நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதிமுக கூட்டணியில் அதிமுக 33, தேமுதிக 5, புதிய தமிழகம், எஸ்டிபிஐ தலா ஒரு தொகுதிகளில் போட்டியிட்டன.
தேர்தல் முடிவுகள் நேற்று ( ஜூன் 4) வெளியான நிலையில், அதிமுக போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடைந்துள்ளது. குறிப்பாக அதிமுக அமைப்பு செயலாளர் ஜெயக்குமார் மகன் ஜெயவர்தன் போட்டியிட்ட தென் சென்னை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, வேலூர், தேனி, புதுச்சேரி ஆகிய ஏழு தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளது.
மேலும், மதுரை, தென் சென்னை, தேனி, ராமநாதபுரம், வேலூர், நெல்லை, நீலகிரி, தருமபுரி, கோவை உள்ளிட்ட தொகுதிகளில் மூன்றாம் இடத்திற்கும், கன்னியாகுமரி, புதுச்சேரி தொகுதிகளில் நாம் தமிழர் கட்சியை விட குறைவான வாக்குகள் பெற்று நான்காவது இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளது.
அதிமுக டெபாசிட் இழந்திருப்பது அக்கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியான நேற்று மாலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில்,
“இந்த தேர்தல் முடிவுகள் நம்மை சோர்வடைய செய்யாது. 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கான பாடமும் படிப்பினையும் நமக்கு கிடைத்திருக்கிறது” என்று தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து அதிமுக வட்டாரத்தில் நாம் விசாரித்தபோது, “தேர்தல் முடிவுகளால் எடப்பாடி பழனிசாமி மிகவும் அப்செட்டாக இருக்கிறார். குறிப்பாக நாம் தமிழர் கட்சியை விட சில தொகுதிகளில் அதிமுக பின்னுக்குத் தள்ளப்பட்டதில் கடுமையான கோபத்தில் இருக்கிறார். தேர்தலில் சரியாக பணியாற்றாத மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க இருக்கிறார். பல இளைஞர்களை மாவட்டச் செயலாளர்களாக நியமிக்க திட்டமிட்டிருக்கிறார் ” என்கிறார்கள்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நிதிஷ், நாயுடு தங்களது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன்
மோடி தார்மீக தோல்வி : இந்தியா கூட்டணி கூட்டத்தில் கார்கே பேச்சு!
Comments are closed.