ராஜன் குறை
நேற்றுடன் சரியாக ஊரடங்கு தொடங்கி நாற்பது நாட்கள் நிறைவடைகிறது. முதலில் திட்டமிட்டபடி இன்று முதல் இயல்பு வாழ்க்கை அல்லது சில புதிய இயல்புகளுடன் கூடிய அன்றாட வாழ்க்கை மீண்டிருக்க வேண்டும். ஆனால், ஊரடங்கு மேலும் தொடர்கிறது. எத்தனை நாட்கள் தொடரும் என்பது நிச்சயமற்ற நிலையில் இது தொடர்கிறது. மத்திய அரசு தளர்த்தும் விதிமுறைகளைக்கூட மாநில அரசு தளர்த்தாமல் இருக்கலாம் என்ற நிலையும் உருவாகியுள்ளது. மாவட்ட வாரியாக சிவப்பு மண்டலம், ஆரஞ்சு மண்டலம், பச்சை மண்டலம் எனப் பிரிக்கப்பட்டு அவற்றுக்கேற்ப கட்டுப்பாடுகள், விதிமுறைகள் அமலாகின்றன. இந்த நிலையில் உள்ளபடியே நிலைமையை மத்திய மாநில அரசுகள் சீர்தூக்கிப் பார்க்கின்றனவா என்ற கேள்வி நம் மனத்தில் எழுகிறது. அரசிடம் இருக்கும் தகவல்கள் நம்மிடம் இல்லாவிட்டாலும், ஊடகங்களில் கிடைக்கும் தகவலை வைத்து சிந்திக்கும் பொறுப்பு நமக்கு இருக்கிறது. ஏனெனில் இது இன்னும் மக்களாட்சி அமைப்புதான் என்பதால் நமக்குக் கருத்துக் கூறும் உரிமை இருக்கிறது.
இந்த நாற்பது நாட்கள் இந்திய நாடும், தமிழகமும் அனுசரித்த ஊரடங்கு என்பது உலக நாடுகள் பலவற்றுடன் ஒப்பிடும்போது கடுமையானது. அரசு இயந்திரத்தால் கொடுங்கரம் கொண்டு அமல்படுத்தப்பட்டது. லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் ஆங்காங்கே முகாம்களில் அடைபட்டும் பலர் நெடுந்தொலைவு நடந்தே சென்றும் கொடும் இன்னல்களை அனுபவித்ததை அரசுகள் இரக்கமற்று வேடிக்கை பார்த்தன. இப்படி எளிய உழைக்கும் மக்களை கொடும் துயரத்துக்கு உள்ளாக்கிய ஊரடங்கால் நாம் அறிந்துகொண்ட உண்மைகள் என்ன என்பதை கவனமாக சிந்தித்துப் பார்ப்பது அவசியமாகும். இந்தக் கட்டுரை சுருக்கமாகச் சிலவற்றைத் தொகுத்துக்கொள்ள விரும்புகிறது.
நோய்த்தொற்றின் பரவலும் தன்மையும்
ஊரடங்கால் நோய்த்தொற்று பரவுவதைத் தடுக்க முடியவில்லை. சோதனை செய்வது அதிகரிக்கும்போது, தொற்று இருப்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. குறிப்பாக, பெரு நகரங்களிலும், சிறு நகரங்கள் சிலவற்றிலும் நோய்த்தொற்று தொடர்ந்து பரவுகிறது. இன்னம் இரண்டு வாரங்களிலோ, நான்கு வாரங்களிலோ நோய்த்தொற்று பரவுவது குறையும் என்று எண்ணுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. நிச்சயம் தொடர்ந்து அதிகரிப்பதற்கே வாய்ப்பு அதிகம்.
அதே நேரம் நோய்த்தொற்றுபவர்கள் பலருக்கு நோய் கடுமையாக இல்லை என்பதும் உறுதியாகிறது. எண்பது சதவிகிதம் பேருக்கு வழக்கமான ஜலதோஷம் அளவுக்கோ, அதையும்விட குறைவாகவோதான் நோயின் வீரியம் இருக்கிறது என்று கூறப்படுகிறது. இத்தாலியிலோ, நியூயார்க்கிலோ நடந்தது போல நோய்த்தொற்று மூச்சுத்திணறலுக்கும், மரணத்துக்கும் இட்டுச்செல்வது மிகவும் குறைவாகத்தான் இருக்கிறது. இப்படி நிகழ்பவர்கள் பெரும்பாலும் வேறு நோய்களும், உடல் பலவீனமும் கொண்டவர்களாக, வயதானவர்களாக இருக்கிறார்கள்.
