சென்னையில் இருந்து வெளியூர் சென்றவர்கள் திரும்பி வர வசதியாக தமிழக அரசு சார்பில் 850 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர தினம் மற்றும் வார விடுமுறையால் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வந்தது. இதனையடுத்து வெளியூர்களில் வந்து சென்னையில் வேலைபார்க்கும் நபர்கள், தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றனர்.
விடுமுறையை பயன்படுத்திக் கொள்வதற்காக ஆம்னி பேருந்துகள் கட்டணத்தை மூன்று மடங்காக உயர்த்தின.
இதையறிந்து ஒரு குழு அமைத்து ஆய்வு மேற்கொண்ட அரசு, கூடுதல் விலைக்கு டிக்கெட் வாங்கியவர்களுக்குக் கட்டணத் தொகை போக மீதித்தொகை பயணியரிடமே திருப்பிக் கொடுக்க ஏற்பாடு செய்தது. மேலும் அரசு சார்பில் 3 நாட்களுக்கு 610 சிறப்பு பேருந்துகளையும் இயக்கியது.
இந்தநிலையில் விடுமுறை முடிந்து பலர் சென்னை திரும்பத் தொடங்கி இருக்கும் நிலையிலும் அதேபோன்று ஆம்னிப் பேருந்துகள் கட்டணக் கொள்ளையில் ஈடுபட்டன.
வெளியூரிலிருந்து சென்னைக்கு வர அதிகபட்சமாக 4,500 ரூபாய் வசூலிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுதொடர்பாக போக்குவரத்துறைக்கு புகார் சென்றதை அடுத்து அதிகக் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை சிவசங்கர் எச்சரிக்கை விடுத்தார்.
இந்தநிலையில் வெளியூர்களில் இருந்து சென்னை திரும்பும் பயணிகளுக்கு வசதியாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்து இருக்கிறது. கோவை, ஈரோடு, திருப்பூர், பெங்களூரு உள்ளிட்ட முக்கியமான இடங்களில் இருந்து சென்னை திரும்ப இன்றும், நாளையும் 850 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு பேருந்துகளின் இயக்கத்தை கவனிக்க தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கலை.ரா
கடனுக்கான வட்டி விகிதம் உயர்வு: ஸ்டேட் வங்கியின் சுதந்திர தின பரிசு!
