சுங்கச் சாவடிகளை அகற்றுவதற்கு திமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் குரல்கொடுக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் 42 சுங்கச் சாவடிகள் செயல்பட்டு வரும் நிலையில் ஆண்டு தோறும் ஏப்ரல், செப்டம்பர் மாதங்களில் சுங்கச் சாவடி கட்டணங்கள் உயர்த்தப்பட்டு வருகின்றன. சுங்கச் சாவடிகளின் கட்டணம் உயர்த்தப்படுவதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவர் என்று தமிழகத்தில் பல்வேறு தலைவர்களும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். மேலும் தமிழகத்திலிருந்து சுங்கச்சாவடிகளையே அகற்ற வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்தன.
இந்த நிலையில் சட்டமன்றத்தில் நேற்று (ஜூலை 12) கேள்வி நேரத்தின்போது திமுக சட்டமன்ற உறுப்பினர் சுந்தரம் எழுந்து, “உத்திரமேரூர் தொகுதியில் காலக்கெடு முடிந்தபிறகும் சில சுங்கச்சாவடிகள் மக்களிடம் பணம் வசூலித்துவருகின்றன. எனவே காலாவதி ஆன பின்பும் மக்களிடம் பணம் வசூலிக்கும் சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதிலளித்துப் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “திமுகவைச் சேர்ந்தவர் மத்திய அமைச்சராக இருந்தபோதுதான் தமிழகத்தில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டன. நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருக்கிறோம் என திமுகவினர் தற்போது பெருமையாக சொல்லிக்கொள்கின்றனர். தமிழகத்தில் உள்ள சுங்கச் சாவடிகளை அகற்ற திமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் பேசி உதவ வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணி 37 இடங்களைக் கைப்பற்றியது. 22 தொகுதிகளில் வெற்றிபெற்ற திமுக, நாடாளுமன்றத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது. இந்த நிலையில் நாடாளுமன்றத்தின் கேள்வி நேரத்தின்போதும் விவாதங்களின் போது திமுக கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் பல்வேறு பிரச்சினைகள் குறித்து அழுத்தமான வாதங்களை முன்வைத்து வருகிறார்கள்.இந்த சூழலில்தான் தமிழகத்திலுள்ள சுங்கச் சாவடிகளை அகற்ற திமுக எம்.பி.க்கள் உதவ வேண்டும் என்று முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.
**
மேலும் படிக்க
**
**[ மோடிக்கு தயாநிதியை தூது அனுப்பினாரா ஸ்டாலின்?](https://minnambalam.com/k/2019/07/12/24)**
**[டிஜிட்டல் திண்ணை: ஆட்சியைக் கவிழ்க்க ஸ்டாலின் மீண்டும் முயற்சி!](https://minnambalam.com/k/2019/07/12/87)**
**[நாங்கள் 150 பேர் எழுந்து நின்றால்: ஜெகன் ஆவேசம்!](https://minnambalam.com/k/2019/07/12/48)**
**[ஏ.எல்.விஜய் திருமணக் கொண்டாட்டம்!!](https://minnambalam.com/k/2019/07/12/19)**
**[நீதிமன்றத்திற்கு சவாலா? தலைமை நீதிபதி கேள்வி!](https://minnambalam.com/k/2019/07/12/57)**