இந்தியாவில் இந்த நோயின் தீவிரம் குறைவாக இருப்பதாகவே மருத்துவ நிபுணர்கள், தொற்றுநோய் நிபுணர்கள் பலர் கருதுகிறார்கள். ஊரடங்கு மட்டுமே நோயைத் தடுக்கவில்லை என்பதுடன், தொற்று ஏற்பட்டவர்களிடமும் நோயின் தீவிரம் அதிகமில்லை என்பதைக் காணும்போது அவர்கள் இந்த முடிவுக்கு வருகிறார்கள். அதற்கான காரணங்களில் ஒன்றாக பி.சி.ஜி நோய்த்தடுப்பு ஊசியை இந்தியாவில் அனைவருக்கும் போட்டிருப்பது காரணம் என்று கருதப்படுகிறது. அண்டை நாடுகளான போர்ச்சுக்கல், ஸ்பெயின் ஆகியவற்றை ஒப்பிடும்போது பி.சி.ஜி தடுப்பூசி பயன்படுத்தும் போர்ச்சுக்கலில் கொரோனா தொற்று குறைவாக இருப்பதையும், ஸ்பெயினில் அதிகமாக இருப்பதையும் இதற்குக் காரணங்களாகக் கூறுகிறார்கள்.
ஒட்டுமொத்தமாக தொகுத்துக்கொண்டால்: 1. தொடர்ந்த ஊரடங்கால் நோய்த்தொற்று பரவல் நிற்கப்போவதில்லை. 2. நோய்த்தொற்று பரவினாலும் நோயின் தீவிரம் மிகவும் குறைவாகத்தான் இருக்கிறது. 3. ஏற்கனவே நோய்மை கொண்டவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், வயதானவர்கள் எச்சரிக்கையாக தனி நபர் இடைவெளி கடைப்பிடித்தால் ஆபத்தைத் தவிர்க்கலாம்; பிறருக்கு இந்த நோயால் அபாயம் இல்லை.
மக்கள் அனுபவிக்கும் இன்னல்கள்
இந்த நாற்பது நாட்கள் ஊரடங்கை முப்பது சதவிகித அன்றாட வருவாய் நம்பி வாழும் மக்கள், தனி நபர் தொழில்முனைவோர், உதிரி வியாபாரிகள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு கடந்துவிட்டார்கள். அரசாங்கம் தரும் உணவு தானியங்களும், மாதம் 1,000 ரூபாய் என்ற உதவித்தொகையும் அவர்களுக்குப் போதுமானதாக இல்லை என்பதுடன் அவர்கள் அனைவருக்கும் அது கிடைக்கவும் இல்லை. ஏராளமானோர் நிலையான இருப்பிடமும், குடும்ப அட்டைகளும் இல்லாமல் இருக்கிறார்கள். தன்னார்வலர்கள், சேவை அமைப்புகள், அரசியல் கட்சிகள் பரவலாக உதவிகளைச் செய்தும் வாழ்வாதாரத்தை இழந்து வாடுபவர்கள் பலர்.
உதாரணமாக பத்திரிகையாளர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது தரமணி அருகே சாலையின் ஓரத்தில் சுருண்டிருந்த ஒருவர் உணவு கேட்டு சைகை செய்துள்ளார். இவர் உணவை வாங்கிக்கொடுத்தபோது அவருடன் மற்றொருவரும் இருப்பதைக் கண்டு அவருக்கும் கொடுத்துள்ளார். முதலில் கேட்டவர் விழுப்புரத்தைச் சேர்ந்தவர், கடற்கரையில் வேடிக்கைக்காக குதிரை சவாரி செய்விக்கும் வேலை பார்த்துள்ளார். அந்த வருமானம் இல்லாமல் போக செய்வதறியாது வீதியில் வசித்து, யாசித்து வருகிறார் போல. மற்றொருவர் மொழியே தெரியாத வடமாநில புலம்பெயர் தொழிலாளி. அவருக்குப் பசி என்று மட்டும்தான் புரிகிறது. இதுபோல ஆயிரக்கணக்கான கதைகள் எல்லா ஊர்களிலும்.
