சொந்த மண்ணில் தனது சுழற்பந்து வீச்சு பலத்தை மீண்டும் ஒருமுறை உலகிற்கு நிரூபித்துக் காட்டி இலங்கை அணி தென்னாப்ரிகாவை வீழ்த்தியிருக்கிறது.
இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க கொழும்புவின் பிரேமதாசா மைதானத்தில் நேற்று நடைபெற்ற டி20 போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்ரிக்கா முதலில் மட்டை வீசத் தயாரானது. இலங்கையின் வேகப்பந்துவீச்சை தைரியமாகச் சமாளித்த தென்னாப்பிரிக்கா அணியால் அந்த அணியின் சுழற்பந்துவீச்சுத் தாக்குதலைச் சமாளிக்க முடியவில்லை. ஒரு ரன்-அவுட் உட்பட முதல் 8 விக்கெட்டுகளை விரைவில் வீழ்த்தி, இலங்கை சுழற்பந்துவீச்சாளர்கள் தென்னாப்ரிக்காவுக்கு நெருக்கடியை உண்டாக்கினர். இதனால் தென்னாப்ரிக்க அணியால் வெறும் 16.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து, 98 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இலங்கை சுழற்பந்து வீச்சாளர்களான லக்ஷன் சடக்கன் 3 விக்கெட்டுகளும், தனஞ்சயா டி சில்வா, அகில தனஞ்சயா ஆகியோர் தலா 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.

எளிய இலக்கைத் துரத்திய இலங்கை அணி 16 ஓவர்களில் இலக்கைக் கடந்து வெற்றியைப் பதிவு செய்தது. அதிகபட்சமாக தினேஷ் சந்திமல் 36 ரன்கள் சேர்த்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். பேட்டிங்கில் 31 ரன்களும், பந்துவீச்சில் 2 விக்கெட்டுகளும் வீழ்த்திய தனஞ்சயா டி சில்வா ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
