வாக்குப் பெட்டிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது.
தமிழகத்தில் 10 மாவட்டங்களைத் தவிர்த்து 27 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சிப் பகுதிகளுக்கான தேர்தல் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி முதற்கட்டத் தேர்தல் வாக்குப் பதிவு இன்று (டிசம்பர் 27) காலை 7 மணி முதல் தொடங்கி நடந்துவருகிறது.
இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக திமுக சார்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார். அதில், “ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சித் தலைவர், ஒன்றிய குழு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஆகிய நான்கு பதவிகளுக்கு பதிவாகும் வாக்குகளும் ஒரே பெட்டியில் போடப்பட்டு, அவை வாக்கு எண்ணிக்கையின்போது தனித்தனியாக பிரித்து எண்ணப்படும். அதில் ஏதும் முறைகேடுகள் ஏற்படாத வகையில், தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் விதிமுறைகள் முழுவதும் கட்டாயமாக பின்பற்றப்பட வேண்டும். வாக்கு எண்ணிக்கை முடியும் வரை உரிய காவல் பாதுகாப்பு வழங்க வேண்டும். சிசிடிவி கேமரா மூலமாக அனைத்து நடைமுறைகளும் கண்காணிக்க வேண்டும் என தமிழக தேர்தல் ஆணையம், டிஜிபி, கலெக்டர்கள், எஸ்.பி.க்கள் ஆகியோருக்கு உரிய உத்தரவுகள் பிறப்பிக்க வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வழக்கு வரும் 30ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.
