பாலியல் வன்கொடுமை வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா சிறப்பு புலனாய்வு குழு முன்பு ஆஜராகாததால் லுக்அவுட் நோட்டீஸ் இன்று (மே 2) விடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் கர்நாடகாவின் ஹாசன் தொகுதியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஜேடிஎஸ் கட்சி வேட்பாளராகவும் உள்ளவர் பிரஜ்வல் ரேவண்ணா.
இவர் 300க்கும் மேற்பட்ட பெண்களை நாசமாக்கிய 3,000 ஆபாச வீடியோக்கள் வெளியாகி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக கடும் போராட்டங்கள் எழுந்த நிலையில், இந்த விவகாரத்தில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்த கர்நாடகா முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டார்.
கர்நாடக குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) கூடுதல் காவல்துறை இயக்குநர் ஜெனரல் (ஏடிஜிபி) பி கே சிங் தலைமையில் அமைக்கப்பட்ட எஸ்ஐடி, ஆபாச வீடியோக்களை கைப்பற்றி ஆய்வு செய்தது.
தொடர்ந்து இதில் குற்றவாளிகளாக சந்தேகிக்கப்படும் பிரஜ்வல் ரேவண்ணா மற்றும் அவரது தந்தை ஹெச்.டி.ரேவண்ணா ஆகியோர் மீது கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி ஹோலநரசிபூர் டவுன் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அவர்கள் இருவரும் கடந்த 30ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பபட்டது.
இதற்கிடையே நாட்டை விட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய பிரஜ்வல் ரேவண்ணா, ”விசாரணையில் கலந்துகொள்ள நான் பெங்களூரில் இல்லாததால், எனது வழக்கறிஞர் மூலம் CID பெங்களூருக்குத் தெரிவித்தேன். விரைவில் வாய்மையே வெல்லும்” என்று தெரிவித்திருந்தார்.
மேலும் எஸ்.ஐ.டி. அதிகாரிகளை நேரில் சந்தித்த பிரஜ்வல் ரேவண்ணாவின் வழக்கறிஞர்கள், வெளிநாட்டில் இருப்பதால் அவர் ஆஜராக ஒரு வார கால அவகாசம் கேட்டனர்.
அவர்களின் கோரிக்கையை நிராகரித்த எஸ்.ஐ.டி., தற்போது ரேவண்ணாவை கைது செய்வதில் தீவிரமாக இறங்கியுள்ளது.
அதன்படி முதல் கட்டமாக பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக எஸ்.ஐ.டி. தரப்பில் தேடும் குற்றவாளி என்பதை அறிவிக்கும் வகையில் லுக் அவுட் நோட்டீஸ் விடுவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
”பொய் இயந்திரமாக மாறியுள்ளார்” : மோடிக்கு காங்கிரஸ் தலைவர்கள் பதிலடி!
பிளாக் ஷீப்பின் ’நான் கோமாளி’ டிரைலர் எப்படி?