2019 மக்களவை உறுப்பினர் பதவியேற்பில் தமிழக எம்.பி.க்கள் பலர் தமிழில் பதவியேற்றனர். இன்று (ஜூன் 25) நடைபெறும் பதவியேற்பு விழாவில் எப்படி தமிழக எம்.பி.க்கள் பதவியேற்க உள்ளனர் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணியினர் வெற்றி பெற்றனர். இதனையடுத்து இன்று (ஜூன் 25) நடைபெறும் பதவியேற்பு விழாவில் எம்.பி.க்களாக பதவியேற்கின்றனர்.
முன்னதாக கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 38 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. இதில் தேனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றார்.
தமிழகத்தில் இருந்து அப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் தமிழ் மொழியிலேயே பதவியேற்றுக்கொண்டனர். தமிழக எம்.பி.க்களின் பதவியேற்பு அப்போது பேசுபொருளாக மாறியதோடு சமூக வலைதளங்களில் வைரலானது.
2019ஆம் ஆண்டு ஜூன் 18ஆம் தேதி நடைபெற்ற பதவியேற்பு விழாவில் தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு அப்போதைய தற்காலிக சபாநாயகர் வீரேந்திரக் குமார் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
அப்போது, மத்திய சென்னை திமுக எம்.பி. தயாநிதி மாறன், “தமிழ் வாழ்க.. வாழ்க கலைஞர்.. வாழ்க பெரியார்” என்றுக் கூறி பதவியேற்றுக்கொண்டார். தூத்துக்குடி திமுக எம்.பி. கனிமொழி “வாழ்க தமிழ், வாழ்க பெரியார்” எனக் கூறி பதவியேற்றுக் கொண்டார்.
விசிக தலைவர் தொல். திருமாவளவன் “வாழ்க அம்பேத்கர், பெரியாரியம்.. வளர்க ஜனநாயக சமத்துவம்” எனக் கூறினார். விழுப்புரம் விசிக எம்.பி. ரவிக்குமார், “வாழ்க தமிழ், வாழ்க அம்பேத்கர்” என்ற முழக்கத்துடன் பதவியேற்றார்.
ஜி.செல்வம் ‘வெல்க தமிழ்’ என்றும், காங்கிரஸ் உறுப்பினரான செல்லக்குமார் ‘வாழ்க தமிழ், வாழ்க பாரதம், பெருந்தலைவர் காமராஜர் புகழ் ஓங்குக, தலைவர் ராஜீவ் காந்தி புகழ் ஓங்குக’ என்றும் குறிப்பிட்டனர்.
தருமபுரி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான டி. செந்தில்குமார் பதவியேற்று முடித்ததும் ‘திராவிடம் வெல்க, கலைஞரின் புகழ் ஓங்குக’ என்று குறிப்பிட்டார்.
2019 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் “தமிழ் வாழ்க.. இந்தியாவும் வாழ்க” என்று கூறினார்.
சேலம் தொகுதி எம்.பி. பார்த்திபன், “வாழ்க தமிழ்.. வாழ்க தளபதி” என கூறி பதவியேற்றார். மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், “வாழ்க தமிழ்.. வாழ்க மார்க்சியம்” என்ற முழக்கத்துடன் பதவியேற்றார்.
திமுகவை எம்.பி. சி.என். அண்ணாதுரை, “வாழ்க தமிழ், வாழ்க தலைவர்,வாழ்க தளபதி” என்றும், பொன். சிகாமணி “வாழ்க தமிழ், தலைவர் கலைஞர் புகழ் ஓங்குக, வாழ்க தளபதி” என்று முழக்கமிட்டனர்.
நாமக்கல் தொகுதி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் எம்.பி, நாமக்கல் சின்னராஜ், “வாழ்க தமிழ், வாழ்க தீரன் சின்னமலை, வாழ்க காளிங்கராயன், வாழ்க கோவை செழியன்” என முழங்கினார்.
ஈரோடு தொகுதி மதிமுகவின் எம்.பி. கணேசமூர்த்தி, “தமிழ்நாடே என் தாய்நாடு, தாய்நாட்டின் உரிமை காப்போம்” என்றார்.
கே.சுப்பராயன், “லாங் லிவ் செக்யூலரிசம், லாங் லிவ் இந்தியா” என்றும், கோவை எம்.பி. நடராஜன், ‘உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்’ என்றும் முழங்கினர்.
மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், “வாழ்க தமிழ், வெல்க பெரியாரின் கொள்கை” என்றும், நாகை செல்வராஜ் “வாழ்க வள்ளுவம், வாழ்க தமிழ்நாடு, வாழ்க தொழிலாளர் ஒற்றுமை” என்றும் முழங்கினர்.
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியின் காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார், “ஜெய் ஜவான்.. ஜெய் கிசான்.. வாழ்க ராஜீவ் காந்தி” எனக் கூறி பதவியேற்றுக் கொண்டார்.
இந்நிலையில், இன்று (ஜூன் 25) தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியேற்க உள்ளனர்.
கடந்த முறை அவர்கள் பதவியேற்றது மிகவும் வைரலான நிலையில், தற்போது அனைவரும் எவ்வாறு பதவியேற்க உள்ளனர் என அனைவரும் ஆர்வமாக எதிர்நோக்கி காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பாஜக பின்னணியில் வந்த கலெக்டர்… கள்ளக்குறிச்சியில் நடந்தது என்ன?
”சொந்த பிள்ளைகளால் பாரத மாதா முதுகில் குத்தப்பட்ட நாள்” : ஆளுநர் ரவி