சொத்துகள் முடக்கம் : லாட்டரி மார்ட்டின் வழக்கு – edக்கு பறந்த உத்தரவு!

Published On:

| By Kavi

லாட்டரி தொழிலதிபர் மார்ட்டின், அவரது மனைவியும் அதிமுக எம்.எல்.ஏ-வுமான லீமா ரோஸ் மார்ட்டின் மற்றும் மகள் டெய்சி ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனு தொடர்பாக அமலாக்கத்துறைக்கு  சென்னை உயர் நீதிமன்றம்  நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

லாட்டரி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான மார்ட்டின், கடந்த 2009 மற்றும் 2010-ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் கேரளாவில் மோசடியாக சிக்கிம்  லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ததன் மூலம், சிக்கிம் அரசுக்கு ரூ.910.29 கோடி இழப்பு ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டார். 

ADVERTISEMENT

இதன் அடிப்படையில் சிபிஐ  வழக்கு ஒன்றைப்பதிவு செய்தது. அதனைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை சட்டவிரோத பணப் பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கைப் பதிவு செய்தது. இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறையால் ஐந்து தற்காலிக சொத்து முடக்க உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. 

லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு தொடர்புடைய, தமிழ்நாடு உட்பட பல்வேறு இடங்களிலும் இருக்கக்கூடிய 457 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத் துறை முடக்கம் செய்தது. அந்த முடக்கத்தை அமலாக்கத் துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உறுதி செய்தது. 

ADVERTISEMENT

இந்நிலையில், சொத்துக்கள் முடக்கப்பட்டதற்கு எதிராக மார்ட்டின் மற்றும் அவருக்கு சொந்தமான 30-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அந்த மனுக்களில், தங்களிடம் எந்தவொரு விளக்கமும் கேட்கப்படாமலும், உரிய விதிமுறைகளைப் பின்பற்றாமலும் தன்னிச்சையாக இந்த சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. எனவே, இந்த முடக்க உத்தரவை ரத்து செய்து, தங்களது சொத்துக்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்  என்று கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது. 

ADVERTISEMENT

இந்த வழக்குகள் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தர்மாதிகாரி மற்றும் நீதிபதி அருள்முருகன் அமர்வில் இன்று (ஜூன் 9)  விசாரணைக்கு வந்தது. 

அப்போது, இந்த மனுக்களுக்கு ஆறு வாரங்களுக்குள் பதிலளிக்க அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர். 

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share