இந்த வறியோர் துயர் துடைப்பதற்கு மத்திய மாநில அரசுகளால் இயலவில்லை என்பதை நாம் நாற்பது நாட்களில் தெளிவாக அனுபவ ரீதியாகக் காண்கிறோம். ஊடகங்களும் விரிவாகப் பதிவு செய்துள்ளன. “இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின், கெடுக இவ்வுலகு இயற்றியான்” என்றோ, “தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்” என்றோ சான்றோர் வாக்கினை படித்ததில் பயனில்லை. மத்திய அரசு எத்தனை பொருளாதார நிபுணர்கள் சொன்னாலும், பிடிவாதமாக அனைத்து ஏழைக்குடும்பங்களுக்கும் குறைந்தபட்ச மாத ஊதியம் வழங்கவோ, இருப்பில் இருக்கும் உணவு தானியங்களைக் கொண்டு பசிப்பிணி தீர்க்கவோ எந்த முயற்சியும் செய்யப்போவதில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.
எதேச்சதிகார அணுகுமுறையின் இயல்பாக்கம்
இந்தியா குடியரசாகி எழுபது ஆண்டுகள்தான் ஆகின்றன. மக்களுக்கு என்று அடிப்படை உரிமைகள் உண்டு, அவற்றில் அரசு தலையிட முடியாது என்ற லட்சியபூர்வமான மக்களாட்சி அமைப்பு ஏற்பட்டு நாலாவது தலைமுறை ஓட்டளிக்கும் வயதுக்கு வருகிறது. மக்களின் அடிப்படை உரிமையான சுதந்திரமாகச் செயல்படும், விரும்பிய தொழில் செய்யும் உரிமை, வழிபாட்டுக்கான உரிமை, கலாச்சார செயல்பாடுகளுக்கான உரிமை ஆகிய அனைத்தும் இந்த மக்களாட்சி அமைப்பின் ஆதார அம்சங்கள்.
அரசு அந்த அடிப்படை உரிமைகளைப் பறிப்பது, மக்கள் நடமாட்டத்தைத் தடை செய்வது போன்றவற்றை கடும் நெருக்கடி நிலைகளில் மட்டுமே அரசு மேற்கொள்ள வேண்டும். அதுவும் குறுகிய காலத்துக்கு மட்டுமே மேற்கொள்ள வேண்டும். கொரோனா தொற்று எத்தனை நாட்கள் நீடிக்கும் என்று தெரியாத நிலையில் அரசு மக்களின் சுதந்திர இயக்கத்தை முற்றிலும் தடை செய்யும்போக்கு மக்களாட்சியைக் கொன்று புதைப்பதற்குச் சமமானதாகும். கொரோனா நோயிலிருந்து அரசால் மக்களைக் காப்பாற்ற இயலாது; அது இயற்கையின் கையில் இருக்கிறது. கொரோனா கிருமிகள் பெருகினால் அரசு அவற்றை கைது செய்யுமா அல்லது பீரங்கியால் தாக்குமா அல்லது அணுகுண்டு போட்டு அழிக்குமா? அரசு மக்களுக்கு சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதன் மூலம்தான் பாதுகாப்பு வழங்கமுடியுமே தவிர, நோயை எதிர்த்து அழிப்பதெற்கெல்லாம் அரசிடம் எந்த போர்த்தளவாடமும் கிடையாது, ஆற்றலும் கிடையாது.
மத்திய மாநில அரசுகள் தாங்கள் விரும்பியபடியெல்லாம் கெடுபிடிகளை விதிக்கின்றன. மத்திய அரசு மாநில அரசுகளை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்காமல் சட்டாம்பிள்ளைத்தனம் செய்கிறது. மாநிலங்களுக்குச் சேர வேண்டிய நிதிப்பங்கீட்டை வேண்டுமென்றே தர மறுக்கிறது.
