சிறப்புக் கட்டுரை: போனில் தொலையும் இளம் தலைமுறை!

Published On:

| By admin

ஜோதி யாதவ்

நண்பகல் நேரம் போன் பேட்டரியை 100 சதவிகிதம் சார்ஜ் செய்வதற்கானது, மாலை நேரம் விளையாட்டு மைதானங்களில் டிஜிட்டல் கேம் ஆடுவதற்கானது, இரவு நேரம் நெட்வொர்க் சிக்னல் கிடைப்பதற்காக மாடியில் ஏறி நிற்பதற்கானது. இந்த நேரத்தில்தான், மொபைல் டேட்டா வேகமானதாகவும் மலிவானதாகவும் இருக்கிறது. அரசியல் பிரச்சாரம், ஆபாச நுகர்வு, புஷ்பா போன்ற ஆக்‌ஷன் படங்களைப் பார்ப்பது ஆகிய மூன்று தலையாய பணிகளுக்கு உகந்ததாகவும் அமைகிறது.

உத்தரப் பிரதேசத்தில் உள்ள பெரும்பாலான இளம் தலைமுறையினர் இப்படித்தான் நேரத்தைக் கழிக்கின்றனர். அறிஞர் கிரேக் ஜெப்ரி குறிப்பிடும், இந்தியாவின் எங்கும் செல்லாத் தலைமுறையினர் இவர்கள். நாட்டில் படித்த வேலையில்லாத இளைஞர்களைத்தான் இவர் இப்படிக் குறிப்பிடுகிறார்.

மொபைல் டேட்டா என்னும் போதைப்பொருள்

வேலைவாய்ப்பு குறைவாகவே இருக்கிறது. கல்லூரிப் பட்டங்களுக்கு மதிப்பில்லை. உட்கார்ந்து சாப்பிடக் குடும்பச் சொத்தும் இல்லை. ஆனால், இந்த இளைஞர்களுக்கு எல்லாவற்றையும் விலக்கிவைக்க 2 ஜிபி டேட்டா போதுமானதாக இருக்கிறது.

ஒரு தலைமுறைக்கு முன்னதாக, வேலையில்லாத இளைஞர்கள் சமூகக் கோபத்தின் அலையை வெளிப்படுத்தினர். ஆனால், தற்போது வேலையில்லாப் பிரச்சினை குறித்து போராட்டங்கள் நடைபெற்றாலும் அவை அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கின்றன (அண்மையில் நடந்த பிஹார் ரெயில்வே போராட்டம்போல்)

2020இல் வேலையில்லாத இளைஞர்கள் உண்மையில் கவனச் சிதறலை நாடுகின்றனர். இந்தப் புத்தம் புதிய உலகில் ஆற்றாமை அல்லது கோபம் எழுந்தால், அவை இணைய ஸ்க்ரோலிங்கிலும் இன்ஸ்டாகிராம் ரீல்களிலும் அமைதியாகின்றன.

உத்தரப்பிரதேசம் 20 கோடி மக்களைக் கொண்டுள்ளது. இந்தியாவின் இளம் மாநிலங்களில் ஒன்று இது (2016 கணக்குப்படி இதன் மக்களின் சராசரி வயது 20). இம்மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் நிலையில் வேலையில்லாத் திண்டாட்டம் குறைவாக இருப்பதாக அண்மையில் மாநில அரசு பெருமைப்பட்டுக்கொண்டது. இந்தியப் பொருளாதாரத்தைக் கண்காணிக்கும் மையத்தின் புள்ளிவிவரம், வேலையில்லா விகிதத்தை 3 சதவிகிதமாகக் குறிப்பிட்டாலும், இது உண்மை நிலையைப் பிரதிபலிப்பதாகக் கொள்ள முடியாது. இதில் பல அம்சங்கள் உள்ளன.

உ.பி-யில் வேலையின்மை: உண்மை நிலவரம் என்ன?

இந்தக் கட்டுரைக்காக பிரின்ட் செய்தியாளர்கள் உத்தரப் பிரதேசத்தின் பல நகரங்களுக்குச் சென்று டீக்கடை, மால்கள், மைதானங்கள் உள்ளிட்ட இடங்களில் இளைஞர்களைச் சந்தித்துப் பேசினர். இந்த இடங்களில், இளைஞர்களின் உற்சாகத்தை அல்லது தேர்தல் தொடர்பான விவாதங்களைக்கூடக் காண முடியவில்லை.

