டி.எஸ்.எஸ்.மணி
உள்ளாட்சி என்பது, இந்தியாவின் கிராமங்களில் உள்ள மக்கள் தங்களை ஆள்வதற்காக, ஒரு பிரதிநிதியை தங்கள் கிராமத்திலிருந்து தாங்களே தேர்வு செய்து கொள்ளுதல். 1992 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், அதற்கான 73 வது சட்டத் திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. அதை ‘பஞ்சாயத் ராஜ்’ என்று அழைக்கிறார்கள்.
தமிழில் நாம் ‘ஊராட்சி அதிகாரம்’ என்று அழைக்கலாம். அந்த சட்டத் திருத்தம், 1993 ஆம் ஆண்டு ஏப்ரலில் அமுலுக்கு வந்தது. அதேபோல, 1992 ஆம் ஆண்டே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 74 வது சட்டத் திருத்தமான, ‘நகர்ப்பாலிகா’ நகராட்சிகளின் உள்ளாட்சி அதிகாரத்திற்கானது. அது 1993 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அமுலுக்கு வந்தது. ஊராட்சி சட்டத்தின் கீழ் இப்போது தமிழ்நாட்டில் நடத்தப்படும் தேர்தலை, ஊரக உள்ளாட்சி தேர்தல் என்று அழைக்கிறோம்.
தமிழ்நாடு அரசாங்கம்,கலந்தாலோசித்த பிறகு, தமிழ்நாடு தேர்தல் ஆணையம், அவர்களுக்கே தெரிந்த காரணங்களுக்காக ஊரக உள்ளாட்சி தேர்தலையும், நகராட்சி சட்டத்தின் கீழான தேர்தலையும் பிரித்து நடத்தும் நிலையை எடுத்துள்ளார்கள். அதாவது நகராட்சி சட்டத்தின் கீழே வருகின்ற, பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகள் ஆகியவற்றிற்கு பின்னால் தேர்தல் நடத்தப்படும். தற்போது, முதலில், ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்கும். அதுவும் இரண்டு கட்டங்களாக நடக்கும். அதுவே மாநில தேர்தல் ஆணையத்தின் முடிவு.
இவற்றின் மூலம் நிறுவப்படும் அதிகாரம், சுய அரசாங்கம் என்று அழைக்கப்படுகிறது. இப்படியொரு பிரித்து நடத்தும் போக்கு எதற்காக? நகராட்சி தேர்தலை சேர்த்து நடத்தினால், எதிர்க்கட்சிகள் அதிக இடங்களை பிடித்து விடுவார்கள் என்பதனால் இருக்கலாம். ஊரக தேர்தல்களில் தங்களுக்கு சாதகம் அதிகம் என்று கிடைத்த தகவல்களுக்குப் பிறகு, ஆளும் கட்சி எண்ணியிருக்கலாம். ஆனாலும் உள்ளாட்சி தேர்தல்கள், மக்கள் மத்தியில், அதிகார பரவலாக்கலுக்கு உதவக் கூடியவை. மூன்று ஆண்டுகள் தாமதமானாலும், வந்ததே இப்போதாவது என்று எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.
ஆனாலும், ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள, சட்டப் பேரவையில், மேற்கண்ட 73 மற்றும் 74 சட்டத் திருத்தங்களை, அமுல்படுத்த ஒவ்வொரு மாநிலச் சட்டம் இயற்ற வேண்டும். அதில், ஊரக உள்ளாட்சிகள் மாவட்ட ஆட்சியரின் அதிகாரத்திற்கு உட்பட்டவையாக ஆக்கப்பட்டன. இப்போது நடந்து வரும் ஊரக உள்ளாட்சி தேர்தல்கள், ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கும், அந்த மன்றங்களில் உள்ள உறுப்பினர்களுக்கும், கட்சி சார்பற்ற முறையில் நடத்தப்படும் என்றும், அதே சமயம், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்களுக்கும்,, மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களுக்கும், கட்சிகள் சார்ந்த தேர்தல்களாக நடத்தப்படும் என்றும் பிரித்திருக்கிறார்கள்.
அதனால்தான், ஒவ்வொரு தேர்வுக்கான வாக்குக்கும், வெவ்வேறு வண்ணங்களில், வாக்குச் சீட்டுகள் கொடுக்கப்பட்டு, வாக்குப் பதிவுகள் நடைபெறுகின்றன. ஊராட்சி உறுப்பினர்கள், ஊராட்சித் தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் ஆகிய நான்கு தேர்தல்கள், முறையே, வெள்ளை, இளம் சிவப்பு, பச்சை, மஞ்சள் என்ற நிறங்களில் உள்ள வாக்கு சீட்டுக்கள் மூலம் ஒவ்வொரு வாக்கு சாவடியில் நடைபெறுகிறது.
