தென் சென்னை மக்களவைத் தொகுதியில் மீண்டும் தமிழச்சி தங்கப்பாண்டியன் வெற்றி பெற்றார்.
தென் சென்னை மக்களவைத் தொகுதியில், திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன், பாஜக சார்பில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மகன் ஜெயவர்தன், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் தமிழ்ச்செல்வி ஆகியோர் போட்டியிட்டனர்.
நட்சத்திர தொகுதியான தென் சென்னையில் தமிழச்சி தங்கபாண்டியனா, தமிழிசை சவுந்தரராஜனா என கடும் போட்டி நிலவி வந்தது.
இந்நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக் கழகத்தில் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டன.
மத்திய சென்னை, வட சென்னை தொகுதிகளுக்கான தேர்தல் முடிவுகள் விரைவில் அறிவிக்கப்பட்டாலும், தென் சென்னைக்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் நேற்று இரவுதான் அறிவித்தது.
அதன்படி, 5,16,628 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ள தமிழச்சி தங்கப்பாண்டியன் தென் சென்னையில் இருந்து மீண்டும் மக்களவைக்கு செல்கிறார்.
தன்னை எதிர்த்து போட்டியிட்ட தமிழிசையை 2,25,945 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இந்த தொகுதியில் போட்டியிட்ட தமிழிசை 2,90,683 வாக்குகள் பெற்று பின்னடைவைச் சந்தித்தார்.
அதிமுக வேட்பாளர் 1,72,491 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்திலும், நாதக வேட்பாளர் 83,972 வாக்குகளுடன் நான்காவது இடத்திலும் உள்ளனர்.
2019 தேர்தலில் இந்த தொகுதியில் வெற்றி பெற்ற தமிழச்சி தங்கப்பாண்டியன், தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஜெயவர்தனை 2,62,223 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…