ADVERTISEMENT

அறிவுரையைப் புறந்தள்ளிய ஷமி

Published On:

| By Balaji

இந்திய கிரிக்கெட் அணி வேகப் பந்துவீச்சாளர் மொஹமது ஷமியின் சமீபத்திய செயல்பாடு, பிசிசிஐயின் அறிவுரையைப் புறந்தள்ளும் விதமாக அமைந்துள்ளது.

இந்திய அணியின் முன்னணி வீரர்கள் உள்ளூர் கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் போன்ற போட்டிகளில் விளையாடும்போது, காயத்தில் சிக்குவது வழக்கம். காயத்தால் அவதியுறும்போது அடுத்து நடக்கவிருக்கும் பெரிய அளவிலான சர்வதேச போட்டிகளின்போது அது இந்திய அணிக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதைக் கருத்தில் கொண்டு அதுபோன்ற போட்டிகளில் கூடுமானவரை முன்னணி வீரர்கள் விளையாட வேண்டாம் என அறிவுறுத்திவருகிறது பிசிசிஐ.

ADVERTISEMENT

அந்த வகையில், ஆஸ்திரேலியாவுடன் நடைபெறவுள்ள பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரைக் கருத்தில் கொண்டு இஷாந்த் ஷர்மா, ரவிச்சந்திரன் அஸ்வின் போன்ற வீரர்கள் ரஞ்சிக் கோப்பைப் போட்டிகளில் விளையாட வேண்டாம் என்றுகூட சமீபத்தில் பிசிசிஐ சார்பில் கூறப்பட்டது. அந்த லிஸ்ட்டில் இருக்கும் மற்றொரு பந்துவீச்சாளரான மொஹமது ஷமியை 15 ஓவர்கள் வரை வேண்டுமானால் பந்து வீசலாம் எனவும் அறிவுறுத்தியிருந்தது பிசிசிஐ.

முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 6ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்நிலையில் பிசிசிஐயின் அந்த அறிவுறுத்தலைப் புறந்தள்ளியுள்ளார் ஷமி. ரஞ்சி கிரிக்கெட்டில் பெங்கால் அணிக்காகக் களமிறங்கிய ஷமி, கேரள அணிக்கு எதிராக 26 ஓவர்கள் பந்துவீசியிருக்கிறார். அதாவது 11 ஓவர்கள் வரை கூடுதலாக வீசியுள்ளார்.

ADVERTISEMENT

இதற்கு ஷமி கூறிய விளக்கமாக டைம்ஸ் நவ் நியூஸ் மீடியா இன்று (நவம்பர் 22) செய்தியொன்றை வெளியிட்டுள்ளது. அதில், “சொந்த அணிக்காகவோ மாநிலத்திற்காகவோ விளையாடுவதைவிடச் சிறப்பான பயிற்சியாக வேறெதுவும் இருக்காது எனக் கருதுகிறேன். இந்தப் போட்டியில் அதிக ஓவர்கள் வீசி விளையாடியது ஆஸ்திரேலியத் தொடருக்கு உதவும் என்றே எண்ணுகிறேன். இதுவும்கூட அடுத்த போட்டிக்கு என்னைத் தயார் செய்துகொள்ளும் பயிற்சிதான்” எனக் கூறியுள்ளார் ஷமி.

ஷமிக்கு பிசிசிஐ சார்பாகக் கூறப்பட்டிருந்தது வெறும் அறிவுரையே. எனவே இது போட்டி விதிமீறலில் வராது எனும் காரணத்தால் பிசிசிஐ அவர் மீது நடவடிக்கை எதுவும் எடுக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share