இதில், ஊராட்சித் தலைவர்களுக்கும், ஊராட்சி உறுப்பினர்களுக்கும் நடக்கின்ற, கட்சி சார்பற்ற முறையிலான தேர்தல் என்பதில், வாக்காளர்கள் அனைவரும் முழுமையாக பங்களிப்பு செலுத்துகிறார்கள். அந்த அளவுக்கு எந்த தேர்தலிலும் அனைத்து வாக்காளர்களும் ஈடுபாடு காட்டுவதில்லை. ஏன் என்றால் அது அவர்கள் கண் முன்னால் நடக்கும் அதிகாரத்திற்கான தேர்தல் அதாவது தங்களின் பிரதிநிதியை அவர்களே கண் முன்னால் தேர்வு செய்யும் தேர்தல். அதில் தேர்ந்தெடுக்கப்படும் நபரும் அவர்களுடைய அன்றாட வாழ்க்கையில் ஊடாடும் நபராக அன்றாடம் சந்திக்கக்கூடியவராக, அவர்களது ஊராட்சியிலேயே வசிப்பவராக இருப்பார். மற்றபடி, ஊராட்சி ஒன்றியங்களிலோ, மாவட்ட ஊராட்சிகளிலோ, தேர்வு செய்யப்படும் உறுப்பினர்களோ, அந்த உறுப்பினர்கள் மூலம் ஊராட்சி ஒன்றியத்திற்கும்,, மாவட்ட ஊராட்சிக்கும் தேர்வு செய்யப்படும் தலைவர்களோ, ஊராட்சிகளில் வாழ்கின்ற மக்களுடைய நெருக்கத்தில் தென்பட மாட்டார்கள்.
சட்டமன்ற உறுப்பினர்களை பற்றியோ, மக்களவை உறுப்பினர்களை பற்றியோ, கேட்கவே வேண்டாம். அவர்கள் அநேகமாக வாக்காளர்களுக்கு தெரியாதவர்களாகவே இருப்பார்கள். ஆகவே கிராமப்புற மக்களை பொறுத்தவரை, ஊராட்சி தலைவர்களும், உறுப்பினர்களும் தான் ,தங்களுடைய நேரடி பிரதிநிதிகள். அதனால் தான், நடைபெற்று வரும், ஊரக ஊராட்சி தேர்தலில் முழு தேர்தலும், ஊராட்சி தலைவர்களை மையப்படுத்தியே நடக்கிறது.

இந்த இடத்தில், ஆயிரத்திற்கு மேற்பட்ட ஊராட்சிகளில் தலைவர் பதவியை ஏலம் விடுகிறார்களே? இது சரியா? என்ற கேள்வி எழுகிறது. சரியில்லைதான். அடிப்படை ஜனநாயகம் என்று நாம் அழைக்கும், ஊராட்சிகளில் தேர்தலை காசுக்கு விலை பேசுவது தவறுதான். ஆனாலும், அரசியல் கட்சிகள், ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் கொடுக்கும் லஞ்சமும், இந்த கிராமங்களில் ஏலம் விடப்படுவதும் ஒன்றா?. ,ஒவ்வொரு வாக்காளர்களுக்கும், அரசியல் கட்சிகள், எம்.எல்.ஏ. தேர்தலுக்கோ, எம்.பி. தேர்தலுக்கோ, மாநகராட்சி உறுப்பினர் தேர்தலுக்கோ, நகராட்சி உறுப்பினர் தேர்தலுக்கோ, பேரூராட்சி உறுப்பினர் தேர்தலுக்கோ, லஞ்சம் கொடுத்து வாக்கு கேட்கிறார்கள். அது, காசை வாங்கிக் கொண்டு வாக்கை போடு. நான் அதிகாரத்திற்கு வந்து கொள்ளை அடித்துக் கொள்கிறேன் என்று பேசி பரிமாற்றம் செய்வதாக ஆகிறது.
அதாவது ஒவ்வொரு வாக்காளர்களும் தங்களது வாக்குகளை விற்கிறார்கள். அது மிக கேவலமான ஒரு செயல். ஆனால் இந்த ஊராட்சிகளில், ஊர் மக்கள் கூடி, தங்களுக்குள்ளே ஒருவரை, ஊருக்கு பணம் கட்டக் சொல்லி , தேர்வு செய்கிறார்கள். இங்கே தனிநபர் பலன் பெறும் இடத்தில், ஊர் பணம் பெறுகிறது. இதை கூட்டு லஞ்சம் என்று அழைப்பதா? கூட்டு பேரம் என்று அழைப்பதா? .வருகிற பணம் ஊருக்கு தான் வருகிறது. ஊருக்கு பிற்காலத்தில் ஏதாவது தேவை வரும்போது, அந்தப் பணம் பயன்படும் எனக் கருதுகிறார்கள். தவறைச் செய்தாலும் இங்கே கூட்டாக செய்கிறார்கள்.
