மஞ்சு வாரியர்: வாடி ராசாத்தி!

Published On:

| By Balaji

மலையாள நடிகைகளைப் பொறுத்தவரை மலையாளத் திரையுலகில் நடித்தாலும் அவர்கள் கவனம் தமிழ் சினிமாவின் மீது எப்போதும் இருக்கும். தமிழ் சினிமா கொண்டாடித் தீர்த்த கேரள நடிகைகளின் பட்டியலை எளிதில் சேகரித்துவிட முடியாது. ஆனால், மலையாளத்தில் வெற்றிகரமான கதாநாயகியாக வலம்வந்த மஞ்சு வாரியர் திரையுலகுக்கு வந்து 22 வருடங்கள் கழித்து தற்போது முதன்முறையாக நேரடித் தமிழ் படத்தில் நடிக்கவுள்ளார்.

ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிவிட்டு இயக்குநராக அறிமுகமானவர் அறிவழகன். ‘ஈரம்’ படத்திலேயே அழுத்தமான முத்திரை பதித்த இவர், த்ரில்லர் கதைகளில் தனக்கான தனி பாணியை ‘குற்றம் 23’ படத்தின் மூலம் மீண்டும் ஒருமுறை நிரூபித்தார். நயன்தாராவை கதாநாயகியாகக்கொண்டு இவர் இயக்கும் சைக்கலாஜிக்கல் த்ரில்லர் படத்தில்தான் மஞ்சு வாரியர் நடிக்கவுள்ளார்.

திருமணத்துக்குப் பிறகு நடிப்பிலிருந்து விலகியிருந்த மஞ்சு வாரியர் 2014ஆம் ஆண்டு ‘ஹவ் ஓல்டு ஆர் யு’ படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார். இந்தப் படத்தின் வெற்றி அவரை தொடர்ச்சியாக இயங்கவைத்தது. இந்த படம் ஜோதிகா நடிப்பில் ‘36 வயதினிலே’என்று தமிழிலும் வெளியானது. பண்பட்ட நடிப்பை வெளிப்படுத்தும் மஞ்சு வாரியரின் தமிழ் சினிமா பயணத்தை இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் வெற்றியே தீர்மானிக்கும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share