செவிலியர் தினம்: மருத்துவ பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை!

Published On:

| By Balaji

கொரோனா பிடியிலிருந்து மக்களைக் காப்பாற்ற அன்றாடம் மரணப்போராட்டத்தில் ஈடுபட்டு வரும் செவிலியர்களை பெருமைப்படுத்தும் விதமாக இன்று செவிலியர்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

இங்கிலாந்தில் செல்வந்தர் குடும்பத்தில் பிறந்த பிளாரன்ஸ் நைட்டிங்கேல் என்பவர் 1844 ஆம் ஆண்டில் சேவை மனப்பான்மையுடன் நவீன முறையில் செவிலியர் பயிற்சி பள்ளியைத் துவங்கினார் . 1854இல் கிரிமியாவைக் கைப்பற்ற ரஷ்யாவுக்கு எதிராக பிரான்ஸ், இங்கிலாந்து நாடுகள் போர் தொடுத்தபோது பாதிக்கப்பட்ட படைவீரர்களுக்கு யாரும் உதவ முன்வராத நிலையில் அந்த இராணுவ மருத்துவமனைக்கு பிளாரன்ஸ் உட்பட 40 செவிலியர்கள் சென்று சிகிச்சை அளித்தனர்.

மின் விளக்கு இல்லாத நேரத்தில் மெழுகுவர்த்தியைக் கையில் ஏந்தியபடி அடிப்பட்டுள்ள நோயாளிகளிடம் சென்று நலம் விசாரித்து நேசத்துடன் சிகிச்சை அளித்து வந்தனர். அப்போதுதான் அந்த நாட்டு இராணுவ வீரர்கள் நைட்டிங்கேலை பாராட்டி கௌரவப்படுத்தினார்கள். அதன்படி, பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த தினமான மே 12ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் செவிலியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்தியாவில் குறிப்பாக, தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தொற்று பிடியிலிருந்து மக்களை காப்பாற்றுவதில் செவிலியர்களின் பங்குதான் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பணி செய்யும் செவிலியர்களிடம் செவிலியர் தினம் வாழ்த்துக்கள் கூறி கொரோனா பணியைப்பற்றிக் கேட்டோம். ”கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புகளைப் பற்றி மக்கள் கொஞ்சமும் உணரவில்லை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், சேலம், தர்மபுரி, தஞ்சாவூர் அரசு மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுடன், அவர்கள் கூட வருபவர்களும் வந்து படுத்துக்கொள்கிறார்கள். இதை நாங்கள் கேட்டால் திட்டுகிறார்கள். இரவு நேரங்களில் தனியார் மருத்துவமனைகளில் சேர்ந்த பலர், வென்டிலேட்டர் மற்றும் ரெம்டிவிசர் மருந்து கிடைக்காமல் அரசு மருத்துவமனைகளை நோக்கி வருகின்றனர். படுக்கை வசதி இல்லை என்றாலும் பரவாயில்லை உயிரைக் காப்பாற்றுங்கள் என்று செவிலியர்களைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிடும்போது எங்களுக்குக் கண் கலங்கிவிடும், பார்ப்பதற்கு பரிதாபமாக இருக்கும். பிள்ளையைப் பெற்ற தாய்க்குதான் தெரியும் மனித உயிரைப்பற்றி, அதனால் அனைவரையும் குழந்தையாக பார்த்துத்தான் சேவை செய்கிறோம். சிலர் எங்களையும் கஷ்டப்படுத்துவார்கள், அதையும் சகித்துக்கொண்டுதான் சேவை செய்துவருகிறோம். அரசு மருத்துவமனைகளில் பணிசெய்யும் அனைத்து செவிலியர்களும் சுழற்சி முறையில் டூட்டி பார்த்தாகவேண்டும், அப்படிதான் கொரோனா வார்டு டூட்டி பார்த்துட்டு வீட்டுக்குப் போவோம் ஆட்டோ இருக்காது, இருந்தாலும் ஏற்றமாட்டார்கள். பேருந்தும் இல்லை, லாக் டவுன் என்பதால், எங்கள் நிர்வாகமும் மாற்று வழிசெய்யவில்லை. கொரோனா அச்சம் காரணமாக, வீட்டிலிருந்தும் யாரும் அழைத்து செல்ல வரமாட்டார்கள் என்கின்றனர் செவிலியர்கள்.

