எனக்காக என் நண்பர்கள் செய்த உதவி: லோகேஷ் கனகராஜ்

Published On:

| By Selvam

நான் குறும்படம் எடுத்தபோது எனது நண்பர்கள் தான் பணம் கொடுத்து உதவினார்கள். அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்ததால் தயாரிப்பு நிறுவனம் துவங்கினேன் என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகியுள்ள ஃபைட் கிளப் படத்தை, இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் நிறுவனம் தயாரித்துள்ளது.

ADVERTISEMENT
இயக்குநர் அப்பாஸ் ஏ. ரஹ்மத் இயக்கியுள்ள ‘ஃபைட் கிளப்’ படத்தில் விஜய் குமார் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை மோனிஷா மோகன் மேனன் நடித்திருக்கிறார். இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, சென்னையில் நடைபெற்றது.

இயக்குநர் அப்பாஸ் ஏ. ரஹ்மத் 

2020-ல் இப்படத்தை அறிவித்தோம். கொரோனா, ஷீட்டிங், லொகேஷன் என நிறையப் பிரச்சனை படம் 3 வருடங்கள் ஆகிவிட்டது. விஜய்குமார் சார் நினைத்திருந்தால் வேறு படம் இயக்கப் போயிருக்கலாம். ஆனால் எங்களுக்காகவும் தயாரிப்பாளருக்காகவும் காத்திருந்து, இப்படத்தில் வேலை செய்தார் விஜய்குமார். தான் மட்டுமில்லாமல் தன்னைச் சுற்றி இருப்பவர்களும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் லோகேஷ் சாருக்கு நன்றி. படத்தை அர்ப்பணிப்போடு உருவாக்கியுள்ளோம். உங்களுக்கும் பிடிக்கும்.

ADVERTISEMENT

நடிகர் விஜய் குமார் 

இது ஒரு ஆங்கில பட டைட்டில். மிகப் புகழ் பெற்ற டைட்டில் கல்ட் கிளாசிக். நாம் ஆத்மார்த்தமாகக் காதலுடன் உருவாக்கியுள்ள படம் அந்தப் படத்திற்குத் தரும் மரியாதையாக இருக்கும் என்பதால் வைத்தோம்.

ADVERTISEMENT

நாம் நினைத்த மாதிரி படத்தை உருவாக்க வேண்டும் எனும்போது, அதில் நிறையப் பிரச்சனைகள் வரும். அதற்கான உழைப்பை, நம் அர்ப்பணிப்பைத் தந்துதான் ஆக வேண்டும்.

லோகேஷ் என் நெருங்கிய நண்பர். நான் எது செய்தாலும் அதைக் கவனித்துப் பாராட்டுவார். இந்தப் படம் ‘விக்ரம்’ சக்ஸஸ் டைமில், 20 நிமிடம் தயாராகியிருந்தது, அப்போது பார்த்தார். பின்னர் ‘லியோ’ வெளியீட்டு டைமில் முழுசாக முடித்துவிட்டுக் காட்டினோம். அவர் பேனரிலேயே இந்தப் படம் வெளியாகிறது. இந்தியாவின் மிகப் பெரிய இயக்குநராக இருக்கிறார்.

எப்போதும் நாங்கள் சினிமா பற்றித்தான் பேசுவோம். அவர் இப்படத்தை வெளியிடுவது மகிழ்ச்சி. நிறையப் புதுமுகங்கள் அர்ப்பணிப்போடு வேலை பார்த்துள்ளனர். தயாரிப்பாளர் சினிமா மேல் உள்ள காதலால் இப்படத்தைத் தயாரித்துள்ளார். அவருக்காக இந்தப் படம் பெரிதாக ஜெயிக்க வேண்டும். அப்பாஸ் ஒரு சினிமா பைத்தியம். சினிமா தவிர அவனுக்கு எதுவும் தெரியாது. தீவிரமான மணிரத்னம் ஃபேன். அவனை இயக்குநராக இந்த உலகம் பாராட்டுவதைக் காண நானும் காத்திருக்கிறேன். அனைவருக்கும் நன்றி.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் 

இந்தப் படம் ‘மாநகரம்’ மாதிரிதான். எனக்கு இது ஒரு புதிய தொடக்கம். உங்கள் ஆசியோடு தொடங்க ஆசை.‘உறியடி’ விஜய்குமார், அவன் பேரும் என் பேரும் ஒரு படத்தில் ஒன்றாக வர வேண்டும் என்று 2017-லிருந்து பேசிக் கொண்டு இருக்கிறோம். அது இப்போது நடப்பது மகிழ்ச்சி. எனக்குத் தெரிந்த மிக நேர்மையான மனிதன் விஜய்குமார்.

எப்போதும் சினிமா பற்றி மட்டுமே சிந்திப்பவன், இந்தப் படத்தை நான் வெளியிடுவது, படக் குழுவிற்குச் செய்யும் நல்லதல்ல. நான் என் கம்பெனிக்கு செய்து கொண்ட நல்ல விசயம் அவ்வளவுதான்.

அத்தனை பேரும் அவ்வளவு கடினமாக உழைத்திருக்கிறார்கள், விஜய் குமாரை தவிர இந்தப் படத்தில் பல புதுமுகங்கள் உழைத்துள்ளார்கள். படத்திற்குப் பிறகு எல்லோரும் பெரிதாகப் பேசப்படுவார்கள்.

நான் படம் செய்ய ஆசைப்பட்ட போது என் நண்பர்கள் தான் பணம் போட்டு குறும் படம் எடுக்க வைத்தார்கள். அவர்களுக்குப் பின்னால் ஏதாவது செய்வேன் என எவரும் நினைக்கவில்லை. எனக்காக மட்டுமே செய்தார்கள், அதே போல் நான்கு பேருக்கு நான் செய்ய வேண்டுமென நினைக்கிறேன், அவ்வளவுதான், அதற்காகத்தான் இந்த தயாரிப்பு நிறுவனம். நல்ல படங்களைத் தர இந்த நிறுவனத்தைத் துவங்கியிருக்கிறோம். உங்கள் ஆதரவைத் தாருங்கள்.

இராமானுஜம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share