சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல், மிளகுப் பொங்கல் எனப் பல வகைப்படும் தமிழர்களின் பாரம்பரிய உணவு வகைகளில் ஒன்றான பொங்கலை ஒதுக்குபவர்களும் உண்டு. அப்படிப்பட்டவர்கள் சத்தான இந்த சாமைப் பால் பொங்கல் செய்து சாப்பிடலாம். சாமையில் இரும்புச்சத்து, செலீனியம், துத்தநாகம், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. வயிற்றுப்புண்களை ஆற்றும். உடல் எடையை அதிகரிக்க விரும்புபவர்கள் இதை அடிக்கடி சாப்பிடலாம்.
என்ன தேவை?
சாமை அரிசி – ஒரு கப்
பால் – 3 கப்
நெய், பாசிப்பருப்பு – தலா 2 டேபிள்ஸ்பூன்
மிளகு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன்
முந்திரி – 6
உப்பு – தேவையான அளவு
இஞ்சித் துருவல் – ஒரு டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
குக்கரில் நெய் விட்டு சூடானதும் மிளகு, சீரகம், இஞ்சித் துருவல், முந்திரி, கறிவேப்பிலை போட்டு, பால் சேர்க்கவும். கொதிவரும்போது அரிசி, பருப்பு போட்டு உப்பு சேர்த்துக் கிளறி மூடிவிடவும். நான்கைந்து விசில் விட்டு, குழைய எடுத்துப் பரிமாறலாம். தண்ணீருக்குப் பதில் பால் சேர்ப்பதால், சுவை கூடும்.