”அந்த யூனிஃபாம் போட்டுக்கொண்டு சாலையில் நடந்து போகவே கஷ்டமாக இருக்கும். வீட்டுக்குப் போனால் தனிமையில் இருக்கவேண்டும். இரவில் தூக்கம் வராது தனிமையில் இருக்கும்போது, பிள்ளைகள் ஏக்கமாக அம்மா….என்று அழைக்கும்போது கண்ணீர்தான் வரும். இவ்வளவு சிரமத்துக்கு இடையிலும் சேவையுடன் பணிசெய்கின்ற மருத்துவத் துறையினருக்குக் கடந்த ஆட்சியில் எங்கள் உரிமைகளான லீவு சரண்டர், டிஏ அனைத்தையும் துண்டித்துவிட்டார்கள். தற்போது புதியதாக வந்துள்ள ஆட்சியாவது எங்கள் மீது கருணை காட்டுமா, அரசு மருத்துவமனை செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு வந்துட்டு செல்ல கொரோனா காலம் முடியும் வரையில் வாகன வசதிகள் செய்துகொடுக்குமா என்று அழுகையுடன் கேட்கிறார்கள்.

உயிரை பணயம் வைத்து கொரோனா வைரஸ் பிடியிலிருந்து மக்களை காப்பாற்றும் செவிலியர்களுக்கு மின்னம்பலம்.காம் சார்பாகச் செவிலியர் தினம் வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்த செவிலியர் தினத்தில், மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் ஆறுதல் அளிக்கும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளித்து அவர்களைக் காப்பாற்றும் அரும்பணியில் கடந்த ஓராண்டாக மருத்துவர்களும், செவிலியர்களும் இதர பணியாளர்களும் அயராது அரும்பணியாற்றி வருகின்றனர். இப்பணியில் தமது உயிரை துச்சமென மதித்து களப்பணியாற்றிய சில மருத்துவர்கள் தமது இன்னுயிரையும் தியாகம் செய்துள்ளனர். இது ஈடு செய்ய முடியாத பெரும் தியாகம் என்பதை உணர்ந்துள்ள இந்த அரசு, அவர்தம் குடும்பத்தாருக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், கொரோனா சிகிச்சைப் பணியாற்றியபோது, அத்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 43 மருத்துவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடாக வழங்கிட முடிவு செய்துள்ளது.

மேலும், அல்லும் பகலும் நமது அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவுப் பணியாளர்கள், ஆய்வுக்கூடப் பணியாளர்கள், சி.டி.ஸ்கேன் பணியாளர்கள், அவசர மருத்துவ ஊர்திப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களின் சேவையைப் பாராட்டும் வகையில் கொரோனா தொற்றுக்கான சிகிச்சை மற்றும் அச்சிகிச்சை சார்ந்த பணிகளில் ஈடுபட்ட மேற்கூறிய அலுவலர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கவும் இந்த அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காலமான, ஏப்ரல், மே, ஜூன் மூன்று மாத காலத்திற்கு மருத்துவர்களுக்கு 30 ஆயிரம் ரூபாயும். செவிலியர்களுக்கு 20 ஆயிரம் ரூபாயும், இதர பணியாளர்களுக்கு 15 ஆயிரம் ரூபாயும், பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்களுக்கு 20 ஆயிரம் ரூபாயும் ஊக்கத் தொகையாக வழங்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

**வணங்காமுடி, வினிதா**

,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share