உலக புகழ்பெற்ற லண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கையைத் தொடங்குவதற்கான அதிகாரப்பூர்வ ஒப்புதல் கிடைத்திருக்கிறது.
லண்டன் பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே தமிழ் மொழிக்கான துறை இயங்கி வந்தது. ஆனால் மாணவர் சேர்க்கை குறைந்ததால், 1995இல் இந்தப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறை மூடப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் அங்குத் தமிழ்த் துறையைக் கொண்டுவருவதற்காக தமிழ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் முயற்சி செய்துவந்தார்கள்.
கடந்த ஆண்டு (2017) நவம்பர் மாதம் தமிழ் அமைப்புகள் எடுத்துவந்த முயற்சியின் பலனாக, பல்கலைக்கழகம் அதற்கான ஒப்புதலை அளித்துள்ளது. தமிழ்மொழி குறித்து ஆய்வுக்கான துறையை ஏற்படுத்துவதில் பெருமை கொள்வதாக லண்டன் பல்கலைக்கழகம் கூறியுள்ளது. இந்தப் பல்கலைக்கழகத்தில் பல அரிய ஓலைச்சுவடிகளும், புத்தகங்களும் ஏற்கெனவே பராமரிக்கப்பட்டு வருகின்றன.
தற்போது தமிழ் இருக்கை அமைப்பதற்கான ஒப்புதல் கிடைத்துள்ளநிலையில், அதற்காக 54 கோடி ரூபாய் நிதி திரட்டும் பணியில் தமிழ் அமைப்பினர் ஈடுபட்டுள்ளனர். 2021ஆம் ஆண்டிற்குள் தமிழ் இருக்கை நிறுவ வேண்டும் என்றும், இதற்கான முயற்சிகளை மேற்கொண்டுவரும் தமிழ் அமைப்பினர் தெரிவிக்கின்றனர்.