இந்திய திரையுலகைச் சார்ந்த அனைத்து திரைப்படங்கள் மற்றும் கலைஞர்களுக்கான விருதினை ஒவ்வொரு ஆண்டும் ஒரே மேடையில் வழங்கி கெளரவித்து வருகிறது சைமா.
இதனால் ஒவ்வொரு ஆண்டும் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது எனப்படும் சைமா விருது (SIIMA Awards) யாருக்கு கிடைக்கும் என்பதை பிரபலங்கள் மட்டுமின்றி ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
கடந்த 2012 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சைமா விருதுகள் வழங்கும் நிகழ்வானது, வெற்றிகரமாக 11வது ஆண்டை எட்டியுள்ளது. இந்தாண்டு துபாயில் கடந்த இரண்டு நாட்களாக விமரிசையாக இந்த விழா நடைபெற்றது.
இந்த நிலையில் கடைசி நாளான நேற்று (செப்டம்பர் 16) தமிழ் படங்களுக்கான சைமா விருதுகள் அறிவிக்கப்பட்டன.
இன்று முதல்… லோகேஷ்
இந்த விழாவில் தமிழ் திரையுலகைச் சேர்ந்த பலரும் பங்கேற்ற நிலையில், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி, ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ’லியோ’ படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜூம் பங்கேற்றார்.
விக்ரம் திரைப்படத்திற்காக சிறந்த இயக்குநர் விருதினை வாங்கிய அவர் பேசுகையில், “கடந்த வருடம் மாஸ்டர் திரைப்படத்திற்காக இதே விருதை வாங்கினேன். தற்போது விக்ரம் திரைப்படத்திற்காக வாங்கி இருக்கிறேன். உங்கள் ஆதரவிற்கு நன்றி. படக்குழு சார்பாக இந்த விருதை நான் வாங்கிக்கொள்கிறேன். இங்கு அமர்ந்திருக்கும் கமல் சாருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.
தொடர்ந்து அவரிடம் லியோ திரைப்பட அப்டேட் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு, ”படம் தொடர்பாக நிறைய வேலைகள் இருந்தன. அதனால்தான் அப்டேட்டை கொஞ்சம் தள்ளி வெளியிடலாம் என்று முடிவெடுத்தோம்.
படம் வெளியீட்டுக்கு 30 நாட்கள் முன்பிருந்து படம் தொடர்பான அப்டேட்களை வெளியிடலாம் என்று திட்டமிட்டு இருந்தோம். ஆகையால் நாளைக்கு (இன்றிலிருந்து) முதல் அப்டேட் வரும்” என்று லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
இது நடிகர் விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. அவர்கள் இன்று காலை முதல் #LeoSecondSingle என்ற ஹேஸ்டேகை சமூகவலைதளங்களில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

சைமா விருது 2023 வென்ற தமிழ் பிரபலங்களின் முழுப்பட்டியல்!
சாதனையாளர் விருது – இயக்குநர் மணிரத்னம்
சிறந்த நடிகர் – கமல்ஹாசன் (விக்ரம்)
சிறந்த நடிகை – த்ரிஷா (பொன்னியின் செல்வன் 1)
சிறந்த நகைச்சுவை நடிகர் – யோகிபாபு (லவ் டுடே)
சிறந்த வில்லன் – எஸ்.ஜே. சூர்யா (டான்)
சிறந்த துணை நடிகர் – காளி வெங்கட் (கார்கி)
சிறந்த துணை நடிகை வசந்தி – (விக்ரம்)
சிறந்த இயக்குநர் – லோகேஷ் கனகராஜ்
சிறந்த இசையமைப்பாளர் – அனிருத் (விக்ரம்)
சிறந்த பாடகர் – கமல் (விக்ரம்)
சிறந்த பாடலாசிரியர் – இளங்கோ கிருஷ்ணன் (பொன்னி நதி – பொன்னியின் செல்வன் 1)
சிறந்த ஒளிப்பதிவாளர் – ரவி வர்மன் (பொன்னியின் செல்வன் 1)
சிறந்த திரைப்படம் – பொன்னியின் செல்வன் 1
சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு – தோட்டா தரணி (பொன்னியின் செல்வன் 1)
சிறந்த அறிமுக நடிகர் – பிரதீப் ரங்கநாதன் (லவ் டுடே)
சிறந்த அறிமுக நடிகை – அதிதி ஷங்கர் (விருமன்)
சிறந்த அறிமுக இயக்குநர் – மாதவன் (ராக்கெட்ரி – தி நம்பி விளைவு)
சிறந்த அறிமுக தயாரிப்பாளர் – கௌதம் ராமச்சந்திரன் (கார்கி)
சிறந்த நடிகர் (விமர்சகர்கள் தேர்வு) – மாதவன் (ராக்கெட்ரி – தி நம்பி விளைவு)
சிறந்த நடிகை (விமர்சகர்கள் தேர்வு) – கீர்த்தி சுரேஷ் (சாணி காயிதம்)
