கலைஞர் மகன் மு.க.முத்து மறைவு : தலைவர்கள் இரங்கல்!

Published On:

| By Kavi

M.K.Muthu passes away

முன்னாள் முதல்வர் கலைஞரின் மூத்த மகன் மு.க.முத்து வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக இன்று (ஜூலை 19) காலமானார். அவரது மறைவு முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. M.K.Muthu passes away

மு.க.முத்துவின் உடல் கோபாலபுரம் இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக நிர்வாகிகள், குடும்பத்தினர், நண்பர்கள் என பலரும் மு.க.முத்துவின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT

அதுபோன்று தமிழக அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி

ADVERTISEMENT

அன்புச் சகோதரர் மு.க. முத்துவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உற்றார், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

ADVERTISEMENT

முத்தமிழறிஞர் கலைஞர் – தமிழிசைப் பாடகர் சிதம்பரம் ஜெயராமனின் சகோதரி பத்மாவதி ஆகியோரின் அன்பு மகனான மு.க.முத்து 77 வயதில் உடல்நலக் குறைவால் இன்று மரணம் அடைந்தார் என்ற செய்தி அறிந்து வருத்தம் அடைந்தேன்.

தான் பிறந்தபோதே அன்புத் தாயாரை பறிகொடுத்த துயரத்திற்கு உரியவர் மு.க.முத்து. கலைத்துறையில் நாட்டம் கொண்ட அவர் தொடக்க காலத்தில் தி.மு.க மேடைகளில் கொள்கை விளக்கப் பாடல்களை பாடியும், தேர்தல் களத்தில் சிறப்பாக பிரச்சாரம் செய்தும் தி.மு.கழக வளர்ச்சிக்கு பெரிதும் துணை நின்றார். சிறந்த திரைப்பட நடிகராகவும், பாடகராகவும் கலைத்துறையில் முத்திரை பதித்து வந்தார்.

இவரது மறைவால் துயரம் அடைந்திருக்கக் கூடிய தி.மு.கழகத் தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கும், மு.க.முத்துவின் துணைவியார் சிவகாமசுந்தரி, மகன் அறிவுநிதி, மகள் தேன்மொழி ஆகியோருக்கும், மற்றும் உள்ள குடும்ப உறவுகளுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

மு.க. முத்து இன்று காலமானார் என்ற செய்தியறிந்து  வருத்தம் அடைந்தேன். அவரை இழந்து வாடும்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  உள்ளிட்ட குடும்பத்தினர், நண்பர்கள், திமுகவினர் உள்ளிட்ட அனைவருக்கும்  எனது ஆழ்ந்த இரங்கலையும்,  அனுதாபங்களையும்  தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை

மு.க.முத்து தமிழ்நாட்டின் கலையுலகிலும் அரசியல் வரலாற்றிலும் தனக்கென தனி இடம் பதித்தவர். தந்தையின் அரசியல் பாரம்பரியத்தையும், சமூக அக்கறையையும் தொடர்ந்து அவர் எடுத்துச் சென்றதோடு, திரைப்படங்களின் மூலமாகவும், பொதுவாழ்வின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். தந்தையின் தமிழ்ப்பற்றையும், அரசியல் உணர்வையும் தனது வாழ்வின் பல கட்டங்களிலும் வெளிப்படுத்தியவர் மு.க.முத்து.

பல சிறந்த படங்களில் நடித்து புகழ்பெற்றவர். தனித்துவமான குரலில் சிறந்த பாடல்களை பாடியுள்ளார். அவரது மறைவு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், குடும்பத்தினர், உறவினர்கள், தி,மு.க. உடன்பிறப்புகள், திரையுலக நண்பர்கள் மற்றும் அனைவருக்கும் ஈடு செய்யமுடியாத பேரிழப்பாகும். மிகுந்த சோகமான இந்நேரத்தில் முதலமைச்சருக்கும், குடும்பத்தினர்களுக்கும், திரையுலக நண்பர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். M.K.Muthu passes away

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share