காதல் முக்காட்டை கலைத்த ஆற்று வெள்ளம்!

தமிழகம்

மேட்டுப்பாளையத்தில் பவானி ஆற்றங்கரைக்குச் சென்ற காதல்ஜோடி திடீர் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டு, அங்கிருந்த மரத்தின் மீது ஏறி உயிர் தப்பினர்.

பவானி ஆற்றில் வெள்ளம்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணை மழையால் நிரம்பி வழிகிறது. அந்த அணையில் இருந்து 4 மதகுகள் வழியாகவும் உபரிநீர் திறக்கப்பட்டு வினாடிக்கு 14,000 கனஅடி வரை நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

இந்த நிலையில் காதல் ஜோடிகளான காரமடை அண்ணாநகரைச் சேர்ந்த பிரதீப், காமராஜ் நகரைச் சேர்ந்த காயத்ரி இருவரும் வெள்ளிக்கிழமை மாலை மேட்டுப்பாளையம் அருகே உள்ள விளாமத்தூர் என்ற இடத்தில் பவானி ஆற்றங்கரையோரம்  அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

மரத்தில் ஏறி தஞ்சம்

இருவரும் மெய்மறந்து பேசிக் கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக ஆற்றில் வெள்ளம் வரத் தொடங்கியிருக்கிறது. வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட இருவரும் செய்வதறியாது திகைத்துப் போய் நின்று பயத்தில் கத்தி கூச்சலிட்டு இருக்கின்றனர். வெள்ளம் அதிகமாக வர வர, உயிரை காப்பாற்றிக் கொள்ள எண்ணிய இருவரும் ஆற்றின் நடுவில் இருந்த ஒரு மரத்தில் ஏறிக்கொண்டனர். இதைப்பார்த்த பொதுமக்கள் சிலர் மேட்டுப்பாளையம் காவல்துறையினருக்கும், தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவித்து இருக்கின்றனர்.

காதல் முக்காடு கலைந்தது

உடனடியாக அங்கு சென்ற மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன், தீயணைப்பு நிலைய அதிகாரி பாலசுந்தரம் ஆகியோர் ஆற்றில் சிக்கிக் கொண்ட காதல்ஜோடியை மீட்கும் பணியில் இறங்கினர். நீண்டப் போராட்டத்திற்குப் பிறகு பரிசல் மூலம் கயிறு கட்டி காதல் ஜோடியை பத்திரமாக மீட்டனர்.

“யாருக்கும் தெரியாமல் நான்கு வருடமாக காதலித்துக் கொண்டிருந்தார்கள். ஊருக்கோ, அவர்களின் வீடுகளுக்கோ கூட தெரியாத நிலையில், இப்படி வெள்ளத்தில் சிக்கிக் கொண்டதால் காதல் சமாச்சாரம் எல்லாருக்கும் தெரிந்துவிட்டது. இது ஒரு வகையில் நல்லதுதான். காதலை எப்படி வீட்டுக்கு சொல்வது என்று தவித்துக் கொண்டிருந்த நிலையில் வீட்டுக்கு மட்டுமல்ல ஊருக்கும் உலகத்துக்குமே காதலைச் சொல்லிவிட்டது வெள்ளம்” என்கிறார்கள் உள்ளூர் வாசிகள்.

கலை.ரா

ஸ்டெர்லைட் ஆலையை வாங்க 7 நிறுவனங்கள் ஆர்வம்!

+1
0
+1
1
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.