கிரேக் ஜெப்ரி தனது புத்தகம் ஒன்றில், உத்தரப் பிரதேச இளைஞர்கள், செல்போன்களை கலாச்சாரத் தனித்தன்மையாகப் பார்ப்பதாகவும் உரையாடலுக்குப் பயன்படுத்துவதாகவும் குறிப்பிட்டிருந்தார். ஆனால் பத்தண்டுகளில் நிலைமை மாறிவிட்டது. இன்று மக்கள் பேச அல்ல, பேச்சைத் தவிர்த்து, கவனச்சிதறலில் மூழ்க போன்களை பயன்படுத்துகின்றனர்.

பிரயாக்ராஜ் மாவட்ட கிராமம் ஒன்றைச் சேர்ந்த 22 வயதான ஹர்ஷல் யாதவ், அரசு தேர்வு மூலம் வேலைக்குக் காத்திருப்பவர், தினசரி தீவிர நிகழ்ச்சி நிரலைக் கொண்டுள்ளார். நண்பகலில் தனது போனை சார்ஜ் செய்கிறார். மூன்று மணி நேரம் கழித்து போனை எடுத்துக்கொண்டு காதில் இயர்போனை மாட்டிக்கொண்டு மைதானத்துக்குச் செல்கிறார்.

புழுதி பறக்கும் மைதானத்தில் 15 வயது முதல் 35 வயதான இளைஞர்கள் வாலிபால் விளையாடக் குழுமியுள்ளனர். யாதவும் இன்னும் சிலரும் சற்றுத் தொலைவில் அமர்ந்துகொள்கின்றனர். ஆனால், அவர்கள் விளையாட்டைப் பார்க்காமல் போன் திரையில் மூழ்கியிருக்கின்றனர். ஒரு சிலர் பிரிபயர் விளையாடுகின்றனர். சிலர் இன்ஸ்டாவில் புஷ்பா பாடல்களைப் பார்க்கின்றனர்.

யாதவ் ஒரு சில வேலைவாய்ப்பு செயலிகளைத் திறந்தாலும் அவரால் ஃபேஸ்புக் வீடியோக்களைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. இந்தக் குழுவினர் அடுத்ததாக விளையாடச் செல்லும் நிலையில், இன்னொரு பிரிவினர் இப்படி வந்து அமர்ந்துகொள்கின்றனர்.

தலைமுறை மாற்றம்

ஒரு தலைமுறைக்கு முன், இளைஞர்கள் மாடியில் அமர்ந்து பேசுவதை, வாலிபால், கபடி விளையாடுவதை, தெருக்களில் உலாத்துவதை அல்லது டீக்கடைகளில் பேசுவதை சகஜமாக பார்க்கலாம். ராணுவத்தில் பணியாற்றும் பவன் குமார், இத்தகைய அனுபவத்தை நினைவுகூர்கிறார்.

“ஆண்டுக்கு இரண்டு முறை ராணுவத் தேர்வு நடைபெறும். கிராமம் எங்கும் இளைஞர்கள் ஓட்டப்பயிற்சி செய்வதைப் பார்க்கலாம். படிக்க விரும்புகிறவர்கள் போட்டித் தேர்வு எழுதினார்கள், மாணவர்கள் அரசியல் பேசினார்கள்” என்கிறார். ராணுவ, காவல் துறை வேலைவாய்ப்பு குறைந்துவிட்டது என்றும் சொல்கிறார்.

இந்திய இளைஞர்கள், வேலைவாய்ப்பின்மையிலும் போதிய வாய்ப்புகள் இல்லாத சுழற்சியிலும் சிக்கிக்கொண்டிருப்பதாகக் கூறுகிறார் ‘வாட் மில்லினியல்ஸ் வாண்ட்’ புத்தகத்தை எழுதிய விவன் மார்வா. ஆண்டுதோறும் படித்துவிட்டு வரும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்குப் போதிய நல்ல வேலைவாய்ப்பு இல்லை என்கிறார். எனவே இந்த இளைஞர்கள் போனிலும் சமூக ஊடகங்களிலும் நேரத்தைக் கழிக்கின்றனர்.