இது மக்கள் தாங்களே தங்கள் ஊருக்காக ஏற்படுத்திக் கொண்ட விதியாகத் தெரிகிறது. ஜனநாயக கடமை, ஊராட்சி அதிகாரம் ஆகியவை பற்றிய தொடர் கிராம சபைகளின் கூட்டங்கள் கூட, இதுபோன்ற தவறுகளை இழைக்காமல் மக்களை மாற்றி யோசிக்க வைக்க உதவலாம்.ஆனால் அரசியல்வாதிகள், தங்கள் கட்சி வேட்பாளர்களுக்காக, லஞ்சம் கொடுக்கும் செயலை எப்படியும் நீங்கள் தவிர்க்க முடியாது என்று ஆகி வருகிறதே?
அடுத்து, ஊராட்சிகளில் உள்ள கட்சி சார்பற்ற தேர்தல்கள் மூலம் தேர்வாகும் கட்சி சார்பற்ற வேட்பாளர்களை தங்கள் கட்சிக்கு ஆதரவாக திருப்ப முயற்சிக்கும், அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள் வருகின்றன.. தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பே, தேர்தல் நேரத்திலேயே, ஊராட்சித் தலைவர் என்ற கட்சி சார்பற்ற பதவிக்கான தேர்தலாக மாநில தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டிருக்கும் நபரை, பெரிய அரசியல் கட்சிகள்,தங்கள் கட்சி வேட்பாளராக அறிவித்து வாக்கு கேட்கும் அவல நிலை நடந்து வருகிறது.
ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்களுக்கும், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களுக்கும் , தங்கள் கட்சியின் சின்னத்தில் நிறுத்தியிருக்கும் வேட்பாளர்களுக்கு வாக்கு கேட்கும் பரப்புரையில், அந்த வட்டாரத்தில் உள்ள ஊராட்சி தலைவர்களின் பெயர்கள் சிலவற்றையும் சேர்த்து பரப்புரை செய்து, தங்களது கட்சி வேட்பாளர் போல அவரை ஆக்கி விடும் அரசியல் இங்கே நடந்து வருகிறது. இது உண்மையில், கட்சி சார்பற்ற ஊராட்சிகளை உருவாக்க எண்ணும் தேர்தல் ஆணைய விதிகளை உடைக்கும் அங்ககீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் அத்து மீறலே!
ஏன் இவ்வாறு அடிப்படை ஜனநாயக அலகுகளான ஊராட்சிகளையும் கட்சி அரசியலால், அசிங்கப்படுத்துகிறார்கள் என்றால், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட பெரிய கட்சிகளும், மேலிருந்து (நகரங்களிலிருந்து} உருவாக்கப்பட்டு, மேலிருந்து செயல்படுத்தப்பட்டு, மேலிருந்து இறக்கி விடப்படும், தன்மை கொண்டவை.. அவை கீழிருந்து உருவாகும் அடிமட்ட ஜனநாயகத்தை உள்வாங்க வேண்டிய அவசியமில்லாமல் இருக்கின்றன.ஆகவே அரசியல் கட்சிகளை மேலிருந்து திணிக்கப்படும் கட்சிகள் என்று கூட அழைக்கலாம். சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல் நேரங்களில், நம் இதை பார்ப்பது உண்டு. கிராமங்களில், உயிர்ப்புடன் இல்லாத பெரிய கட்சிகள் கூட, பண மூட்டைகளுடனும், சாராய மூட்டைகளுடனும் தேர்தல் நேரத்தில், தாய் கிராமங்களில் வந்து இறங்கிக் கொண்டு, ஊர், ஊராக வாகனங்களில் சென்று, தொண்டர்களை தேர்தல் காலத்திற்காக உருவாக்குவார்கள்.

மேற்கண்ட நடைமுறை, இந்திய நாடாளுமன்ற தேர்தல் முறையில் உள்ள இடைவெளியால் எழுகிறது என்று கொள்ளலாமா? இங்கே விகிதாச்சார முறையிலான தேர்தல் இல்லாததால், அடிமட்டத்தில் இருக்கும் மக்களுக்கான ஜனநாயக பிரதிநிதித்துவம் இல்லாமலேயே போகிறது என்று எடுத்துக் கொள்ளலாமா? தேர்தல் சீர்திருத்தங்கள் பற்றி அவ்வப்போது பேசிவிட்டு, ஓய்ந்து விடுகிறோமே? இதைப் பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டாமா?
