மதுரையில் நடைபெற்ற சிபிஐ (எம்) 24-ஆவது அகில இந்திய மாநாட்டில் சிபிஐ(எம்) அகில இந்திய பொதுச்செயலாளராக எம்.ஏ.பேபி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கொல்லத்தில் உள்ள பிரக்குளத்தைச் சேர்ந்த பேபி, மாணவராக அரசியலில் நுழைந்து, சிபிஐ(எம்) மாணவர் பிரிவான இந்திய மாணவர் கூட்டமைப்புடன் (SFI) பணியாற்றினார். பின்னர், இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்புடன் (DYFI) பணியாற்றினார். எமெர்ஜென்சியின் போது சிறை சென்ற பல கம்யூனிஸ்ட் தலைவர்களில் இவரும் ஒருவர். M A Baby named next CPM general secretary
பேபி தனது 32 வயதில் ராஜ்யசபா உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2006 ஆம் ஆண்டு குந்தாரா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு பேபி வெற்றி பெற்றார்.

2006 – 2011 காலகட்டத்தில் வி.எஸ்.அச்சுதானந்தன் அமைச்சரவையில் மாநில கல்வி அமைச்சராக இருந்தார். அந்த காலத்தில், பள்ளி பாடப்புத்தகங்களில் நாத்திகத்தை ஊக்குவிப்பதாக பேபி மீது குற்றம் சாட்டப்பட்டது.
2011-ல் குந்தாராவிலிருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2014 மக்களவைத் தேர்தலில் கொல்லம் தொகுதியில் காங்கிரஸ் ஆதரவு பெற்ற ஆர்எஸ்பி தலைவர் என்.கே. பிரேமச்சந்திரனிடம் தோல்வியடைந்தார். M A Baby named next CPM general secretary
இசை, சினிமா மற்றும் இலக்கியத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக அறியப்படும் பேபி, கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கலாச்சார முகமாகக் கருதப்படுகிறார்.
1990 – 91 காலகட்டத்தில் சோவியத் யூனியன் வீழ்ந்த பிறகு அமெரிக்கா கியூபாவின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது. சோவியத் உதவியின்றி கியூபா வலுவிழந்து விடும், அமெரிக்காவுக்கு சிம்மசொப்பனமாய் இருந்த ஃபிடலை வீழ்த்தி விடலாம் என்று அமெரிக்கா நினைத்தது.
அப்போது கியூபாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் Cuba Solidarity Committee என்கிற அமைப்பை சிபிஐ (எம்) உருவாக்கியது. இந்த கமிட்டியை வலுப்படுத்துவதில் பக்கபலமாக இருந்தார் பேபி. சென்னையில் அமைக்கப்பட்ட கமிட்டிக்கு தலைவராக என்.ராம் இருந்தார்.
இந்த கமிட்டி சார்பாக சென்னை நாராதகான சபாவில் நடைபெற்ற நிகழ்வில் கலைஞர், சிவாஜி கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

குறிப்பாக கலைஞர் அவருக்கேயுரிய நயத்துடன் அன்றைய தமிழ்நாடு அரசியலையும் கியூபாவையும் ஒப்பிட்டுப் பேசியபோது சபையே ஆரவாரம் செய்தது. நிகழ்ச்சியின் துவக்கத்தில் உமையாள்புரம் சிவன் கச்சேரியும் இருந்தது.
அந்த முன்னெடுப்பின் விளைவாக சுமார் ரூ.94 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் கியூபாவுக்கு ஒரு கப்பலில் அனுப்பி வைக்கப்பட்டன.
கேரள மாநில மார்க்சிஸ்ட் முகமாக அறியப்பட்ட பேபி, தற்போது பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு இந்தியாவின் மார்க்சிஸ்ட் முகமாக மாறியிருக்கிறார்.