வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Low Pressure Area Forms Over Bay of Bengal
தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது; மத்திய- மத்திய மேற்கு வங்க கடலில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது; இதனால் காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
தற்போது வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகி இருப்பதாகவும் அடுத்த 24 மணிநேரத்தில் இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியானது வங்க கடலில் வடமேற்கு திசையில் வடக்கு ஒடிஷா மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்க மாநிலத்தின் கடற்கரை பகுதிகளை நோக்கி நகர வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அத்துடன், தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும், இடி-மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.
