“கோயிலைப் பூட்டி வைப்பது, சாமியை சிறை வைப்பதற்கு சமம்” : நீதிபதி கண்டனம்!

Published On:

| By christopher

"Locking the temple is like imprisoning Goddess" : Judge condemned!

கோயிலைப் பூட்டி வைப்பது சாமியை சிறை வைப்பதற்கு சமம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கருத்து தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் உத்தபுரத்தில் பழமையான முத்தாலம்மன் மாரியம்மன் கோயில் உள்ளது. அங்கு கடந்த 2010ஆம் ஆண்டு  தீண்டாமைச் சுவர் எழுப்பப்பட்டதால் இரு சமுதாய மக்களிடையே பிரச்சினை ஏற்பட்டது.

இது தொடர்பாக இரு தரப்பினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், சாதி மோதல் காரணமாக 2014ஆம் ஆண்டு முத்தாலம்மன் கோயில் பூட்டப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை மாவட்டம் உத்தபுரத்தைச் சேர்ந்த பாண்டி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், “உத்தபுரத்தில் பூட்டி வைக்கப்பட்டுள்ள முத்தாலம்மன், மாரியம்மன் கோயிலைத் திறந்து, நாள்தோறும் பூஜைகள் நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்” என அவர் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி “இரு சமுதாயத்தினரிடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக கோயிலைப் பூட்டியதால், சாமிக்கு பூஜைகள் செய்ய முடியவில்லை. கோயிலைப் பூட்டி வைப்பது, சாமியை சிறை வைப்பதற்கு சமம்.

குற்ற வழக்கில் சிறையில் உள்ள கைதிகளுக்கு உணவு உள்பட அனைத்து அடிப்படை வசதிகளும் கிடைக்கிறது.

இந்த வழக்கில் சாமிக்கு தேவையான பூஜை உள்ளிட்ட தேவைகள் கிடைக்கப் பெறவில்லை. கோயிலை காலவரையின்றி மூடி வைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

இதுபோன்ற நிகழ்வுகளை அதிகாரிகள் வேடிக்கை பார்க்க கூடாது. உத்தபுரம் கோயிலை ஒரு சமுதாயத்தினர் மூடியுள்ளனர். இதில் அதிகாரிகளுக்கு எந்த தொடர்பும் இல்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஏற்றுக் கொள்ள முடியாது.

கோயில் நிலை குறித்த புகைப்படத்தை மனுதாரர் சமர்பித்திருந்தார். அதில் கோயிலானது மோசமான நிலையில் இருப்பது தெரிந்தது.

இந்த வழக்கில் கோயிலைத் திறந்து வழக்கம் போல் பூஜைகள் நடத்த அனுமதி வழங்கி உத்தர விடப்படுகிறது.

மேலும் இதில் ஏதேனும் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால், சம்பந்த பட்டவர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளலாம். சட்டம் ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி, எந்த கோயிலையும் பூட்டக் கூடாது” என நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

உச்ச நீதிமன்றத்தில் திரையிடப்பட்ட ’லாப்பட்டா லேடீஸ்’ : அமீர்கான் பெருமிதம்!

ஆ.ராசா உட்பட 31 பேர் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைப்பு : முழு விவரம்!

*

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share