மாநில அரசுகளோ அவர்கள் நினைத்தபடியெல்லாம் ஊரடங்கைத் தீவிரப்படுத்துவது, தளர்த்துவது என்று செயல்படுகிறார்கள். மளிகைக்கடைகள் ஒரு மணி வரை திறக்கலாம் என்கிறார்கள். இரண்டு மணி வரை என்கிறார்கள். ஒரு சிறிய மளிகைக்கடையோ, டீக்கடையோ, செல்போன் கடையோ ஒரு தெருவில் திறந்திருந்து வியாபாரம் செய்துவிட்டால் கொரோனா தொற்றிவிடுமா? அவரவர் உடல்நலத்தில் அக்கறையுடன் சமூக இடைவெளி விட்டு செயல்பட மாட்டார்களா? அவர்கள் நினைத்தால் பேக்கரிகள் இயங்கும் என்கிறார்கள், இறைச்சிக் கடை இயங்காது என்கிறார்கள். இதற்கெல்லாம் என்ன அடிப்படை என்று யாருமே கேட்க இயலவில்லை.
இந்த எதேச்சதிகார போக்கு மாவட்ட நிர்வாகம், காவல் துறையின் அனைத்து மட்டங்களிலும் பரவியுள்ளது. அவர்கள் நினைத்தால் யாரை வேண்டுமானால் மிரட்டுகிறார்கள். குடிமக்களைக் கடுமையாக அவமதிக்கிறார்கள். சிறுபிள்ளைத்தனமான அச்சுறுத்தல் நாடகங்கள் நடத்தி தொலைக்காட்சிகளில் காட்டி மகிழ்கிறார்கள். ஊரகப் பகுதிகளில் வயற்காட்டிலெல்லாம் ட்ரோன் கேமராக்களில் கண்காணிக்கிறார்கள். பொழுதுபோகாமல் கிரிக்கெட் விளையாடும், கேரம் விளையாடும் சிறுவர்களை விரட்டுகிறார்கள். மிரட்டுகிறார்கள். சாதாரண நடவடிக்கைகளே கிரிமினல் நடவடிக்கைகளாக மாறிவிட்டன.
மக்களின் அடிப்படை உரிமைகள் என்பதே அரசு போடும் பிச்சை என்ற நிலையினை உருவாக்கி வருகிறார்கள். இது மக்களாட்சியின் மாபெரும் பின்னடைவு; இதன் விளைவுகள் பாரதூரமாக இருக்கும். எதிர்க்கட்சிகளும் இவற்றை கண்டிக்காமல் நோய்த்தொற்று குறித்த பீதியில் அரசு என்ன வேண்டுமானால் செய்யலாம் என நினைக்கின்றன போலும். மக்கள் உரிமைகளைக் குறித்து பேசுவதற்கு நாதியில்லை.
இந்த அதிகாரப் பித்து குடியிருப்போர் நலச் சங்க நிர்வாகிகளையும், ஏன் ஓர் அங்காடி காவல்காரரைக் கூட பிடித்தாட்டுகிறது. அடுக்குமாடி குடியிருப்புகளில் சங்க நிர்வாகிகள் சிறை வார்டன்களைப் போல அதிகாரம் செய்கிறார்கள். வீட்டு வேலை செய்பவர்களை அனுமதிக்க மறுக்கிறார்கள். விருந்தினர்களை அனுமதிக்க மறுக்கிறார்கள். புதிய புதிய கட்டுப்பாடுகளை விதித்து குட்டி ஹிட்லர்களாகி மகிழ்கிறார்கள். ஓர் அங்காடி காவல்காரர் காய்கறி வாங்கும் பெண்மணியைத் தேவையின்றி மிரட்டுகிறார். எதேச்சதிகாரப் பித்து எங்கும் பரவுகிறது. காரணம் நோய் குறித்த பீதி.
நோய்த் தொற்று பீதியில் பாழாகும் சமூக நல்லிணக்கம்
பேருந்திலோ, ரயிலிலோ போகும்போது ஒரு பணக்காரர், பெரிய மனிதர் தும்மல் போட்டால் “பரவாயில்லை, நோ பிராப்ளம்” என்று பல்லிளிப்பவர்கள், ஒரு கசங்கலுடை ஏழை தும்மினால் அவரை எரித்துவிடுவதுபோல் பார்ப்பார்கள்; நகர்ந்து அமரச் சொல்வார்கள். சமூக விலக்கம், தனி நபர் இடைவெளி என்ற பெயரில் தீண்டாமை மீண்டும் புதிய பிறப்பெடுத்து வரும் சாத்தியங்களை நாம் கண்ணுற்று வருகிறோம். தினமலர் நாளேடு வெளிப்படையாகவே கொரோனா நோய்த்தடுப்பையும், தீண்டாமையையும் தொடர்புபடுத்தி, தீண்டாமை இப்போது தேவையாகிவிட்டது எனக் கருத்து வெளியிட்டது.
