கொரோனா: வறுமைக்கோட்டுக்குத் தள்ளப்படும் 40 கோடி இந்தியர்கள்!

Published On:

| By Balaji

கொரோனா வைரஸ் பாதிப்பால் நாடு முழுவதும், புலம்பெயர்ந்து பணி செய்பவர்கள் மற்றும் தினக் கூலிகள் என 40 கோடிக்கும் அதிகமான மக்கள் வறுமைக்கோட்டின் அடி நிலையைத் தொட இருப்பதாக ஜெனிவாவைத் தலைமையிடமாகக் கொண்ட சர்வதேச தொழிலாளர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது கொரோனாவால் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கு எந்த நேரமும் நீட்டிக்கப்படலாம் என்ற நிலை இருக்கிறது. இந்நிலையில் ஊரடங்கால் ஏற்பட்டு வரும் விளைவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது

ADVERTISEMENT

இந்த வைரஸ் பாதிப்பால் ஏற்பட்டிருக்கும் குறுகியகால பாதிப்புகளைத் தவிர்த்து, நீண்டகால பாதிப்புகளான வேலைவாய்ப்பின்மை, வருமானம் குறைதல் போன்ற பாதிப்புகளும் ஏற்படும் அபாயம் உள்ளதாக இந்த புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளது. வேலையின்மை காரணமாக மக்களுக்கான தேவைகளிலும் அதிக அளவு வீழ்ச்சி இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பொருளாதார நிபுணர்கள் கூறுகையில், தற்போது ஏற்படுகிற இந்த வறுமையை இந்தியா நிவர்த்தி செய்ய சில ஆண்டுகள் ஆகும் என்று கூறியுள்ளனர்.

ADVERTISEMENT

”கடந்த மூன்று வாரங்களில் வேலைவாய்ப்பின்மை மூன்று மடங்கு உயர்ந்துள்ளதைக் கருத்தில் கொண்டே மக்கள் வறுமையை நோக்கி எவ்வாறு வேகமாக நகர்கிறார்கள் என்பதைத் தீர்மானிக்க முடியும்” என தேசிய வணிகவியல் வளர்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர் அரூப் மித்ரா தெரிவித்துள்ளார்.

முறைசாரா தொழிலாளர்கள் அதிக அளவு உள்ள இந்தியா போன்ற நாடுகளில் அவர்களுக்கான வேலை நேரம் மற்றும் வருமானம் ஆகியவற்றில் ஏற்படும் இந்த அதிரடியான மாற்றங்களிலிருந்து அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் அந்த ஆய்வு தெரிவிக்கின்றது.

ADVERTISEMENT

90% முறைசாரா தொழிலாளர்களைக் கொண்ட இந்தியாவில் 40 கோடி மக்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழ் செல்ல இருப்பதாகவும், மேலும் இந்தியா, நைஜீரியா, பிரேசில் போன்ற நாடுகளில் முறைசாரா தொழிலாளர்கள் இந்த ஊரடங்கு உத்தரவால் அதிக அளவு பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் இந்த புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

** -பவித்ரா குமரேசன்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share