அவர் செயல்படுகிறார்?. அவர் யாரைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறார்கள்?. அவர் எப்ஸ்டீன் கோப்புகளின் மூலம் அவரை (மோடியை) கட்டுப்படுத்துகிறார். நரேந்திர மோடியின் நிதி அமைப்பு அவருக்குத் தெரியும் என்பதால் அவர் மோடியைக் கட்டுப்படுத்துகிறார். அதானியுடன் நரேந்திர மோடிக்கு உள்ள தொடர்பை அவர் புரிந்துகொள்கிறார். நரேந்திர மோடிக்குத் தெரியும். அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார், இந்தத் தேசத்தை விற்றுக் கொண்டிருக்கிறார். ஆனால் அவரை எதிர்த்து தொடர்ந்து நான் குரல் கொடுப்பேன்.
நரேந்திர மோடி டொனால்ட் டிரம்பால் கட்டுப்படுத்தப்படுகிறார். நரேந்திர மோடி தமிழ்நாட்டின் முதலமைச்சருக்கும் அதையே செய்ய விரும்புகிறார். நரேந்திர மோடி என்ன நினைக்கிறார், எல்லாவற்றையும் கட்டுப்படுத்த முடியும். தமிழ்நாட்டிலும் முதலமைச்சராக இருப்பவரைக் கட்டுப்படுத்த முடியும், ஆட்சிக்குக் கொண்டு வர முடியும் என்று துடிக்கிறார். அதனால்தான் அவர் தமிழ்நாட்டில் அதிமுகவை ஆட்சியில் அமர்த்த விரும்புகிறார்.
ஏனென்றால் அவருக்குத் தெரியும். அவர் என்ன செய்தாலும். தமிழ்நாட்டின் தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலினை அவரால் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் நரேந்திர மோடி எல்லாவற்றையும் கட்டுப்படுத்தலாம் என்று நினைக்கிறாரே தவிர ஸ்டாலினை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை.
ஸ்டாலின் சுதந்திரமானவர் என்றும் நரேந்திர மோடியால் அவருக்கு அழுத்தம் கொடுக்க முடியாது என்றும் அவருக்குத் தெரியும். மு.க. ஸ்டாலினை அவரால் கட்டுப்படுத்த முடியாது, அவர் சுதந்திரமாகச் செயல்பட்டு ஆட்சி செய்து வருகிறார்.
அதனால்தான் அவர் ஸ்டாலினை நீக்கிவிட்டு, அவர் கட்டுப்படுத்தக்கூடிய ஒரு நபரை அங்கு அமர்த்த விரும்புகிறார். அதைத்தான் எல்லோரையும் கட்டுப்படுத்துகின்ற மோடியால் ஸ்டாலின் அவர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. மோடி என்ன வேண்டுமானாலும் கனவு காணலாம். ஆனால் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் நாளில் உண்மை அவருக்குத் தெரியவரும். ஆனால் அவர் என்ன திட்டங்கள் போட்டாலும், என்ன ஒப்பந்தம் போட்டாலும் தமிழ்நாட்டில் அவர் வெற்றி பெற முடியாது. திமுக-காங்கிரஸ் கூட்டணி தமிழ்நாட்டில் தேர்தலில் அமோக வெற்றி பெறும். திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் காங்கிரஸ் கூட்டணியானது மகத்தான வெற்றி பெறப்போகிறது.
நரேந்திர மோடியும் அமித் ஷாவும் தமிழ்நாடு மக்களின் சக்தியையும் விருப்பத்தையும் புரிந்துகொள்வார்கள். மோடியும் அமித் ஷா அவர்களும் புரிந்துகொள்ள வேண்டும், தமிழ்நாட்டு மக்கள் சக்தி வாய்ந்தவர்கள், உங்களால் இங்கு ஒன்றும் செய்ய முடியாது. இங்கு வந்து எனது பேச்சைக் கேட்ட உங்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுக்கெல்லாம் நான் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன். இங்கு வருவது எனக்கு எப்போதும் ஒரு பெருமையும் மகிழ்ச்சியும் அளிக்கும் விஷயம். எப்பொழுதும் உங்களைப் பார்க்க நான் வந்து கொண்டிருப்பேன். இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.