கொரானாவால் இறந்த மருத்துவர்களை தங்கள் பகுதியில் அடக்கம் செய்யக் கூடாது என்று மக்கள் போராடியது பெரும் அதிர்ச்சியை மருத்துவத் துறையில் ஏற்படுத்தியது. வேறு காரணங்களால் இறந்த ஒரு மருத்துவரின் சடலம் ஊருக்குள் வரக்கூடாது என மக்கள் தடுத்ததாகச் செய்திகள் வந்தன.
டெல்லி, சென்னை போன்ற பெருநகரங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளிலும், கேட்டட் கம்யூனிட்டி எனப்படும் பொது போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் நுழைவாயில்களைக் கொண்ட குடியிருப்புப் பகுதியிலும் வேலை செய்பவர்கள், சிறு வியாபாரிகள், சேவைகள் தருபவர்களை அனுமதிக்க மறுக்கிறார்கள். வெகுநாட்களாக அந்தப் பகுதியில் புழங்கி வருபவர்கள் திடீரென அனுமதி மறுக்கப்பட்ட அதிர்ச்சியில் மனம் வெதும்பி நிற்கிறார்கள். அவர்களெல்லாம் நோய்க்கிருமிகளை தாங்கிய மனித வெடிகுண்டுகள் போல பார்க்கப்படுகிறார்கள்.
கொரோனா நோயின் தாக்கத்துக்கும், அதனால் உருவாகியுள்ள பீதிக்கும் தொடர்பேயில்லாமல் இருக்கிறது. இதன் மிகப் பயங்கரமான விளைவுகளில் ஒன்று நோய்த்தொற்று இருக்கலாமா என்று சந்தேகிப்பவர்கள்கூட ரகசியமாக நோய்க்கு சிகிச்சை செய்துகொள்ள நினைப்பது. ஏனெனில் ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு நோய் வந்தால் அந்த குடும்பமே விலக்கி வைக்கப்படும் அபாயம் இருக்கிறது. அடுத்தவர்களை நம்பி வாழ்பவர்கள், அத்தகைய நிலைக்கு ஆளாக முடியாது என்பதால் அவர்கள் தானாகவே நோய் சரியாகப் போகும் என்ற நம்பிக்கையில்தான் இருப்பார்கள். அரசின் பயங்கர பிரச்சாரத்தால் கொரோனா நோயை ஏதோ எய்ட்ஸ் நோய் போல சமூக இழிவுள்ளதாகப் பார்க்கும் பழக்கம் பரவத் தொடங்கியுள்ளது. உடனடியாக அரசும் ஊடகங்களும் இந்த நோய் ஆபத்தற்றது, நோய் வருபவர்களெல்லாம் செத்துவிட மாட்டார்கள், இந்த நோய் வந்தவர்களை சமூக விலக்கம் செய்யக் கூடாது என்றெல்லாம் கடுமையாகப் பிரச்சாரம் செய்யாவிட்டால் மிக மோசமான சமூக பின்விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்.
தேவையா மேலும் ஊரடங்கு?
இந்த நிலைக்கு மேல் மக்களாகப் பார்த்து அவர்கள் நடவடிக்கைகளை ஒழுங்கு செய்து கொள்ள அனுமதிப்பதும், பொருளாதாரத்தை மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப தேவையான உதவிகளைச் செய்வதும், நோயால் தீவிரமாக பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்வதுமே அரசாங்கங்கள் செய்ய வேண்டியவை. ஊரடங்கு என்பது ஓர் அசாதாரணமான, அதிகபட்ச நடவடிக்கை. அதை சர்வசாதாரணமாக அரசாணையின் மூலம் இரண்டு வாரங்கள் நீடிக்கும் நிலை மக்களாட்சியின் அடிப்படைகளையே தகர்ப்பதாகும். அரசிடம் அத்துணை அதிகாரங்கள் குவிவது கொரோனா நோயை விட பன்மடங்கு விபரீதமானது.
கட்டுரையாளர் குறிப்பு

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com