பல இளைஞர்களுக்கு போன் மோகம் ஆழமான பிரச்சினையின் அடையாளம் என்றாலும் இது வெறும் பொழுதுபோக்கு என்றே கூறுகின்றனர். சீஷ் ராம் எனும் இளைஞர், இந்தப் பழக்கத்தை ஏதோ தாந்திரீகச் சடங்குபோல விவரிக்கிறார்.

“இளைஞர்கள் தங்கள் ஆற்றாமையை மடைமாற்ற போனை பயன்படுத்துகின்றனர். போனை சார்ஜ் செய்வது, ரீசார்ஜ் செய்வது, பயன்படுத்துவதில் நீண்ட நேரம் செலவிடுகின்றனர்” என்கிறார்.

இப்படிச் செய்வதன் மூலம், இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறாய் எனும் அச்சமூட்டும் கேள்வியைத் தவிர்க்க முடிவதாக டிப்ளோமா படித்த யாதவ் சொல்கிறார்.

நேரத்தைக் கொல்லும் வழி

இந்த பட்ஜெட்டில், அரசு அடுத்த ஐந்தாண்டுகளில் இளைஞர்களுக்கு 60 லட்சம் வேலைவாய்ப்பை உருவாக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

ஆனால், கடந்த ஆண்டுகளில் அரசு வேலைகளில் காலியிடங்கள் குறைந்து வருகின்றன. 2018இல், 3,700 முனைவர் பட்டதாரிகள், 28,000 முதுகலை பட்டதாரிகள் உள்ளிட்ட 93,000 பேர் 62 பியூன் பணியிடங்களுக்காக விண்ணப்பித்தனர். இந்த நிலை மேம்பட்டுவிடவில்லை.

100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பட்டதாரிகள் வேலைக்கு முயற்சி செய்வதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. வேலைக்கு முயற்சி செய்வது என்பது லாட்டரி சீட்டு பரிசுக்குக் காத்திருப்பதுபோல ஆகிவிட்டது. ரேபரேலி மாவட்டத்தில் உள்ள 26 வயது ஜெய்சங்கர், பி.எஸ்சி, எம்.எஸ்சி, பி.எட் உள்ளிட்ட பட்டங்கள் வைத்திருந்தாலும், ஐந்து வருட முயற்சிக்குப் பிறகு இப்போது ஆசிரியர் வேலைக்கு முயற்சி செய்கிறார். நகரில் வசிக்க முடியாமல் கிராமத்துக்கு இவர் திரும்பி வந்துவிட்டார்.

கிராமத்தில் அப்பா டீக்கடையில் உதவி செய்பவர், இடையிடையே போனில் தஞ்சம் அடைகிறார். இணையம் இருந்தால், நேரம் போகும் என்கிறார்.

ஃபேஸ்புக்கில் நேரம் கழிகிறது

பெரும்பாலான இளைஞர்கள் இப்படித்தான் நேரத்தைக் கழித்தாலும் அவ்வப்போது சிலர் பணம் சம்பாதிப்பதற்கான முயற்சியில் ஈடுபடுகின்றனர். ஆனால் இதுவும்கூட அவர்கள் பொழுதுபோக்குக்கான தேவையை நிறைவேற்றவே அமைகிறது. இவர்கள் யூடியூப்பில் ஒரு மணி நேரம், இன்ஸ்டாவில் அரை மணி நேரம் ஃபேஸ்புக்கில் சில மணி நேரம் எனச் செலவிடுகின்றனர்.

இந்த இளம் தலைமுறைக்கு, புகைப்படத்துக்கு போஸ் கொடுப்பதும், பெரும்பாலான நேரங்களில் சுற்றித்திரிவதும்கூட, ஈர்ப்புடையதாக, விருப்பமானதாக அமைகிறது.

கட்டுரையாளர் குறிப்பு:

ஜோதி யாதவ் செய்தி தொகுப்பாளர் – நியூஸ் 18, லல்லன்டாப் மற்றும் தி பிரின்ட் ஆகியவற்றில் தனது பணிகளுக்காக அறியப்படுபவர்.


நன்றி: [தி பிரின்ட் ](https://theprint.in/india/unemployment-and-unlimited-data-up-jobless-youth-are-neither-angry-nor-idle/828615/)
தமிழில்: சைபர் சிம்மன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share