லாரி கடத்தல்… 10கிமீ தொங்கியபடி சென்ற போலீஸ் : சினிமாவை மிஞ்சும் காட்சி!

Published On:

| By Kavi

Lorry hijacking

கனரக லாரியை கடத்திய நபரை பிடிக்க அந்த லாரியில் தொங்கியபடி போக்குவரத்து போலீசார் ஒருவர் சென்றுள்ளார். Lorry hijacking

செங்கல்பட்டு சுங்கச்சாவடி அருகே கனரக லாரிகளை ஓரமாக நிறுத்திவிட்டு ஓட்டுநர்கள் டீ குடிப்பது வழக்கம்.

அந்த வகையில் இன்று (மே 20) ஒரு ஓட்டுநர் லாரியை நிறுத்திவிட்டு அருகில் இருந்த கடைக்கு சென்றுள்ளார். 

அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் லாரியில் ஏறி அந்த லாரியை தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்னை நோக்கி கடத்திச் செல்ல முயன்றார். 

அந்த நபர் லாரியை கடத்த முயல்கிறார் என்று சுதாரித்துக் கொண்ட லாரி ஓட்டுநர் பின்னால் ஓடி சென்று நிறுத்த முயன்றார். ஆனால் முடியவில்லை. 

அங்கு சென்று கொண்டிருந்த இருசக்கர வாகன ஓட்டிகளின் உதவியுடன் நெடுஞ்சாலையில் லாரியை துரத்திச் சென்றார். 

இந்த சூழலில் மகேந்திரா சிட்டி சிக்னலில் லாரி நின்று கொண்டிருந்தபோது அங்கு பணியில் இருந்த போக்குவரத்து காவலர் முருகன் லாரியில் ஏறி அதைக் கடத்தியவரை பிடிக்க முயன்றார். 

ஆனால் அந்த அடையாளம் தெரியாத நபர் லாரியை எடுத்து நிறுத்தாமல் சென்று கொண்டிருந்தார். இதனால் சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு காவலர் முருகன் தொங்கியபடியே உயிரை பணயம் வைத்து சென்று கொண்டிருந்தார். 

அந்த லாரிக்கு பின்னாலும் போலீசார் துரத்திச் சென்றனர். தொடர்ந்து மறைமலைநகர் சிக்னலுக்கு அருகே லாரியை மடக்கினர். அந்த லாரி செண்டர் மீடியனில் மோதி நின்றிருக்கிறது. அப்போது அந்த நபர் லாரி கண்ணாடி, இருக்கை ஆகியவற்றை அடித்து உடைத்திருக்கிறார். தொடர்ந்து லாரிக்குள் ஏறிய சில ஆண்கள் அந்த நபரை அடித்து இழுத்து வந்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

அவரை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல் கட்டமாக அவர் மதுபோதையில் இருந்ததாகவும் தகவல்கள் வருகின்றன. 

லாரியில் தொங்கியபடியே சென்ற போக்குவரத்து காவலர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார். 

சினிமா காட்சிகளை மிஞ்சும் அளவுக்கு சென்னை நெடுஞ்சாலையில் நடந்த இந்த சம்பவம் குறித்த வீடியோவும் புகைப்படமும் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

அந்த காவலருக்கு பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன. தாம்பரம் ஆணையர் அபின் தினேஷ் மொடாக், காவலர் முருகனை பாராட்டினார்.  Lorry hijacking

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share