முக்கொம்பு 8 மதகுகள் உடைந்தன!

Published On:

| By Balaji

திருச்சி கொள்ளிடம் முக்கொம்பு மேலணையில் உள்ள எட்டு மதகுகளும் உடைந்து வெள்ளத்தில் நேற்றிரவு (ஆகஸ்ட் 22) அடித்துச் சொல்லப்பட்டது.

கேரளா மற்றும் கர்நாடகத்தில் பெய்துவரும் பெருமழை காரணமாக காவிரி ஆற்றில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளிலிருந்து விநாடிக்கு 2 லட்சத்துக்கு அதிமாக தண்ணீர் சமீபத்தில் வெளியேற்றப்பட்டது. இதனால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்தும் அதிகரித்து, முழுக்கொள்ளவை எட்டியது. அதிக அளவிலான நீர்வரத்து காரணமாக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. மேட்டூர் அணையில் இருந்து அதிக அளவில் தண்ணீர் திறந்துவிடப்படுவதால் காவிரி கரையோர மக்களுக்கு அவ்வப்போது எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

ADVERTISEMENT

ஏற்கெனவே கடந்த சில தினங்களுக்கு முன்னர், காவிரி ஆற்றில் அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டபோது கொள்ளிடம் பாலம் உடைந்து ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது. இந்த நிலையில் திருச்சி மாவட்டம், முக்கொம்பு மேலணையில் நேற்றிரவு (ஆகஸ்ட் 22) எட்டு மதகுகள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் பாலம் உடைந்தது. கொள்ளிடத்தில் நீர் வீணாகச் செல்கிறது.

காவிரியில் முக்கொம்பு என்பது காவிரி, கொள்ளிடம் பிரிந்து பாயும் முக்கியப் பகுதியாகும்.முக்கொம்பு மேலணையின் தெற்குப் பிரிவு கடந்த 1836ஆம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது. சுமார் 2.70 லட்சம் கனஅடி நீர் செல்லும் வகையில் கட்டப்பட்ட இந்த மேலணையில் 45 மதகுகள், தூண்கள் உள்ளன.

ADVERTISEMENT

இதில் நேற்றிரவு 8 மணிக்கு மேல் திடீரென 6இல் இருந்து 13 வரையிலான எட்டு மதகுகள் அதனோடு சேர்ந்த தூண்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டது. அனைத்துத் துறை அதிகாரிகளும் சம்பவ இடத்தில் கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். சம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி, பொதுப்பணித்துறை திருச்சி மண்டல தலைமைப் பொறியாளர் செந்தில்குமார், திருச்சி சரக டிஐஜி ஆர்.லலிதா லட்சுமி உள்ளிட்டோர்பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

முக்கொம்பு மேலணையில் மதகுகள் உடைந்த இடத்தைப் பார்வையிட பொதுப்பணித் துறை முதன்மைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் இன்று (ஆகஸ்ட் 23) நேரில் வரவுள்ளார்.

ADVERTISEMENT

மதகுகள் உடைந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்த தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய பொதுப்பணித் துறை முதன்மைச் செயலர் எஸ்.கே.பிரபாகரை சம்பவ இடத்தில் பார்வையிட்டு உடனடியாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

காவிரி, கொள்ளிடத்தில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் முக்கொம்பு மேலணையில் மதகுகள் உடைந்திருந்தால் பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும். தண்ணீர் குறைந்த நிலையில் உடைந்துள்ளதால் எந்தவித அபாயமும் ஏற்படவில்லை.

கடந்த 18ஆம் தேதி முக்கொம்பு மேலணைக்கு விநாடிக்கு 2.20 லட்சம் கனஅடி தண்ணீர் வந்த நிலையில், காவிரியில் 66,000 கனஅடியும், கொள்ளிடத்தில் 1.51 லட்சம் கனஅடியும், 19ஆம் தேதி 1.83 லட்சம் கனஅடி தண்ணீர் வந்த நிலையில், காவிரியில் 65,000 ஆயிரம், கொள்ளிடத்தில் 1.16 லட்சம் கனஅடியும், 20ஆம் தேதி 1.72 லட்சம் கனஅடி தண்ணீர் வந்த நிலையில், காவிரியில் 60,000 ஆயிரம், கொள்ளிடத்தில் 1.10 லட்சம் கனஅடியும் திறக்கப்பட்டது. இதனால் இந்த நாட்களில் காவிரி மற்றும் கொள்ளிடத்தில் இரு கரைகளையும் தொட்டவாறே வெள்ளம் பெருக்கெடுத்துச் சென்றது. நேற்று (ஆகஸ்ட் 22) மாலை நிலவரப்படி விநாடிக்கு 51,700 கனஆடி தண்ணீர் வந்த நிலையில், காவிரியில் விநாடிக்கு 30,000 கனஅடியும், கொள்ளிடத்தில் 20,000 கனஅடியும் திறக்கப்பட்ட நிலையிலேயே மதகுகள் உடைந்துள்ளன.

நான்கு நாட்களுக்கு முன்னதாக மதகுகள் உடைந்திருந்தால் தெற்கு பகுதி, வடக்கு பகுதி எனமுக்கொம்பு சுற்றுலா தலம், சுற்றுப்பகுதி கிராமங்கள் என அனைத்தும் வெள்ளக்காடாகியிருக்கும். அதிர்ஷ்டவசமாக எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை.

இதுகுறித்து, தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறுகையில், “மதகுகள் உடைந்ததால் கல்லணைக்குத் தண்ணீர் வந்து சேருவது சிரமம். இதனால், காவிரி டெல்டா பகுதி விவசாயத்துக்குப் போதுமான தண்ணீர் கிடைப்பது சந்தேகம்தான். அணைகள் பராமரிக்காததே மதகுகள் உடையக் காரணம்” என்று குற்றம் சாட்டியுள்ளார். மேலும், “அணை பராமரிப்புக்கு ஒதுக்கப்பட்ட நிதி எங்கே? மதகுகள் உடைந்ததற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் தருவதோடு, இதற்கு அவர்தான் பொறுப்பேற்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share