8 மண்டலங்கள்: நாளை முதல் பேருந்துகள் இயக்கம்!

Published On:

| By Balaji

தமிழகம் முழுவதையும் 8 மண்டலங்களாகப் பிரித்து ஊரடங்கை அறிவித்துள்ளது தமிழக அரசு.

தமிழகம் முழுவதும் ஊரடங்கை வரும் ஜூன் 30ஆம் தேதி வரை நீட்டித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். எனினும் அதில் பல்வேறு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜூன் 1ஆம் தேதி முதல் பொதுப் போக்குவரத்தை அமல்படுத்துவதற்காக தமிழகம் 8 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்கள் முதல் மண்டலத்தில் இடம்பெற்றுள்ளன. தருமபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி ஆகியவை இரண்டாம் மண்டலம். விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி மூன்றாவது மண்டலத்தில் உள்ளன.

நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை ஆகியவை நான்காவது மண்டலம். திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகியவை ஐந்தாவது மண்டலம். தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகியவை ஆறாவது மண்டலம். காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் 7ஆவது மண்டலம். சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள் 8 ஆவது மண்டலமாக பிரிக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

பேருந்து போக்குவரத்து தொடர்பாக நாம் ஏற்கனவே [ஜூன் 3 முதல் பேருந்துகள்: ஆயத்தமாகும் அரசு!](https://minnambalam.com/public/2020/05/28/71/govt-buses-run-from-june-3) வெளியிட்ட செய்தியில், ஜூன் 3 ஆம் தேதிமுதல் அரசுப் பேருந்துகளை இயக்க முடிவெடுக்கப்பட்டிருப்பதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

தமிழகம் முழுதும் முதல் கட்டமாக 50 சதவிகிதப் பேருந்துகளை இயக்குவது என்றும், கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளில் பேருந்துப் போக்குவரத்தை இயக்குவதில்லை என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது” என்றும் சொல்லியிருந்தோம். நாம் சொன்னதுபடியே 50 சதவிகித பேருந்துகள் இயக்கத்திற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஆலோசனைக்குப் பிறகு ஜூன் 3ஆம் தேதி பேருந்து போக்குவரத்தைத் தொடங்கலாம் என்று முடிவு செய்திருந்ததை, ஜூன் 1ஆம் தேதி என்று மாற்றியமைத்தனர்.

ADVERTISEMENT

இந்த நிலையில் பேருந்து இயக்கம் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், 7 ஆவது மண்டலத்தில் உள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் 8 ஆவது மண்டலத்தில் உள்ள சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள் தவிர்த்து, அனைத்து மண்டலங்களுக்குள், 50 விழுக்காடு பேருந்துகள் மட்டும் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட தடங்களில் தனியார் பேருந்துகளும் இயக்க அனுமதிக்கப்படுகிறது. பேருந்துகளில் உள்ள மொத்த இருக்கைகளில், 60 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும். மண்டலத்திற்குள் பயணிக்கும் பயணிகளுக்கு இ-பாஸ் தேவையில்லை என்ற நிலையில், பொது போக்குவரத்து பேருந்துகளில் பயணிக்கவும் இ-பாஸ் அவசியமில்லை.

குறிப்பிட்ட சில விஷயங்களைத் தவிர, மண்டலங்களுக்கு இடையேயும், மாநிலங்களுக்கிடையேயுமான பேருந்து போக்குவரத்து சேவைகளுக்கான தடை தொடர்கிறது. அரசால் தனியாக வெளியிடப்பட உள்ள நிலையான வழிகாட்டு நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்றி பொது போக்குவரத்திற்கான பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.

**எழில்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share