ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற லக்னோ அணி, நடப்புத் தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. LSG get first victory in ipl 2025
கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் இன்று (மார்ச் 27) ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் மோதின.
இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் குவித்தது.
அந்த அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா (6) மற்றும் முதல் போட்டியில் சதம் அடித்த இஷான் கிஷனும்(0) ஏமாற்றினர்.
எனினும் மற்றொரு தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட்(47) அங்கித் வர்மா(36) மற்றும் நிதிஷ் ரெட்டி(32) ஆகியோரின் பொறுப்பான பேட்டிங்கால் அந்த அணி 190 ரன்கள் குவித்தது.

லக்னோ அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஷர்துல் தாக்கூர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தொடர்ந்து 191 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணியில் தொடக்க வீரர் ஏய்டன் மார்க்ரம் 1 ரன்னில் வெளியேறி ஏமாற்றமளித்தார்.
எனினும் அடுத்து ஜோடி சேர்ந்த மிட்செல் மார்ஷ் (52) மற்றும் நிக்கோலஷ் பூரன் (70) ஜோடி அதிரடியாக விளையாடி இரண்டாவது விக்கெட்டுக்கு அதிரடியாக 120 ரன்கள் குவித்து அசத்தினர்.

இந்த ஜோடியை தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ரிஷப் பந்த் (15), பதோனி (6) ஆகியோர் ஆட்டமிழந்து வெளியேறினர்.
எனினும் 6வது விக்கெட்டுக்கு களமிறங்கிய அப்துல் சமாத், இறுதி வரை ஆட்டமிழக்காமல் 2 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 22 ரன்கள் குவித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
அந்த அணி 16.1 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 193 குவித்து நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது.